Published:Updated:

`சென்னையில் மூடப்படும் கொரோனா கேர் சென்டர்கள்; அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?'

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவதையடுத்து, கொரோனா கேர் சென்டர், ஸ்கிரீனிங் சென்டர்களை மாநகராட்சி தற்காலிகமாக மூடிவருகிறது.

கொரோனா பேரிடரின் இரண்டாவது அலையில் இந்தியா பெருமளவில் பாதிப்பைச் சந்தித்தது. மற்ற மாநிலங்களில் தொற்று அதிக பாதிப்பைச் சந்தித்து, மீண்டும் குறைந்துகொண்டிருந்த நேரத்தில்தான் தமிழகத்தில் தொற்று பரவும் வேகம் அதிகமானது. முதல் அலையைப் பொறுத்தவரை தமிழகத்தில் பதிவான அதிகபட்ச தொற்றின் எண்ணிக்கையே கிட்டத்தட்ட 7,000-ம்தான். ஆனால், இரண்டாவது அலையில் அந்த எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக 36,000-க்கும் அதிகமான தொற்று பரவியது. சென்னையில் மட்டுமே நாளொன்றுக்கு 7,000-க்கும் அதிகமான தொற்று பதிவானது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

இந்த இரண்டாம் அலையின் முற்பகுதியில் சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் ஆம்புலன்ஸில் அவதிப்பட்ட காட்சியெல்லாம் தமிழகத்தில் அரங்கேறின. அதன் பிறகு, சென்னையில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும் கோவை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது தொற்று எண்ணிக்கை 3,500-க்கும் குறைவாகவே பதிவாகிவருகிறது.

சென்னையில் குறைந்த கொரோனா தொற்று:

பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 7,000 வரை பதிவாகிவந்த கொரோனா தொற்று, நேற்றைய நிலவரப்படி (04.07.2021) 222-ஆகப் பதிவாகியுள்ளது. சென்னையில் மொத்தமாகவே 2,168 நபர்கள் கொரோனாவால் பாதித்தவர்கள் இருக்கிறார்கள் என்று அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும், சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 132 பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் அந்தப் பகுதிகளிலும் ஐந்துக்குக் குறைவானவர்கள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா பரவல் சென்னை நிலை
கொரோனா பரவல் சென்னை நிலை
Twitter

ஒரே பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவிடும். தற்போதைய நிலையில் இந்த 132 பகுதிகளிலும் மூன்று முதல் ஐந்து நபர்கள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், சென்னையை நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி இல்லாத நகரமாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 27,000-க்கும் அதிகமான ஆர்.டி பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் தொற்று உறுதிசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை 1 சதவிகிதத்thukகும் கீழேதான் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மூடப்படும் கொரோனா கேர் சென்டர்:

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்பட்ட நேரத்தில், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாகக் கட்டுப்பாட்டு அறைகள், கொரோனா பாதுகாப்பு மையங்கள், சிறப்பு கொரோனா ஆம்புலன்ஸ், கொரோனா ஸ்க்ரீனிங் சென்டர்கள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த இடங்களில் பணிபுரிய முன்களப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என்று மாநகராட்சி ஆயிரக்கணக்கானவர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்தியிருந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில் மாநகராட்சி, பராமரிப்பு மற்றும் சம்பள செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

சென்னை கோவிட் நிலை
சென்னை கோவிட் நிலை
GCC

அன் அடிப்படையில், சென்னையில் 15 கொரோனா கேர் சென்டர்களையும், ஒன்பது ஸ்க்ரீனிங் சென்டர்களையும் தற்காலிகமாக மூட அரசு முடிவுசெய்துள்ளது. அதோடு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சிறப்பு கொரோனா ஆம்புலன்ஸை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்க இறுதி ஆண்டு பயிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்; அவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்துள்ளது. மூடப்படும் அனைத்து மையங்களிலும் படுக்கைகளை அப்படியே வைத்திருக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை மூன்றாவது அலை ஏற்பட்டால், அந்தக் கட்டமைப்புகள் அனைத்தையும் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சென்னையைப் பொறுத்தவரைத் தொற்றின் எண்ணிக்கை மிகக் கணிசமாகக் குறைந்திருப்பது உண்மைதான். தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும் ஆக்சிஜன், ஐ.சி.யூ உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்கான 5,290-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா கேர் சென்டர்களில் 9,400-க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக இருப்பதாகவும். தமிழகத்தைப் பொறுத்தவரை 73,499 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளும், கொரோனா கேர் சென்டர்களில் 57,790 படுக்கைகளும் காலியாக இருப்பதாகவும் அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தற்போதைய கள நிலவரப்படி, சென்னையில் போதிய அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் அளவு 4.5-5 சதவிகிதம் இருந்தபோதிலும் அங்கு சில ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பகுதிகளிலும் பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டுமே தொற்றை விரைந்து கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ ஆலோசகர்கள்.

கொரோனா பரிசோதனை விவரம்
கொரோனா பரிசோதனை விவரம்

நேற்று முதல் சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து அனுமதி, டாஸ்மாக் அனுமதி, மால்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட ஒரே மாதிரியான தளர்வுகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. கொரோனா தொற்றைப் பொறுத்தவரை தொற்றின் எண்ணிக்கை மட்டுமே குறைந்திருக்கிறதே தவிர தொற்று முழுமையாக ஒழிந்தபாடில்லை. சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர், மக்கள் மருத்துவமனையில் படுக்கைகள் பெற ஆம்புலன்ஸில் நீண்ட தொலைவு நின்ற காட்சியை நாம் அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். இதே சென்னையில், தற்போது தளர்வுகளை வழங்கியதும் மக்கள் காசிமேட்டில் மீன் வாங்கவும், தி.நகரில் பொருள்கள் வாங்கவும், கடற்கரைக்கும் கூட்டம் கூட்டமாகச் செல்லும் காட்சிகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமன்றி, மக்களாகிய நம்மால் மட்டுமே தொற்று பரவுவதை முழுமையாகத் தடுக்க முடியும். அரசு கூறிய அனைத்து வழிமுறைகளையும் எல்லா நேரங்களிலும் சரியாகப் பின்பற்றுவதும், தடுப்பூசி எடுத்துக்கொள்வதும் மட்டுமே நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஒரே வழி..!

அடுத்த கட்டுரைக்கு