Published:Updated:

`இது டிரெய்லர்தான்; இனிமேல்தான் மெயின் பிக்சர்' - வடபழனி கோயில் இடத்தை மீட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 ஏக்கர் இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப்சிங் பேடி முன்னிலையில் அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை சாலிகிராமம் காந்தி நகரில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.250 கோடியாகும். இந்த இடத்தில் ஒரு பகுதியில் பெண்கள் விடுதி கட்டப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இடத்தில் கழிவுநீர், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இந்த இடத்தை ஆக்கிரமித்த சிலர் வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். மேலும் சமூகவிரோத செயல்களும் நடந்துவந்தது.

கோயில்
கோயில்

இந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்த தகவல் அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்துக்குச் சென்றதும் உடனடியாக இடத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்திப்சிங் பேடி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், வடபழனி கோயில் துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்றனர். வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன், முகமது பரகத்துல்லா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இடத்தை மீட்ட பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ``தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்துக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டிருக்கிறது. வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான 5.5 ஏக்கர் ஆக்கிரப்பு நிலம் இன்று மீட்கப்பட்டிருக்கிறது.

`போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவல்’-வெளிநாட்டுக்குக் கடத்தவிருந்த கோடியக்கரை கோயில் சிலைகள் மீட்பு!
அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த இடத்தில் பெண்கள் விடுதி செயல்பட்டு வந்திருக்கிறது. மூடப்பட்ட அந்த விடுதியை விரைவில் செயல்படும். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நீங்கள் பார்த்தது டிரெய்லர்தான். விரைவில் மெயின் பிக்சரைப் பார்ப்பீர்கள்" என்றார்

அடுத்த கட்டுரைக்கு