Published:Updated:

ஒருநாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! - யார் தவறு... என்ன செய்ய வேண்டும் மாநில அரசு?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னை மழை
சென்னை மழை ( வி.ஶ்ரீனிவாசுலு )

சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிகள் மாறினாலும் மழையால் சென்னை பாதிக்கப்படும் நிலைமை மட்டும் இன்னும் மாறவில்லை. இதற்குக் காரணம் யார்?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டில் அக்டோபர் 26-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வலுப்பெற்றுவருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாள்களாகத் தீவிர கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீ-க்கும் அதிகமாக மழை பெய்து வெள்ளக்காடாக மாறி நிற்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல சப்வே-க்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மழைநீர் சூழ்ந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். 2015-ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தோடு தற்போதைய சூழலைப் பொருத்திப் பேசிவருகிறார்கள்.

சென்னை கனமழை
சென்னை கனமழை

`ஒரு நாள் மழைக்கே சென்னை இப்படித் தத்தளிக்க தி.மு.க அரசின் செயல்பாட்டில் இருக்கும் குறை’ என எதிர்க்கட்சிகளும் `அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணியில் நடந்த ஊழல்தான் தற்போது சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டிருப்பதற்குக் காரணம்’ என தி.மு.க-வினரும் பேசுகின்றனர். சென்னையின் தற்போதைய நிலைக்குக் காரணம் யார்..?

சென்னை மழை: வெள்ளக்காடான சாலைகள்.. மூழ்கிய மைதானம்.. மிதந்த வாகனங்கள்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் கேட்டோம். ``2015-ல் சென்னையில் இதைவிடக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றை மூன்றே நாள்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு போர்க்கால நடவடிக்கை மூலம் தீர்த்தது. அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளைச் சீர் செய்ததோடு அடுத்தடுத்து மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கொசஸ்தலை, அடையாறு ஆகிய ஆறுகளின் நீர்வழித் தடங்களில், 700 கோடி ரூபாய் செலவில், 320 கிலோ மீட்டர் தூரத்துக்கு அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. இப்போது நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் இருப்பதற்குக் காரணமே அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகளால்தான்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீரால் பாதிப்பு ஏற்பட்டபோதெல்லாம் மாநகராட்சி மூலமாக வார்டுவாரியாக நிதி ஒதுக்கப்பட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டதோடு அம்மா உணவகம் மூலமாக அனைவருக்கும் உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டது” என்றவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மாநகராட்சி, அரசு அதிகாரிகளுக்கு முறையாக நிதி ஒதுக்காமல், இந்தப் பிரச்னையைக் கையாள முடியாமல் தி.மு.க அரசு திணறிவருகிறது. முதல்வரின் தொகுதியான கொளத்தூரில்தான் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதற்கான காரணத்தை முதல்வரிடம்தான் கேட்க வேண்டும். சென்னையில் தாழ்வான பகுதிகளில்தான் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதை வெளியேற்றுவதற்கு மும்பையில் இருப்பதுபோல கட்டமைப்பை மேம்படுத்த அ.தி.மு.க அரசு முயற்சி எடுத்தது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அதை அப்போது செயல்படுத்த முடியவில்லை. இப்போது இருக்கும் தி.மு.க அரசு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு மக்கள்மீது அக்கறையோடு தி.மு.க நடந்துகொள்ள வேண்டும்” என அ.தி.மு.க ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்.

சென்னை மழை
சென்னை மழை
தொடர் மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்! - தவிப்பில் கல்வராயன் மலைக்கிராம மக்கள்

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து தி.மு.க வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம். ``அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 3,000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளுக்காகச் செலவு செய்திருக்கிறார்கள். உண்மையில் அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்திருந்தால் சென்னை மக்கள் இந்த அளவுக்கு மழைநீரால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டைவிட, தற்போது வெறும் 45 சதவிகிதம்தான் அதிகம் மழை பெய்திருக்கிறது. எல்லாவற்றிலும் ஊழல், கமிஷன் என்ற அ.தி.மு.க-வின் கோட்பாட்டின்படி ஆட்சி நடந்ததன் பலனை, தற்போது சென்னை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. இதில் பாதி நாள்கள் கொரோனாவைச் சமாளிப்பதிலேயே சென்றுவிட்டன. நிர்வாகரீதியாகக் கடந்த இரண்டு மாதங்கள் மட்டுமே சில தி.மு.க அரசு சில நடவடிக்கை எடுத்துவருகிறது.

வழக்கறிஞர் சரவணன்
வழக்கறிஞர் சரவணன்

ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலும் கொசஸ்தலை உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்வழிகளைத் தூர்வாரிச் சரிசெய்திருக்கிறது தி.மு.க அரசு. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால்களைச் சீரமைத்திருக்கிறது. மழை வெள்ளம் ஏற்பட்ட உடனேயே அமைச்சர்கள், அதிகாரிகள் வரை சாலையில் இறங்கி அதைச் சீரமைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டார்கள். இப்படி ஒரு நிகழ்வே அ.தி.மு.க ஆட்சியில் யாரும் எப்போதும் கண்டிருக்கவே மாட்டார்கள்” என்றவர்...

Chennai Rains: `இந்த 3 ஆப்கள் மூலம் மழை வருவதை முன்பே அறிந்துகொள்ளலாம்!' - வானிலை மைய இயக்குநர்

``அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால்களைச் சீரமைக்கும்போதே அது சரியான பாதையில் போடப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளை இந்த ஒரு நாள் மழை உண்மையாக்கியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தது அ.தி.மு.க-தான் என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதுபோலத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் அணுகுகிறார்கள். மேலும் சில நாள்களுக்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது. எனவே, இப்போதைக்கு நீண்டகாலத் தீர்வுக்கான வழியை ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள், தங்குவதற்கான வசதிகள், தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்துவருகின்றன. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஆதாரமான ஏரிகள் முதல்வர் மேற்பார்வையில் கண்காணிக்கப்படுகின்றன.

சென்னை கனமழை
சென்னை கனமழை

2015-ல் நடந்ததைப்போல நடந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். அதைப் பற்றிப் பேசி அவர் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு இப்போதைக்கு எது தேவையோ அதைச் செய்வதற்கான அனைத்து வேலைகளிலும் மிகத் தீவிரமாக அனைவரும் ஈடுபட்டுவருகிறார்கள். மழையைவைத்து அ.தி.மு.க செய்த ஊழலை மக்களும் சட்டமும் பார்த்துக்கொள்வார்கள்” என விளக்கமளித்தார்.

தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருப்பது குறித்து பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். ``ஒவ்வோர் ஆண்டும் எந்த அளவு மழை பொழிகிறது. அதை எப்படிக் கையாளுகிறோம், அதனால் எப்படி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் குறை சொல்வதை விட்டுவிட்டு மக்கள்நலனைக் கருத்தில்கொண்டுதான் அரசு செயல்பட வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்படியான பாதுகாப்புகள் நடக்காமல் இருக்கவேண்டிய நடவடிக்கைகள் எதுவோ அதையே அரசு தற்போது எடுக்க வேண்டும். அதைத் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மழை வெள்ளப் பிரச்னையைச் சரிசெய்வதில் மத்திய அரசும், தமிழக பா.ஜ.க-வும் தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல என்பதை அனைத்துக் கட்சியினரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதுதான் எதிர்க்கட்சிகளின் தார்மிகக் கடமை என நான் நினைக்கிறேன்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

வழக்கம்போல, தற்போதைய தீர்வை நோக்கிச் செயல்படாமல் நீண்டகாலத் தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசும் இதை ஒரு படிப்பினையாகக்கொண்டு இனி வரும் காலங்களில் முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வரிடம் இதை எனது கோரிக்கையாகவே வைக்கிறேன்” என அரசு எடுக்கவேண்டியவை குறித்து விளக்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு