`கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதற்காக நடிகர் விஜய்யின் காருக்கு ரூ.500 அபராதம், திருவான்மியூரில் ஒன் வேயில் பயணித்ததற்காக ஏ.டி.ஜி.பி அந்தஸ்துடைய காவல்துறை வாகனத்துக்கு ரூ.500 அபராதம்' எனப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அபராதம் விதித்து அதிரடி காட்டிவருகிறது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை. இந்த நிலையில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கரை நேரில் சந்தித்து, போக்குவரத்து காவல்துறை சம்பந்தமான பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அவரின் பதில்கள் இங்கே...
``போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னையில் மொத்தம் எத்தனை இடங்களில் வாகன சோதனைகள் நடைபெற்றுவருகின்றன?’’
``சென்னையில் மொத்த 55 காவல் நிலையங்கள் இருக்கின்றன. அவற்றின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 312 போக்குவரத்து காவல் ஜங்ஷன்கள் இருக்கின்றன. ஒரு ஜங்ஷனுக்கு ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் நான்கு போக்குவரத்து காவல் அதிகாரிகளை வாகன சோதனைப் பணியில் ஈடுபடுத்துவோம். தற்போதைய நிலவரப்படி, தோராயமாக 150-200 இடங்களில் வாகன சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.’’
``புதிய அபராதத் தொகை அமலுக்கு வந்ததிலிருந்து, விதிமீறல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன... எவ்வளவு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது?’’
``புதிய போக்குவரத்து அபராதத் தொகை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தும்விதமாக கடந்த அக்டோபர் 19-ம் தேதி, புதிய அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி முதல் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் மட்டும் கடந்த அக்டோபர் 21 முதல் நவம்பர் 10 வரையிலான 21 நாள்களில் மொத்தம் 44,463 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சுமார் 3,86,45,865 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதில், 17,442 வழக்குகளில் 1,20,31,775 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது.’’
``அபராதம் விதிப்பதில் `டார்கெட் ஃபிக்ஸிங்' முறை இருக்கிறதாமே... இதனால் பணிச்சுமை கூடுவதாக பணியிலிருக்கும் துறை அதிகாரிகளே புலம்புகிறார்களே?’’
``வாரத்தில் ஒருமுறை பிளான் செய்கிறோம். மொத்தம் 32 கேட்டகரியில் வழக்கு பதிவுசெய்கிறோம். எங்களிடம் போதுமான மேன்பவர் இல்லை; அதனால் எப்படி பெஸ்ட்டாகச் செய்ய முடியுமோ அப்படித் தேர்ந்தெடுத்து, எல்லாப் பிரிவுகளையும் ஃபோக்கஸ் செய்யும் வகையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பிரிவை பிரதானமாக (Particular) வைத்து வழக்கு போடுகிறோம். அதை டார்கெட் ஃபிக்ஸிங் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்குமான இண்டிகேஷன்.
உதாரணத்துக்கு, ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் நான்கு அதிகாரிகள், தொடர்ந்து மூன்று மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட்டால், தோராயமாக எத்தனை வழக்குகள் போட முடியும், ஒரு வழக்குப்போட போலீசாருக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என நாங்கள் ஒரு `ரஃப் ஸ்டடி' செய்து பார்த்திருக்கிறோம். அதனடிப்படையில், ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு நாளொன்றுக்கு 100 முதல் 120 வழக்குகள் போட முடியும். சென்னையின் மொத்த காவல் நிலையங்களையும் சேர்த்தால் நாளொன்றுக்கு 7,000 - 8,000 வழக்குகள் வரும்... வந்துகொண்டிருக்கின்றன. அப்படி, ஒரு ஸ்டேஷனைச் சேர்ந்தவர்கள் நாளொன்றுக்கு அதிகமான வழக்குகளைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், மற்ற ஸ்டேஷன்களில் குறைவான வழக்குகளைப் பதிவுசெய்திருந்தால் `ஏன் குறைந்தது?' என நாங்கள் கேள்வி கேட்கிறோம். அவ்வளவுதான். அதற்காக அவர்களுக்குப் பனிஷ்மென்ட்டெல்லாம் நாங்கள் கொடுப்பதில்லை.’’
``போக்குவரத்து காவல்துறையில் ஆள் பற்றாக்குறை இருக்கிறதே... கூடுதல் பணியால் `வொர்க் பிரஷர்' அதிகரிக்காதா?’’
``உண்மைதான். 32% காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அதைக் கருத்தில்கொண்டுதான் வொர்க் பிரஷர் அதிகரிக்காதபடி வேலைகளைப் பிரித்து வழங்குகிறோம். எல்லோருக்கும் `வீக்லி ஆஃப்' கொடுக்கிறோம். காவலர்கள் எண்ணிக்கைக்குத் (Actual Strength) தகுந்தபடிதான் வேலையையும் எதிர்பார்க்கிறோம். 100% பூர்த்தியாகியிருந்தால் இன்னும் எவ்வளவோ செய்திருப்போம். இருப்பினும், இன்னும் சில மாதங்களில் காலிப் பணியிடங்களெல்லாம் நிரப்பப்படவிருக்கின்றன. 400, 500 காவல்துறை அதிகாரிகள் வருவார்கள். ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு 10 பேர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.’’
``இருசக்கர வாகன ஓட்டிகளைத்தான் அதிகம் கார்னர் செய்வதாகவும், அபராதம் விதிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்களே?’’
``ஆட்டோ டிரைவர் யூனிஃபார்ம் போடாததும் தவறுதான், டூ வீலர் ஓட்டுநர் ஹெல்மெட் போடாமல் இருப்பதும் தவறுதான். ஆனால், யூனிஃபார்ம் போடாத ஆட்டோ டிரைவரால் விபத்து ஏற்படப்போவதில்லை. அதேசமயம் ஹெட்மெட் போடாததால் விபத்துகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் ஹெல்மெட்டுக்கும், நோ என்ட்ரிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.’’
``மக்கள்மீதான அக்கறையாக என்றில்லாமல், வருமான நோக்கோடு அபராதம் விதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்களே?’’
``அரசுக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக இத்தனை வழக்குகள் போடுகிறோம் என்று நினைக்கக் கூடாது. 8,000 வழக்குகள் பதிந்திருக்கிறோம் என்றால், அத்தனை பேரையும் ரீச் செய்து, ஒழுங்குபடுத்தியிருக்கிறோம். விபத்துகள் நேர்வதிலிருந்து பாதுகாத்து, விழிப்புணர்வு வழங்கியிருக்கிறோம் என்றுதான் பார்க்க வேண்டும். தவற்றுக்குச் சிறிய தண்டனைதான் அபராதம்.’’

``ஒருவருக்கு பயன்படுத்திய `ஆல்கஹால் டெஸ்ட் ஸ்ட்ரா'வையே மற்றொருவருக்கும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்களே?’’
``அது மிகவும் தவறான குற்றச்சாட்டு. ஆல்கஹால் டெஸ்ட் ஸ்ட்ராவை ஒருவருக்கு ஒருமுறைதான் பயன்படுத்துகிறோம். அது `டிஸ்போசபல் ஸ்ட்ரா. பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம்.’’
``முறையான போர்டுகள் இல்லாமை, மழைநீர் வடிகால் பணிகளால் மாற்றப்பட்ட சாலைகள் போன்ற காரணத்தால் தவறுதலாக விதிமுறைகளை மீறிவிட்டாலும் கடுமையாக அபராதம் விதிக்கப்படுவதாக பொதுமக்கள் சிலர் தெரிவிக்கிறார்களே?’’
``நாங்கள் முறைப்படி பிரஸ்நோட் கொடுக்கிறோம். அறிவிப்பு வழங்குகிறோம். மாற்றம் செய்யப்பட்ட வழிகளில் ஃபிளெக்ஸ், போர்டு வைத்து எச்சரிக்கிறோம். ஆனால், இந்த வழியாகப் போகக் கூடாது என்று தெரிந்தே 98% மக்கள் `ராங்சைடில்' செல்கிறார்கள். வேண்டுமென்றே சாலை விதிகளை மீறுகிறார்கள்.’’
`` `Immediate fine, Immediate pay' முறை இருக்கிறதா... தற்போது பணம் இல்லை; பிறகு கட்டிக்கொள்கிறோம் என்று சொன்னாலும் வண்டியை விடாமல் Paytm payment செய்தாக வேண்டும் எனப் பல இடங்களில் அதிகாரிகள் கறார் காட்டுகிறார்களே?’’
``அப்படியெல்லாம் இல்லை; உடனடியாக கட்டவேண்டும் என்ற கட்டாயமில்லை; அப்படி உத்தரவிடவுமில்லை; அப்படிப் பார்த்தால் இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட தொகையில் 50%தானே வசூல் செய்திருக்கிறோம்... அதேசமயம், சிலர்மீது ஏற்கெனவே பல வழக்குகல் இருந்து அபராதம் கட்டாமல் தொடர்ந்து பெண்டிங் வைத்திருப்பார்கள். அதனால், லைசென்ஸ் சஸ்பென்ஷன் ஆகும் என்று சொல்லி அவரை ஸ்ட்ரிக்ட்டாகக் கட்ட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியிருப்பார்கள்.’’

``தமிழகத்தின் பல இடங்களில் கார் வைத்திருப்பவருக்கு `ஹெல்மெட் அணியவில்லை' எனக் கூறி ஆன்லைனில் அபராத ரசீது செல்கிறதே, இந்தக் குளறுபடி எப்படி நிகழ்கிறது?’’
``அவையெல்லாம் ஆட்டோமெட்டிக் கேமராக்கள் (Automatic Camera) மூலம் போடப்பட்ட அபராதம். ANPR (Automatic Number Plate Recognition) சிஸ்டம் சென்னையில் 15 இடங்களில் இருக்கிறது. அதைவைத்து Wrong side, No helmet போன்ற விதிமீறல்களை இந்தத் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பிடிக்கிறோம். உதாரணத்துக்கு, ஹெல்மெட் போடாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டியின் நம்பர் பிளேட்டை கேமரா ரீட் செய்யும்போது, தவறுதலாக ஒரு எண் மாறினாலும்கூட இருசக்கர வாகனத்துக்கு பதிலாக அந்த எண் கொண்ட கார் பதிவாகிவிடும். அதை முறையாகச் சரிபார்த்து திருத்த வேண்டிய (Validate) அதிகாரிகள், சில சமயங்களில் கவனிக்காமல் `ஃபைன் ரெசிப்ட்டை' கார் உரிமையாளருக்கு அனுப்பிவிடுகிறார்கள். இது மேன்மேட் மிஸ்டேக்கும்தான். இந்தத் தவறு இனிமேல் நடக்காதபடி விரைவில் அனைத்தையும் சரிசெய்வோம்.’’
``அபராதம் அதிகரிக்கும்போது, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?’’
``அபராதம் அதிகரிக்கும்போது, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என அப்போதே நாங்கள் யூகித்தோம். அசோக் நகர் போன்ற இடங்களில் அப்படித் தவறும் நிகழ்ந்திருக்கிறது. உடனடியாக, அனைத்துக் காவல்துறை அதிகாரிகளையும் அழைத்து, ஒரு சிலரின் தவறால் ஒட்டுமொத்த டிபார்ட்மென்ட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என ஸ்ட்ரிக்டாக எச்சரித்து அனுப்பியிருக்கிறோம். மீறும் அதிகாரிகள்மீது துறைரீதியிலான நடவடிக்கையும் எடுக்கிறோம்.’’
``பணியிலிருக்கும் அதிகாரிகளுக்கு Body Cam கொடுக்கப்பட்டிருக்கிறதே... அதை முறையாகப் பயன்படுத்தினாலே அதிகாரிகள், வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள் வெளிப்பட்டுவிடுமே?’’
``ஆம். ஒரு வழக்கு பதிவுசெய்யும்போது, எப்படி வழக்கு பதியப்படுகிறது, வாகன ஓட்டிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள், காவல்துறை அதிகாரி எப்படி நடந்துகொள்கிறார் என அனைத்தையும் பதிவுசெய்யும் நோக்கத்துடன்தான் Body Cam கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும், Drunk and Drive Cases-ல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் செய்தவற்றை மறைத்து, காவல் அதிகாரிகள்மீது தவறு உள்ளதுபோல மொபைலில் வீடியோ எடுத்து போட்டுவிடுகிறார்கள். இது போன்ற சமயத்தில் காவலர்களின் பாதுகாப்புக்கும்கூட இந்த Body Cam பேருதவியாற்றுகிறது. அதேசமயம், மக்களிடமிருந்து அதிகாரி `மிஸ் பிகேவ்' பண்ணியதாக கம்ப்ளெயின்ட் வந்தால், காவல் அதிகாரியிடம் வீடியோ ரெக்கார்ட் கேட்போம். அவர்கள் ரெக்கார்ட் செய்யாத பட்சத்தில், ஏன் Body Cam பயன்படுத்தவில்லை எனக் கேட்டு சம்பந்தப்பட்ட காவலர்கள்மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கிறோம்.’’
``பல இடங்களில் காவல்துறை அதிகாரிகளே போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல், ஹெல்மெட் போடாமல் செல்கிறார்களே... அவர்களுக்கு அபராதம்விதிக்கப்படுகிறதா?’’
``ஆம். அபராதம் விதிக்கிறோம். அபராதம் மட்டுமல்லாமல் துறைரீதியிலான நடவடிக்கையையும் மேற்கொள்கிறோம். பொதுமக்களே புகைப்படம் எடுத்து, ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் டேக் செய்து எங்களிடம் புகார் தெரிவிக்கிறார்கள். ஊடகங்களில் பத்திரிகையாளர்களும் செய்தி போடுகிறார்கள். அதற்கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்.’’
``அதிகபட்ச அபராத விதிப்பால் தற்போது போக்குவரத்து விதிமீறல்கள், வாகன விபத்துகள் குறைந்திருக்கின்றனவா?’’
``It's too early. புதிய அபராதம் விதித்து முழுவதுமாக ஒரு மாதம்கூட ஆகவில்லை. இதற்கு நிறைய கால அவகாசம் தேவை. அதன் பிறகு `சயின்டிஃபிக்' முறையில் ஆய்வுசெய்து முடிவைத் தெரிவிப்போம்.’’
`` `அதிக அபராதம் விதிக்கும் பணத்தில், அரசே இலவச ஹெல்மெட் கொடுக்கலாம்' என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஐடியா தருகிறார்களே... உங்கள் ரியாக்ஷன்?’’
``கொடுக்கலாம். ஆனால், இதனால் அரசுக்குக் கூடுதல் செலவு (Big Expenditure) தான் அதிகரிக்கும். முதலில் இது மக்களின் Own Responsibility. காவல்துறைக்கு, அபராதத்துக்கு பயந்து ஹெல்மெட் அணியாமல், தங்களின் உயிர்ப் பாதுகாப்புக்காக அணிய வேண்டும் என்கிற எண்ணம் பொதுமக்களிடம் வர வேண்டும்.’’
`` `அதிகபட்ச அபராதத்தால் மட்டும் போக்குவரத்து விபத்துகளை தவிர்த்துவிட முடியாது. சாலை வசதிகளையும் முறையாகச் செய்ய வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறதே!’’
``உண்மையாக இருக்கலாம். ஆனாலும், அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு... இருக்கின்ற கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.’’