Published:Updated:

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எட்டுவழிச் சாலை விவகாரம்- தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன? முழு அலசல்

எட்டுவழிச் சாலைத் திட்டம்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தி.மு.க அதில், `` சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படாது" என வாக்குறுதி 43-ல் சேர்த்து அறிவித்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானார்.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எட்டுவழிச் சாலை விவகாரம்- தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன? முழு அலசல்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தி.மு.க அதில், `` சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படாது" என வாக்குறுதி 43-ல் சேர்த்து அறிவித்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானார்.

Published:Updated:
எட்டுவழிச் சாலைத் திட்டம்

கடந்த 2018 அ.தி.மு.க ஆட்சியின்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச்சாலை திட்டம். சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டுவரப்படும் இந்த திட்டத்துக்காக, 7,000 விவசாயிகளிடமிருந்து சுமார் 6,978 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கொதிப்படைந்த ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் களமிறங்கின.

எட்டுவழிச் சாலை  - போராட்டம்
எட்டுவழிச் சாலை - போராட்டம்

குறிப்பாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துகொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள்நலனில் அக்கறைகொண்ட ஓர் அரசு புறந்தள்ளிவிட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாகத் துடிப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்கு பதிலளித்துப் பேசிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``எட்டுவழிச் சாலைத் திட்டம் மத்திய அரசின் திட்டம். இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. மத்திய அரசுக்கு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவி செய்கிறோம். மக்களின் ஒப்புதலைப் பெற்று இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

அந்த நிலையில், பா.ம.க., நா.த.க., பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள், இந்தத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த 2019-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.

சேலம் எட்டுவழிச் சாலை விவகாரம்..! விவசாயிகளிடம் கருத்து கேட்ட சீமான்
சேலம் எட்டுவழிச் சாலை விவகாரம்..! விவசாயிகளிடம் கருத்து கேட்ட சீமான்

அப்போது அறிக்கைவிட்ட தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ``10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தால், தான் போட்ட `விவசாயி’ வேடத்தை `மேல்முறையீடு’ மூலம் கலைத்து விட்டு, மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் பழனிசாமி அவசரப்படுகிறார்; சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும்விதத்தில் பசுமையான மரங்களை வெட்டி வீழ்த்தத் துடிக்கிறார். ஏழை விவசாயிகளின் உயிரோடும் வாழ்வோடும் கலந்துவிட்ட சின்னஞ்சிறு துண்டு நிலங்களைக்கூடப் பறித்து, அவர்களின் கண்ணியத்தைச் சூறையாடுவதில் ஆர்வம்காட்டுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயம், சுற்றுச்சூழல், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் `அதிவேகமாக’ நாசமாக்கிவிட வேண்டும் என்று அ.தி.மு.க அரசும் - மத்திய பா.ஜ.க அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருப்பது, அப்பாவித் தமிழக மக்களுக்கு எதிரான மாபாதகச் செயல். மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து, சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" எனக் கடுமையாக விமர்சித்து அறிக்கைவிட்டார்.

ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை

அதன் பிறகு, மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், எட்டுவழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது. அதேசமயம், இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட விதம் தவறானது என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போதும்கூட மு.க.ஸ்டாலின், ``விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில், சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம், நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவான கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு எடுத்துவைக்கவில்லை.

எட்டுவழிச் சாலை
எட்டுவழிச் சாலை

பா.ஜ.க அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிராக அ.தி.மு.க-பா.ஜ.க அரசுகள் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன. மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. மத்திய அரசின் திட்டம் என்று சொல்லி தப்பித்துக்கொள்ள நினைக்காமல் கைவிட்டுவிட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்!" என அறிக்கை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தி.மு.க., அதில், `சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது" என வாக்குறுதி 43-ல் சேர்த்து அறிவித்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானார்.

முதல்வரானபோதும்கூட, கடந்த 2021, ஜூன் 17-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கிய ஸ்டாலின், சென்னை – சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

அந்த நிலையில், கடந்த மார்ச் 16-ம் தேதி சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர், ``சென்னை - சேலம் இடையேயான விரைவுச் சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை ஏழு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்கவும், தொழில் வளர்ச்சிக்கும் புதிய விரைவுச் சாலை பயன்படும். இது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்!" எனக் கூறினார். இது விவசாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எ.வ.வேலு
எ.வ.வேலு

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ``இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் செயல்படுத்தும். எட்டுவழிச் சாலைப் பணிகளைத் தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசுதான் பணிகள் தொடங்குவது குறித்து முடிவுசெய்ய வேண்டும். இதில், கொள்கை முடிவை எடுக்கவேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. எட்டுவழிச் சாலை என்பது சாதாரண சாலை அமைப்பது போன்ற பணி கிடையாது. ஆகவே, இதில் தமிழக முதல்வர் கொள்கை முடிவை எடுப்பார். ஆனாலும், இதில் தமிழக அரசின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தத் திட்டம் குறித்து கொள்கை முடிவெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது" என பதிலளித்தார்.

மேலும், தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, ``சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார்" என கருத்து தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்த `எட்டுவழிச் சாலை நிறைவேற்றப்படாது' என்ற பதிலுக்கு பதிலாக, தொடர்ச்சியாக தி.மு.க தலைவர்களிடமிருந்து திட்டத்துக்கு ஆதரவான மற்றும் தெளிவில்லாத பதில்களால், `எட்டுவழிச் சாலையில் தி.மு.க அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன?' என்ற கேள்வி வலுவாக எழுந்தது. பா.ம.க., நா.த.க உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன.

திருச்சி சிவா
திருச்சி சிவா

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நாடாளுமன்ற இறுதிநாள் கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, ``நாடு முழுவதும் ரூ.3,56,000 கோடி மதிப்பீட்டில் 8,301 கி.மீ நீளமுள்ள 22 பசுமை வழிச்சாலை திட்டங்கள் அமையவிருக்கின்றன’’ என்றும், ``தமிழகத்தில் சென்னை- பெங்களூரு மற்றும் சென்னை-சேலம் இடையே இரண்டு பசுமை வழிச்சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது’’ என்றும் தெரிவித்தார். இதில், சென்னை- பெங்களூரு இடையே 282 கி.மீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகளில், 45 கிமீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ``சென்னை- சேலம் இடையிலான 277 கி.மீ நீளமுள்ள பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை’’ என்றும், ``ஆனால் வரும் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்" எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தமிழக மக்களிடையே மாபெரும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நிதின் கட்கரி - ஸ்டாலின்
நிதின் கட்கரி - ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து, சென்னை - சேலம் எட்டுவழிச் சாலையை, ‘புதிய விரைவுச் சாலை, பயண நேரக் குறைப்புச் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்போகிறார்கள் எனக் கூறி, #Stop_SalemChennaiXpressWay என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள்துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி பா.ம.க உறுப்பினர் சிவகுமார், ``சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு

இதற்கு பதிலளித்துப்பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் எ.வ.வேலு, ``சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் என்பது ஆறுவழிச் சாலையாக ஏற்கெனவே மாறிவிட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதேவேளையில் தமிழ்நாடு முதலமைச்சரைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த அதே நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருக்கிறோம். எட்டுவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதி மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே, திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அப்போதைய நிலைப்பாடே எங்களது இப்போதைய நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.

எட்டுவழிச் சாலை திட்டம்
எட்டுவழிச் சாலை திட்டம்

தேர்தல் அறிக்கையில், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது' என உறுதியாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது `மக்களிடம் கருத்து கேட்ட பிறகு அதனடிப்படையில் திட்டம் மீதான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்திருப்பதால், தமிழக அரசின் இறுதியான, உறுதியான, உண்மையான நிலைப்பாடு என்ன என்பதில் குழம்பிப்போயிருக்கின்றனர் பொதுமக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism