Published:Updated:

செந்தில் பாலாஜிக்கு செக்! வளைக்கும் வழக்குகள்

டெல்லியிலிருந்து ஏற்கெனவே எங்களுக்கு வந்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீதான விவகாரங்களைத் தொடர்ந்து கண்காணித்தோம்.

பிரீமியம் ஸ்டோரி

அ.தி.மு.க ஆட்சியில் போயஸ் தோட்டத்துக்கு செல்லப்பிள்ளை செந்தில் பாலாஜி. தி.மு.க ஆட்சியிலும் வலுவான இடத்தைப் பிடித்துக்கொண்டார். அதனாலேயே, அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் கச்சைகட்டிய வண்ணமிருக்கின்றன. தி.மு.க-வின் சீனியர்களே கட்சித் தலைமையிடம், “எங்களுக்கு என்ன துறையை ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்கத் தயங்கிய நேரத்தில், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறைகளைப் போகிறபோக்கில் தட்டிச்சென்றவர் செந்தில் பாலாஜி. இதனால், தி.மு.க சீனியர்களின் மனதிலேயே சீற்றத்தை ஏற்படுத்தியவர். இப்படி அரசியலில் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு, அமலாக்கப் பிரிவால் அச்சுறுத்தல் வந்திருப்பதுதான் தமிழக அரசியலின் அனல் டாபிக்!

செந்தில் பாலாஜிக்கு செக்! வளைக்கும் வழக்குகள்

டார்கெட் செந்தில் பாலாஜி... ஆக்‌ஷனில் அமலாக்கப் பிரிவு!

2011 முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, தனது துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக மூன்று வழக்குகளை தமிழகக் காவல்துறையினர் பதிவுசெய்தனர். இவற்றில், ஒரு வழக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “எங்களுடைய பணத்தை செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து பதில் மனு தாக்கலானது. செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசு தரப்பு எந்த எதிர்வாதமும் வைக்கவில்லை என்பதால், இந்த ஒரு வழக்கை முடித்துவைப்பதாக அறிவித்தது உயர் நீதிமன்றம். மீதமுள்ள இரண்டு பண முறைகேடு வழக்குகள் நிலுவையில்தான் உள்ளன. இந்த இரண்டு வழக்குகளையும் இப்போது அமலாக்கப் பிரிவு கையில் எடுத்திருப்பதுதான் பரபரப்புக்குக் காரணம். ‘லஞ்சம் கொடுப்பதும் தவறு. லஞ்சம் வாங்குவதும் தவறு’ என்று அரசியல் சாசனம் சொல்கிறது. ஆனால், ‘வாங்கிய லஞ்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டால், அது குற்றமாகாதா?’ என்கிற விமர்சனங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை ஒட்டி எழுந்தன. விமர்சனத்துக்கு பதில் சொல்லும் விதமாகத்தான் அமலாக்கப் பிரிவு, ‘சட்டவிரோதப் பணப்பரிமாற்ற’ வழக்கொன்றை செந்தில் பாலாஜி மீது பதிந்து ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறது. இதனால், ஆடிப்போயிருக்கிறது ஆளும் தரப்பு.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தோம். “டெல்லியிலிருந்து ஏற்கெனவே எங்களுக்கு வந்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீதான விவகாரங்களைத் தொடர்ந்து கண்காணித்தோம். பண மோசடி வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதும், டெல்லியிலிருந்து மற்றோர் உத்தரவு வந்தது. அதன் அடிப்படையில்தான் எங்கள் தரப்பிலிருந்து இந்த வழக்கு அவர்மீது பதியப்பட்டது.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கரூர் பகுதியில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளில் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றில் செந்தில் பாலாஜி தரப்புக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிந்தது. அந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை, எங்களிடம் அளித்தது. அதன் அடிப்படையிலும் ஒரு வழக்கு எங்கள் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறது. இந்த வழக்குகளின் அடிப்படையில் முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. மேலும் விசாரணையில், இந்தத் தொகையில் மாற்றங்கள் வரலாம்.

தமிழக குற்றப்பிரிவுக் காவல்துறையிடம், செந்தில் பாலாஜி மீது நிலுவையிலிருக்கும் இரண்டு பண முறைகேடு வழக்கு தொடர்பான விவரங்களையும் கேட்டிருக்கிறோம். அமலாக்கப் பிரிவு மதுரை உதவி இயக்குநர் தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது” என்கிறார்கள். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ஆகஸ்ட் 9-ம் தேதி செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவுசெய்தனர். அவரை ஆகஸ்ட் 11-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினார்கள். ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால் விசாரணைக்கு ஆஜராக, தனக்கு ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு அமலாக்கப் பிரிவிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

பின்னணியில் டெல்லி பயணம்... கஜானாவை நிறைத்தது காரணம்!

அமலாக்கப் பிரிவின் இந்த திடீர் ஆக்‌ஷன் குறித்து பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்தோம். “அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், செந்தில் பாலாஜியின் அரசியல் எதிரியுமான எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் குறிவைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதை அ.தி.மு.க தலைமை ரசிக்கவில்லை. ரெய்டு நடந்தவுடனேயே அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒருசேர டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். அப்போது, ‘நமது கூட்டணி தமிழகத்தில் இன்னும் அதிகமான தொகுதிகளை வென்றிருக்கும். அது தடுக்கப்பட்டதில் செந்தில் பாலாஜி செய்த பசையான பணியும் ஒரு காரணம். மதுபான நிறுவனம் மூலம், செந்தில் பாலாஜி தி.மு.க தேர்தல் பட்டுவாடா விஷயங்களை கவனித்துக்கொண்டார். இதே பாணி தொடர்ந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது கூட்டணிக்குப் பெரும் சரிவு ஏற்படும்’ என்று நாசுக்காகச் சொன்னார்கள். பிரதமரைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த அ.தி.மு.க தலைவர்கள், செந்தில் பாலாஜி மீது நிலுவையிலிருக்கும் வழக்கு விவரங்கள் அடங்கிய ஃபைலைக் கொடுத்தனர். அமித் ஷா மூலம் அந்த ஃபைல் அமலாக்கப் பிரிவுக்குச் சென்றது.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடப்பாடி தரப்பு இவ்வளவு சூடாகக் காரணம், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க -வை பலவீனப்படுத்தும் வேலையை செந்தில் பாலாஜி முன்னின்று செய்வதால்தான். தமிழக அரசியலில் கோலோச்சிய டெல்டா மாவட்டக் குடும்பத்தினருக்குச் சொந்தமான மதுபான ஆலையின் வழியாக, மூன்று இலக்கத்தில் ஸ்வீட் பாக்ஸ்கள் தி.மு.க தலைமைக்கு வந்தன. அந்த ஸ்வீட் பாக்ஸ்கள்தான் தி.மு.க-வின் 80 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டன.இதற்குப் பிரதிபலனாகத்தான் மதுவிலக்குத்துறை செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்பட்டது. தங்களுக்கு எதிராக கஜானாவை நிரப்பிக்கொடுத்து, தங்கள் கட்சி நிர்வாகிகளையும் தி.மு.க-வுக்குள் இழுக்கும் வேலையையும் செந்தில் பாலாஜி துணிந்து செய்வதால் எடப்பாடி தரப்பு கடும் ஆத்திரத்தில் இருக்கிறது” என்றார்கள்.

செந்தில் பாலாஜிக்கு செக்! வளைக்கும் வழக்குகள்

பதவிக்கு நெருக்கடி... சீற்றத்தில் சீனியர்கள்!

எதிர்க்கட்சியின் சீற்றத்தையும் தாண்டி, ஆளுங்கட்சிக்குள்ளேயே செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள் தி.மு.க சீனியர்கள். கட்சிக்குள் நுழைந்தவுடனேயே மாவட்டப் பொறுப்பாளர், ஆட்சி அமைந்தவுடன் இரண்டு வளமான துறைகளுக்கு அமைச்சர் என்று தி.மு.க-வுக்குள் செந்தில் பாலாஜியின் கிராப் ராக்கெட் வேகத்தில் ஏறுவதை தி.மு.க-வின் சீனியர்கள் ரசிக்கவில்லை. கட்சி சீனியர்கள் பலருக்கும் டம்மியான துறையை ஒதுக்கிய முதல்வர், செந்தில் பாலாஜிக்குக் கொடுத்த முக்கியத்துவம் பலரையும் வெறுப்படைய வைத்திருக்கிறது.

