Election bannerElection banner
Published:Updated:

மோடி அரசை விமர்சிக்கும் சேத்தன் பகத்: ’’வெளிநாட்டு ஆயுதங்கள் வாங்கலாம்... ஆனால், தடுப்பூசி கூடாதா?''

சேத்தன் பகத் - மோடி
சேத்தன் பகத் - மோடி

''உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியா எனும்போது உலகம் முழுக்கத் தயாரான அத்தனை தடுப்பூசிகளிலும் ஒரு பங்கை நம வாங்கியிருக்கவேண்டும். ஆனால், நாம் அதை செய்யத்தவறிவிட்டோம்.''

முன்னர் மோடியின் ஆதரவாளராக இருந்த சேத்தன் பகத் தற்போது மோடி அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசு செய்திருக்கும் குழப்பங்களை தொடர்ந்து ட்வீட் செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் சேத்தன் பகத்.

அவர் எழுதியிருப்பதன் சுருக்கம் இங்கே!

''தடுப்பூசிகளைத் தயாரிக்கிறோமோ, இறக்குமதி செய்கிறோமோ… ஆனால், உடனடியாக இந்தியாவுக்குள் தடுப்பூசிகள் வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் தடுப்பூசிகள் போடப்படவேண்டும். அப்போதுதான் நாம் அபாயகரமான இந்த சூழலில் இருந்து வெளியே வரமுடியும். உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியா எனும்போது உலகில் தயாரான அத்தனை தடுப்பூசிகளிலும் ஒரு பங்கை நாம் வாங்கியிருக்கவேண்டும். ஆனால், நாம் அதை செய்யத்தவறிவிட்டோம். இப்போது தடுப்பூசிகளை வாங்க என்னவெல்லாம் வழிகள் இருகிறதோ அது அத்தனைக்கும் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும். முக்கியமாக ஈகோ இல்லாமல்...

இன்றைய உலகம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பு உபகரணங்கள், முக்கியமான தொழில்நுட்பங்கள் என அனைத்தும் வெவ்வேறு இடங்களில் இருந்து வருகிறது. ஒரு நாடு நன்றாக இருக்க எல்லோருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். இன்னொரு நாட்டோடு வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. ஈகோ பார்க்கக்கூடாது. இப்போதாவது இந்தப்பாடத்தை நாம் கற்றுக்கொள்வோம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மிகச்சிறந்த தடுப்பூசியாகச் சொல்லப்படும், பல வளர்ந்த நாடுகளில் போடப்படும் Pfizer தடுப்பூசியை நாம் நிராகரித்தோம். 2020 டிசம்பரிலேயே Pfizer நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டது. ஆனால், இந்தியாவோ இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ளச்சொன்னது. பொறுத்திருந்து பார்த்த Pfizer தனது விண்ணப்பத்தை 2021 பிப்ரவரியில் விலக்கிக் கொண்டது. 2020 டிசம்பரிலேயே Pfizer-க்கு அனுமதி அளித்திருந்தால் எவ்வளவு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.

நம்மிடம் தெளிவான திட்டம் வேண்டும். தடுப்பூசிகளை எப்படி வாங்கப்போகிறோம், எத்தனை கோடி மக்களுக்கு போடப்போகிறோம், எப்போதைக்குள் போட்டுமுடிப்போம் என்கிற செயல்திட்டம் வேண்டும். இப்போதும் வெறுமனே முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது, சவாலானதாக இருக்கிறது என்கிற கதைகள் எல்லாம் சொல்லக்கூடாது.

இப்போது நமக்கு உலகின் உதவி தேவைப்படுகிறது. உதவி தேவைப்படுபவன் ஈகோ பார்க்கக்கூடாது. ஈகோ யாருக்கும் எந்த காலத்திலும் பயன்பட்டதில்லை. இப்போதும் ஈகோ பார்த்தால் அல்லது பொய் பெருமையோடு திரிந்தால் நம்மால் வெற்றிபெற முடியாது.

Pfizer, Moderna தடுப்பூசிகள்தான் உலகின் சிறந்த தடுப்பூசிகள் எனும்போது அவை ஏன் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இந்தியர்களுக்கு சிறந்ததைப் பெறும் தகுதியில்லயா?! போருக்குத்தேவையான ராணுவ உபகரணங்களை நாம் வெளிநாட்டில் இருந்து வாங்குவதில்லையா… அதுபோன்ற போர் சூழல்தானே இது. ஏன் இந்த சூழலிலும் இந்தியாவில் மட்டுமே தடுப்பூசிகள் தயாரிக்கப்படவேண்டும்?!

சேத்தன் பகத் ட்வீட்
சேத்தன் பகத் ட்வீட்

நாம் பறக்கும் விமானங்கள், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், மருத்துவ உபகரணங்கள், நம் எல்லையைக் காக்கும் ராணுவ ஆயுதங்கள் என எல்லாமே வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவைதான். அதேப்போல் தடுப்பூசிகளும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தடுப்பூசிகள் சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், போதுமானதாக இல்லாதபோது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கவேண்டும்.

இப்போதும் இந்தியாவுக்கு Pfizer போட்ட நிபந்தனைகள் என்ன தெரியுமா என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் யாருக்கும் எந்தப்பயனும் இல்லை. Pfizer-க்கு நாம் தேவையானதைவிட, நமக்கு Pfizer தேவையாக இருக்கிறது. தேசப்பற்றை சுதந்திர தினத்துக்கு ஒதுக்கிவைத்துவிட்டு இப்போது உயிர்களைக் காக்க என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்’’ என்று எழுதியிருக்கிறார் சேத்தன் பகத்!

எழுத்தாளர் சேத்தன் பகத்தின் கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலர் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு