ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அவருக்கும் தமிழக அரசுக்குமிடையே பனிப்போர் நிலவிவருவதாக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவருக்கு, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கடிதம் அனுப்பின.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ``தமிழக ஆளுநர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றதிலிருந்து பிரச்னைக்குரிய நபராக இருந்துவருகிறார். அதன்படி பொது நிகழ்ச்சிகளில் தகுதி தராதரம் பற்றியெல்லாம் பேசிவருகிறார்.
அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை பெற முடியும். எனவே, இந்திய அரசியல் சாசனம் 158(2)-வது பிரிவின்படி ஆளுநர் இரட்டைப் பதவி வகிக்கிறார். இந்தப் பதவியை அவர் ஏற்றிருக்கக் கூடாது.

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால் தமிழக ஆளுநராக இருப்பதற்குத் தகுதி இழந்துவிடுகிறார். எனவே, அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ``ஆளுநர் ரவிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல" எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.