Published:Updated:

சென்னை மழை பாதிப்பு: அதிமுக அரசு செய்யத் தவறியவையும், திமுக அரசு செய்யவேண்டியவையும் என்னென்ன?

சென்னை மழை பாதிப்பை சரியாகக் கையாளவில்லை என தி.மு.க-வினர் அ.தி.மு.க அரசையும், அ.தி.மு.க-வினர் தி.மு.க அரசையும் குறை சொல்லிவருகிறார்கள். அ.தி.மு.க அரசு செய்யத் தவறியவை, தி.மு.க செய்யவேண்டியவை என்னென்ன?

சென்னையில் சிறிய அளவு மழை பெய்தாலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள் தூர்வாராதது மட்டும் காரணமல்ல. சென்னையின் புவியியல் அடிப்படைக்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்படாததையும் சென்னையில் மழைநீர் தேங்குவதற்குக் காரணங்களாகச் சொல்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் 14 பேர்கொண்ட வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் குழு, வெள்ளத்தைத் தடுக்கும் வழிமுறைகளையும், வெள்ளத்தின் பாதிப்பைக் குறைக்கும் வகையில் மழைநீர் வடிகால்களை அமைக்கவும் அறிவுரைகள் வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை மழை - மெரினா கடற்கரை
சென்னை மழை - மெரினா கடற்கரை
ராகேஷ் பெ

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவது தொடர்கதை என்றாலும் அதற்கு எந்த அரசும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சுமத்துகிறார்கள். தி.மு.க-வினர் அ.தி.மு.க அரசையும், அ.தி.மு.க-வினர் தி.மு.க அரசையும் குறை சொல்லிவருகிறார்கள். அ.தி.மு.க அரசு செய்யத் தவறியவை, தி.மு.க செய்யவேண்டியவை குறித்து ஓர் அலசல்.

சென்னை மழை வெள்ள பாதிப்பு: சிறப்பாகச் செயல்பட்டது திமுக-வா... அதிமுக-வா?

அ.தி.மு.க செய்யத் தவறியவை என்னென்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ``2015-ல் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகாவது சென்னையைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தியிருக்க வேண்டும். கொசஸ்தலை, அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றைத் தூர்வாரியிருக்க வேண்டும். அவற்றில் சாக்கடைத் தண்ணீர் கலக்காமல் பார்த்திருக்க வேண்டும். மழைநீர் வடிகால்களையும் முறையாக அமைத்திருக்க வேண்டும். ஏற்கெனவே இருந்தவற்றை முறையாகப் பராமரித்திருக்க வேண்டும். இதைச் செய்யாமல் விட்டுவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம்... தியாகராய நகரை அழகாக்குகிறேன் என அதையும் கெடுத்துவைத்திருக்கிறார்கள். ஆம், ஸ்மார்ட் சிட்டியாக தி.நகர் மேலே பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், கீழே எதுவுமே சரியில்லை. மேலே அழகாக்கப் பயன்படுத்திய பணத்தில் ஒரு சிறு அளவு அதன் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தியிருக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய உலக வங்கியில் கடன் வாங்கிக்கொண்டு அதையும் பயன்படுத்தவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க வேண்டும். மராமத்துப் பணி என எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

அமைச்சர்களை விட்டுவிட்டு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது பிரச்னை ஏற்பட்டாலும் அமைச்சர்களைத்தான் குற்றம் சொல்கிறோம். ஆனால், துறைசார்ந்த அதிகாரிகள்மீது எந்தப் புகாரும் எழுவதேயில்லை. ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்துவதோடு புதிய ஏரிகளையும் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், இவை எதையும் பத்தாண்டு ஆட்சியிலிருந்த அ.தி.மு.க செய்யவில்லை” என அ.தி.மு.க ஆட்சியில் செய்யத் தவறியவை பற்றி விவரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க அரசு செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்காமல் ஒருவர் மாற்றி ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதைத் தவிர்த்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் நல்லது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மழை வெள்ளம் இந்த அளவு வந்தால் அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா உள்ளிட்ட சிலவற்றை இப்போதைய தி.மு.க அரசு காரணமாகச் சொல்லலாம். ஆனால், அடுத்த ஆண்டும் இதேபோலக் காரணம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால்களைச் சீரமைக்க வேண்டும், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைநீர் தேங்கியிருக்கும் இடங்கள் எவை எவை, மழைநீர் தேங்கியிருப்பதற்கான காரணம் என்ன? அவற்றைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழுவெல்லாம் தேவையில்லை. ஒவ்வொரு பகுதி மக்களிடம் சென்று கேட்டாலே அந்தப் பகுதியில் மழைநீர் தேங்குவதற்கான காரணத்தையும், அதைச் சரிசெய்வதற்கான காரணத்தையும் அவர்களே சொல்லிவிடுவார்கள். அதைச் செய்வதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

எடுக்கும் நடவடிக்கைகள் தற்காலிகத் தீர்வாக இல்லாமல் காலங்காலமாக நீட்டிக்கக்கூடிய நீண்ட நாள் தீர்வாக இருக்க வேண்டும். அதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என தி.மு.க அரசு செய்யவேண்டியவற்றை விவரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு