Published:Updated:

சென்னை மாநகராட்சி: ஒரே வாரத்தில் 250 கோடி ரூபாய் டெண்டர்கள் ரத்து! காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 250 கோடி மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. ஆட்சி தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பல அதிகாரிகளின் மாற்றம் மக்களிடையே பேசுபொருளானது. இந்தநிலையில், சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

மழைநீர் வடிகால்
மழைநீர் வடிகால்

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் சாலை, பூங்கா, மழைநீர் வடிகால், சுகாதாரம், கட்டடம், திடக்கழிவு மேலாண்மை, மின்துறை, நகரமைப்புப் பிரிவு என 17 துறைகள் செயல்பட்டுவருகின்றன. சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், பூங்காக்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்கு அந்தந்தத் துறை அளவில் ஒப்பந்தங்கள் கோரப்படும். இந்தத் துறைகளில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களில், முறையான திட்டமிடல் இல்லாதது, ஒப்பந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றப்படவில்லை போன்ற காரணங்களால் 250 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலக வங்கியின் நிதி உதவியோடு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட 43 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்க, கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் முறையான திட்டமிடல் இல்லை என்று 120 கோடி ரூபாய் மதிப்பில் 43 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி கேமரா
சி.சி.டி.வி கேமரா

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் 116 கோடி ரூபாய் செலவில் 1,500 சிசிடிவி கேமராக்களைப் பொருத்த விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். இதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சமூக வலைதளங்களை நிர்வகிக்க 2.3 கோடி மதிப்பில் டெண்டர் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தமும் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. வெளிப்படைத்தன்மை இல்லாதது, விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாதது, முறையான திட்டமிடல் இல்லாதது ஆகியவைதான் இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான கரணம் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு