Published:Updated:

சென்னை: குடியிருப்புகள் அகற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் கல்வி - கவனிக்குமா அரசு?!

குடியிருப்புகள் அகற்றம்

கல்வி ஒன்றே பல்வேறு சமூக, பொருளாதாரச் சூழ்நிலையில் வாழும் மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். ஆனால், மாணவர்களிடம் கல்வி போய்ச் சேர்வதிலேயே பல தடைகள் இருக்கின்றன. தடைகள் களையப்பட்டு, அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும்!

சென்னை: குடியிருப்புகள் அகற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் கல்வி - கவனிக்குமா அரசு?!

கல்வி ஒன்றே பல்வேறு சமூக, பொருளாதாரச் சூழ்நிலையில் வாழும் மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். ஆனால், மாணவர்களிடம் கல்வி போய்ச் சேர்வதிலேயே பல தடைகள் இருக்கின்றன. தடைகள் களையப்பட்டு, அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும்!

Published:Updated:
குடியிருப்புகள் அகற்றம்

சென்னையில் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து இடித்துவருகின்றன. இடிக்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்த மக்கள் பெரும்பாக்கம், கண்ணகிநகர், நாவலூர் போன்ற சென்னைக்கு வெளியில் உள்ள இடங்களில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு கட்டடத்தின் தரம், தண்ணீர் வசதி, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரம் சிக்கலுக்கு உரியதாகவே இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டாலும் குழந்தைகளும் மாணவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்கு விளையாட்டும், மாணவர்களுக்குக் கல்வியும் கேள்விக்குறியாக இருக்கின்றன.

வீடுகள் இடிப்பு: நிர்கதியில் மக்கள் 
வீடுகள் இடிப்பு: நிர்கதியில் மக்கள் 

இந்தக் குடியிருப்பு இடமாற்றத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து, பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்த்தப்பட்ட மாணவர்களிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இரண்டாம் வகுப்பு படிக்கையில கோட்டூர்புரத்தில இருந்த எங்க வீட்டை கவர்மென்ட் இடிச்சாங்க. அதுனால நாங்க பெரும்பாக்கத்துக்கு வந்துட்டோம். ஆனா படிப்பைப் பாதியிலயே நிறுத்தி வேற பள்ளிக்கூடத்துல சேர முடியாதுன்னு கொஞ்ச காலம் கோட்டூர்புரத்திலேயே படிச்சுக்கிட்டு இருந்தேன். ரொம்ப தூரம் போறது கஷ்டமா இருந்தது. அங்கே இருக்கும்போது விளையாட இடம் நிறையா இருக்கும். ஆனா, இங்கே இடமே இல்லை!" என்றார் தற்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கீர்த்தனா.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

அதேபோல, 12-ம் வகுப்பு படிக்கும் தீபிகா பேசுகையில், ``சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சூர்யா நகர் அரசுப் பள்ளியில் நான் படிக்கும்போது எங்கள் வீடு இடிக்கப்பட்டது. அப்போது எனக்கு ஆறாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நடந்துகொண்டிருந்தது. வீடு அகற்றப்பட்டதால் தேர்வில் கவனம் செலுத்த முடியவில்லை. பெரும்பாக்கம் வந்த பிறகும் அங்கேயே படிப்பைத் தொடர்ந்தேன். காலையிலேயே சீக்கிரம் பள்ளிக்கு புறப்படணும்; சாப்பிடக்கூட நேரம் இருக்காது, பெரும்பாலும் காலையில் சாப்பிடாமலேயே புறப்படுவேன். அப்போதுதான் நேரத்துக்குப் போய்ச் சேர முடியும், இல்லையென்றால் பஸ் கிடைப்பது கஷ்டம். தினமும் காலையில் இரண்டு மணி நேரம், சாயங்காலம் இரண்டு மணி நேரம் பஸஸில் போயிட்டு வர்றதுனால வீட்டுக்கு வந்ததும் களைப்பு அதிகமாவே இருக்கும். அதுவும் மாதவிலக்கு நேரங்களில் ரொம்ப தூரம் பஸ்ல போறது ரொம்ப சிரமம், வயிறு, இடுப்பு எல்லாம் வலிக்கும். எத்தனையோ முறை பஸ்ல பாதியிலேயே வலி தாங்க முடியாம இறங்கிருக்கேன்" என வேதனையுடன் கூறுகிறார்.

தரைமட்டமான திருவொற்றியூர் குடிசை மாற்று வாரியக் கட்டடம்
தரைமட்டமான திருவொற்றியூர் குடிசை மாற்று வாரியக் கட்டடம்

தொடர்ந்து, 10-ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் பேசுகையில், ``மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டுக்கு வருவதற்கு இரவு ஏழரை, எட்டு மணி ஆகிவிடும். வந்ததும் படிக்கவும் முடியாது; களைப்பில் சாப்பாடுகூடச் சாப்பிடாமல் தூங்கிவிடுவேன். என்கூட படிச்ச பையன் ஒருத்தன் ரொம்ப தூரம் போறதால சரியா படிக்க முடியாம 10-ம் வகுப்பு தேர்வுல தேர்ச்சி பெறலை. அதுக்கப்புறம் அவன் படிக்கவே போகவில்லை!" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியிருப்புகள் அகற்றத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து Information and Resource Centre for Deprived Urban Communities-ல் ஆராய்ந்துவரும் வனேசாவிடம் பேசினோம். ``பொதுவாக வீடுகள் இடிக்கப்படும்போதே மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. ஓம்சக்தி நகரில் வீடுகளை அகற்றும்போது முதல் நாள் இரவுதான் வீடுகள் இடிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். மனதளவில் குழந்தைகள் தயாராகாமல் அவர்கள் கண்முன் வீடுகளை இடிப்பது அவர்களை பெரிய அளவில் பாதிக்கும். 84% குடியிருப்புகள் அகற்றம், கல்வி ஆண்டுக்கு இடையிலேயே நடக்கிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இங்கு படிப்பைப் பாதியிலேயே நிறுத்தின பசங்க எல்லாருமே பள்ளியை அணுகுவதில் சிரமம் இருந்ததாலதான் நிறுத்தியிருக்காங்க. மாணவர்களில் அதிகமாகப் பெண்கள்தான் படிப்பைப் பாதியில் கைவிடுகின்றனர்.

வனேசா
வனேசா

காரணம் பாதுகாப்பு காரணங்களால் பெற்றோர்கள், பெண்களை வெகுதொலைவுக்குப் படிக்க அனுப்ப முற்படுவதில்லை. கல்வியை இடையில் நிறுத்துவதால் பெண் குழந்தைகள் குழந்தைத் திருமணத்துக்கு ஆளாகின்றனர். ஆண் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடர்கின்றனர். குடியிருப்புகளை அகற்றுவதற்கு முன்னதாக எத்தனை மாணவர்கள் குடியிருப்பில் வாழ்ந்துவருகின்றனர், அவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கிறார்களா அல்லது தனியார் பள்ளியில் படிக்கிறார்களா போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தத் தகவல்கள் அரசிடம் இல்லை. மறுகுடியமைக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் குறித்த தகவலை அரசு சேகரிக்கிறது. இது முறையற்றது. ஒரு குடியிருப்பு என்றால் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதுபோல் மாணவர்களின் தேவையையும் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் தேவை என்ன என்பதை அவர்களிடம் கேட்டறிய வேண்டும்" என்றார்.

சமீபத்தில் டெல்லி ஜஹாங்கிர்புரியில் சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்பட்டபோது, அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கான செலவை இந்திய மாணவர் சங்கம் ஏற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் வீடுகள் இடிக்கப்படுவது குறித்து இந்திய மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் நிருபன் சக்கரவர்த்தியிடம் கேட்டபோது, ``கடந்த 2015-லிருந்து சென்னையிலுள்ள வீடுகளை அகற்றிவருகின்றனர் அதுவும் கல்வி ஆண்டுக்கு இடையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மாணவர் விரோதச் செயல். பல்வேறு சூழல், நெருக்கடியின் மத்தியில் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டுக்கு இடையில் வீடுகள் இடிப்பு, மேலும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். அவர்களை செம்மஞ்சேரி , கண்ணகி நகர் போன்ற இடங்களில் மறு குடிபெயர்ப்பு செய்கையில் நிறைய மாணவர்கள் படிப்பை இழக்கின்றனர்.

நிருபன் சக்கரவர்த்தி
நிருபன் சக்கரவர்த்தி

கல்வி மூலம் முறையான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாடு நகர்ப்பற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற குடியிருப்புகளாக இல்லை. முறையற்ற கழிவறை வசதிகள், பாதுகாப்பின்மை போன்ற சூழல் நிலவுகிறது. பல மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகளுக்கு அருகில் போதுமான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட சமூகக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

கல்வி ஒன்றே பல்வேறு சமூக, பொருளாதாரச் சூழ்நிலையில் வாழும் மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். ஆனால், மாணவர்களிடம் கல்வி போய்ச் சேர்வதிலேயே பல தடைகள் இருக்கின்றன. தடைகள் களையப்பட்டு அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism