Election bannerElection banner
Published:Updated:

சென்னை: `10 ரூபாய் முதல் ரூ.20,000 வரை’ -குப்பை கொட்டுவதற்குக் கட்டணம்; விதிமுறைகளை மீறினால் அபராதம்

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

குப்பைகளுக்குக் கட்டணம் மட்டுமல்லாமல், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படவிருக்கிறது.

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒவ்வோர் இடத்துக்கும் தகுந்தாற்போல் 10 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

தற்போது, சென்னை மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களில் ஏழு மண்டலங்களில் தனியார் நிறுவனங்களின் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டுவருகிறது.

திட்டம் தொடக்க விழா
திட்டம் தொடக்க விழா
GCC

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 5,400 மெட்ரிக் டன் குப்பைகளும், 700 மெட்ரிக் டன் கட்டுமான மற்றும் இடிப்பு திடக்கழிவுகளும் உருவாகின்றன. இவற்றில் குடியிருப்புகளிலிருந்து 68 சதவிகிதமும், வர்த்தகரீதியான இடங்களிலிருந்து 16 சதவிகிதம், அரங்கங்கள், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 14 சதவிகிதம், தொழிற்சாலைகளிலிருந்து இரண்டு சதவிகிதக் குப்பைகள் உருவாகின்றன. மருத்துவக் கழிவுகள் அனைத்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நியமித்திருக்கும் ஏஜென்டுகள் மூலமாக அகற்றப்பட்டுவருகின்றன.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை துணை விதி 2019-க்கு, தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி ஒப்புதல் தெரிவித்தது. இந்த விதிகளின்படி கழிவுகளை உருவாக்குபவர்களை வகைப்படுத்தி, அதற்கேற்ப அவர்களுக்கான கட்டணம் சென்னை மாநகராட்சிக்குச் செல்ல வேண்டும். கடந்த ஜனவரி மாதமே ஒப்புதல் கிடைக்கப்பெற்றிருந்தாலும், கொரோனா பேரிடர் காரணமாக தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தக் கட்டணத்தை, சொத்து வரியோடு வரும் 01.01.2021 முதல் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் 19,300 தூய்மைப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்!

இதன்படி, 500 முதல் 2,400 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு மாதக் கட்டணமாக 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையும், திரையரங்குகளுக்கு 750 ரூபாய் முதல் இரண்டாயிரம் வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையும், கடைகளுக்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையும், அரசு அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையும் ஒரு மாதக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிற.

மேலும், தனியார்ப் பள்ளிகளுக்கு 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையும், மருத்துவமனைகளுக்கு 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையும், பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 5,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையும் கட்டணம் பெறப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அறிக்கை
அறிக்கை

குப்பைகளுக்குக் கட்டணம் மட்டுமல்லாமல், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படவிருக்கிறது. அதன்படி, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்கள், குப்பைகளை எரிப்பவர்கள், குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்காதவர்கள், கட்டுமானக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுப்பவர்களுக்கு என 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படவிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு