Published:Updated:

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு: `சார், மேலிடத்து உத்தரவு!’- தடுத்து நிறுத்திய கமிஷனர்; கொதித்த அமைச்சர்

ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழா
ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழா

வரிசை அடிப்படையில் நினைவிட வளாகத்தின் உள்ளே மரியாதை செலுத்த அனுமதிக்கும்படி அரசுத் தரப்பில் போலீஸுக்கு உத்தரவிடப்பட்டதாம். அதை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கண்காணித்துக்கொண்டிருந்தாராம்.

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். நினைவிடத்தின் திறப்புவிழாவுக்காக அமைச்சர்களும் வந்திருந்தனர். முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் ஆகியோர் ஒரே நேரத்தில் நினைவிட வளாகத்துக்குள் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து சீனியாரிட்டி அடிப்படையில் பத்து அமைச்சர்கள்கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்த வரிசை அடிப்படையில் நினைவிட வளாகத்தின் உள்ளே மரியாதை செலுத்த அனுமதிக்கும்படி, அரசுத் தரப்பில் போலீஸுக்கு உத்தரவிடப்பட்டதாம். அதை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கண்காணித்துக்கொண்டிருந்தாராம்.

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா

முதல்வர் நினைவிடத்தைத் திறந்துவைத்த பின்னர், அமைச்சர்கள் குழுவில் முதல் வரிசையில் இருந்தவர்கள் உள்ளே சென்றார்களாம். அவர்கள் வெளியே வந்ததும், இரண்டாம் குழுவினர் தயாராக நின்றிருந்தார்கள். அந்தக் குழுவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நின்றிருந்தாராம். முதல் குழுவினர் மரியாதை செலுத்த உள்ளே சென்றிருந்த நேரத்தில், சி.வி.சண்முகமும் திடீரென உள்ளே நுழைய முயன்றதாகச் சொல்கிறார்கள். அவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தடுத்து நிறுத்தி, ``சார்... எங்களுக்கு மேலிட உத்தரவு. அதைச் செயல்படுத்துகிறோம். ஒத்துழையுங்கள்’’ என்றாராம். அதைக் கேட்காமல் கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சி.வி.சண்முகம் என்கிறார்கள் அங்கிருந்த சிலர்.

ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்... சிறப்புப் புகைப்படத் தொகுப்பு #SpotVisit

தொடர்ந்து,`நான் அமைச்சர்' என்று சி.வி. சண்முகம் கோபத்துடன் சொல்ல, அதை கமிஷனர் கண்டுகொள்ளவில்லையாம். `நீங்க கமிஷனர்னா... நான் தோப்புக்கரணம் போடணுமா?' என்று கேட்டபடி சி.வி.சண்முகம் நடித்துக் காட்டியதாகவும் கூறப்படுகிறது. பிறகு, `முதல்வர் வருகிற வரையில் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்’ என்று அப்படியே நின்றாராம் சி.வி.சண்முகம். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மற்ற அமைச்சர்கள், கூடுதல் கமிஷனர் தினகரன் ஆகியோர் ஒடிவந்து சி.வி.சண்முகத்தைப் பார்த்து, `முதல்வர் உள்ளே அழைக்கிறார்... வாருங்கள்' என்று சொல்லி, அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சி.வி.சண்முகம்  - மகேஷ்குமார் அகர்வால்
சி.வி.சண்முகம் - மகேஷ்குமார் அகர்வால்

``ஆட்சியாளர்கள் சொன்னதைத்தானே கமிஷனர் செயல்படுத்திக்கொண்டிருந்தார். அவரிடம் சி.வி.சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தேவையில்லாதது'' என்று சில போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்த அமைச்சர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு