Published:Updated:

சென்னைக்கு 2-வது விமான நிலையம்: பெருகும் ஆதரவும், கிளம்பும் எதிர்ப்பும்?!

விமான நிலையம்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இறுதித் தேர்வாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், கூடவே எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

சென்னைக்கு 2-வது விமான நிலையம்: பெருகும் ஆதரவும், கிளம்பும் எதிர்ப்பும்?!

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இறுதித் தேர்வாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், கூடவே எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

Published:Updated:
விமான நிலையம்

ஏன் இரண்டாவது விமான நிலையம்?

சென்னை மீனம்பாக்கத்திலுள்ள பன்னாட்டு விமான நிலையம், டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவு சரக்குகளைக் கையாளும் தளமாகவும், மிக அதிகமான பயணிகள் வந்து செல்லும் தளமாகவும் விளங்குகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாண்டுவருகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். சுமார் 400 முதல் 500 வரையிலான விமானங்களும் வந்து போகின்றன.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்த நிலையில், நாளுக்கு நாள் உள்நாடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விமான நிலையத்துக்குப் படையெடுக்கும் பயணிகளால் போக்குவரத்து நெரிசலும், குறித்த நேரத்துக்கு விமான நிலையத்தை அடைய முடியாத சூழலும் ஏற்பட்டுவருகிறது. மேலும், தொழில்துறை வளர்ச்சி போன்ற காரணங்களால், சென்னையை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பிரச்னைகளைச் சரிக்கட்ட சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. இருப்பினும், கூடுதலாக மற்றொரு விமான நிலையத்தை அமைத்தால்தான் எதிர்காலத்தில் இட நெருக்கடியைச் சமாளிக்க முடியும், அதுதான் தொலைநோக்குத் திட்டமாக இருக்கும் எனக் கருதி, கடந்த பல ஆண்டுகளாகவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துவந்தது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம்:

அந்த நிலையில், சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர், பட்டாளம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பன்னூர் ஆகிய நான்கு இடங்களைத் தமிழ்நாடு அரசு தேர்வுசெய்யது. பின்னர், இந்திய விமான நிலைய ஆணையக்குழுவினர் கள ஆய்வு நடத்தி பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை இறுதி செய்தனர். பன்னூரில், 4,500 ஏக்கர் நிலத்தையும், பரந்தூரில், 4,791 ஏக்கர் நிலத்தையும் கண்டறிந்து இரண்டு இடங்களிலும் விமான ஓடுபாதைகளுக்குப் போதுமான இடமும் வான்வெளியும் இருப்பதாக மத்திய அரசிடம் முன்மொழிந்தனர்.

கனிமொழி
கனிமொழி

நாடாளுமன்றத்தில் அறிவிப்பு:

அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26-ம் தேதி தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கு இரண்டு இடங்களில் இறுதியாக ஓர் இடத்தை தேர்வுசெய்வது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, தி.மு.க எம்.பி கனிமொழி, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், ``காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவிருக்கிறது" என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின்

வரவேற்பும், எதிர்ப்பும்:

இந்தத் திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் (One Trillion Dollar) பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்" எனப் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அதேபோல, `பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசின் வசம் 4,000 ஏக்கர் நிலம் தயாராக இருப்பதாகவும், இன்னும் 1,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியிருப்பதாகவும்' தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விமான நிலையம் மட்டும அமைந்தால் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

அதேசமயம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பயன்படும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மீனம்பாக்கம் விண்ணூர்தி நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்துவரும் நிலையில், அவசர அவசரமாகப் புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன வந்தது... உண்ண உணவு தரும் விளைநிலங்களையும், குடிப்பதற்கு நீர் தரும் நீர்நிலைகளையும், மக்கள் வாழும் வீடுகளையும் அழித்தொழித்து அதன்மீது ஓடுபாதைகளையும், தொழிற்சாலைகளையும், வணிக வளாகங்களையும் அமைப்பதை வளர்ச்சி என்று அரசே கூறுவதை எப்படி ஏற்க முடியும்... நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் தனியார் கட்டடங்களை இடிப்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு, விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்கு, தானே நீர்நிலைகளை அழிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்?" எனச் சரமாரியாக எதிர்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சீமான்
சீமான்

மேலும், ``மக்களின் எதிர்ப்பையும் மீறி, 3,000 ஏக்கர் விளைநிலங்களையும், 30-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விண்ணூர்தி நிலையம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது" என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பல சமூக ஆர்வலர்கள், திட்டத்தை இறுதிசெய்யும் முன்பு அபதப் பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!