Published:Updated:

`தொடக்கவிழாவுக்கு முன்பே இவ்வளவு அதகளமா?' - உள்ளூர் பிரமுகர்களால் கதிகலங்கும் செங்கல்பட்டு

செங்கல்பட்டு சார்ஆட்சியர் அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி சாலையில் புதிதாகக் கடைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு ஏகத்துக்கும் உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி சாலையில் அலங்கார வளைவுகள்
ஜி.எஸ்.டி சாலையில் அலங்கார வளைவுகள்

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 29-ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுப்பிக்கப்படும் சாலைத் தடுப்புகள்
புதுப்பிக்கப்படும் சாலைத் தடுப்புகள்

செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாகும் மாவட்டத்துக்கு ஜி.எஸ்.டி சாலையில் உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் 56.96 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேண்பாக்கத்தில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையத்திற்குட்பட்ட நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகம் சார்ந்த அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒப்பிடும்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாலுகாக்கள், சட்டமன்றத் தொகுதிகள், காவல்நிலையங்கள், தொழிற்சாலைகள், சுற்றுலாத்தளங்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக நிலம் வாங்கிப் போட்டவர்கள் குஷியாக இருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா ஏற்பாடுகள்
செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா ஏற்பாடுகள்

புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்படும் வரை செங்கல்பட்டு சார்ஆட்சியர் அலுவலகத்திலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படும். செங்கல்பட்டு சார்ஆட்சியர் அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி சாலைகளில் புதிதாகக் கடைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதிகளில் ஜெராக்ஸ், சிற்றுண்டி, பழச்சாறு கடைகளை வைக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு ஏகத்துக்கும் உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின் ஆகியோர் அடிக்கடி வந்து ஆய்வு செய்துவிட்டுச் செல்கின்றனர். வடக்கு நோக்கி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா ஏற்பாடுகள்
செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழா ஏற்பாடுகள்

சாலைகளில் அலங்கார வளைவுகள், கொடிக் கம்பங்கள், அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் பேனர்களும் லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாகவே அ.தி.மு.க-வினர் செழிப்போடு மாவட்ட ஆட்சியர் அலுவலப் பகுதிகளில் வலம் வருவதைக் காணமுடிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைகளை முடித்துக் கொடுப்பதற்காக இப்போதே இடைத் தரகர்கர்கள் பணிக்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

தொடக்கவிழா காணும் முன்பே களைகட்டியிருக்கிறது செங்கல்பட்டு!