“தி.மு.க தலைமையிடம் தன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளத் தீர்மானித்த செந்தில் பாலாஜி, ‘கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டுமெனில், அ.தி.மு.க-வில் வலுவாக இருக்கும் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் போன்றவர்களை முடக்க வேண்டும். அவர்களுடைய நிதி ஆதாரங்களைக் கட்டுப்படுத்தி வழக்குகளைப் பாய்ச்சினால் அந்தப் பகுதியில் அ.தி.மு.க சோர்வடைந்துவிடும்” என்று ஆலோசனை கொடுத்திருக்கிறார். இந்த ஆலோசனைக்கு தி.மு.க தலைமையும் அசைந்து கொடுப்பது, கொங்குமண்டல தி.மு.க சீனியர்களான அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி உள்ளிட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, கோவையில் செந்தில் பாலாஜி ஆதிக்கம் செலுத்த முயல்வதை அமைச்சர் சக்கரபாணி கொஞ்சமும் விரும்பவில்லை” என்கிறார்கள் கொங்கு மண்டல தி.மு.க-வினர்.

செந்தில் பாலாஜிக்கு முதல்வர் குடும்பம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கண்டு, கட்சிக்குள் பல சீனியர்கள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஆரம்பித்தவுடன், அதைவைத்து அவரது பதவிக்கு நெருக்கடியை உண்டாக்கும் வேலையில் தி.மு.க-வுக்குள்ளேயே ஒரு டீம் மும்முரமாகியிருக்கிறது.

செந்தில் பாலாஜிக்கு செக்! வளைக்கும் வழக்குகள்

செந்தில் பாலாஜி மீள்வது, லேசுபட்ட விஷயமல்ல!

“செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு ஆக்‌ஷனில் இறங்கியிருப்பது, முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜியிடம் முதல்வர் இந்த வழக்கு விவகாரம் குறித்து நேரடியாகப் பேசியிருக்கிறார். அப்போது, ‘உங்கள் தரப்பில் இன்னும் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சொல்லிவிடுங்கள். ஆட்சிக்குச் சிறிதளவு கெட்ட பெயர் வருவதையும் நான் ஏற்க மாட்டேன்’ என்றாராம் முதல்வர். நம்பிக்கையூட்டுகிறாரா, எச்சரிக்கிறாரா என்று புரியாமல் விழித்திருக்கிறார் செந்தில் பாலாஜி” என்றார்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக, தமிழக அமலாக்கப் பிரிவில், காலியாக இருந்த பணியிடங்களை வேகமாக நிரப்பியிருக்கிறது மத்திய அரசு. அதேபோல, வருமான வரித் துறையிலுள்ள சில அதிகாரிகளைக் கூடுதல் பொறுப்பாக அமலாக்கப் பிரிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து தமிழர்கள் அல்லாத அதிகாரிகளைத் தமிழக அமலாக்கப் பிரிவின் மூன்று மண்டலங்களுக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். ஏற்கெனவே நீதிமன்றங்களில் பல மூத்த தி.மு.க அமைச்சர்கள்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமைக் குடும்பம் தொடர்பான வழக்குகளும் மத்திய அரசின் கையில் இருப்பதால், அமலாக்கப் பிரிவு விவகாரத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று முதல்வரிடம் அறிவுறுத்தியிருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள். ‘அமலாக்கப் பிரிவின் வழக்கு வளையத்திலிருந்து செந்தில் பாலாஜி மீள்வது அவ்வளவு லேசுபட்ட விஷயமல்ல’ என்பதே முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் செய்தி.

“அ.தி.மு.க-வில் இருந்தபோதே பல சர்ச்சைகளில் சிக்கிய ஒருவருக்கு, தி.மு.க தலைமை இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன? என்ற தி.மு.க சீனியர்களின் கேள்விக்கே விடை இல்லை!” என்று புன்னகைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

செந்தில் பாலாஜிக்கு செக்! வளைக்கும் வழக்குகள்

*****

அண்ணாமலை கொடுக்கும் அழுத்தம்!

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தி.மு.க வீக்காக உள்ள கொங்குமண்டலத்தில் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி, பா.ஜ.க-வைக் காலூன்றவைக்க முனைப்பு காட்டுகிறார். அதேநேரம் அங்கு தி.மு.க-வை வலுப்படுத்த செந்தில் பாலாஜி காய்நகர்த்துகிறார். அதற்காக, கோவையில் ஒரு வீட்டையும் பார்த்திருக்கிறாராம் செந்தில் பாலாஜி. தேர்தல் நேரத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் வெடித்த மோதல், இப்போது அதிகார எல்லை மோதலாகத் தொடர்கிறது. இந்தநிலையில் செந்தில் பாலாஜி விஷயத்தில், அண்ணாமலையும் தன் பங்குக்கு டெல்லியில் அழுத்தம் கொடுப்பதாகக் கூறுகிறது பா.ஜ.க வட்டாரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு