இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருக்கும் பீகார் மாநிலம் உட்பட மதுவிலக்கு அமல்படுத்தப்படாத மாநிலங்களிலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன. போலி மது மட்டுமின்றி, பல மாநிலங்களில் அரசே நடத்தும் கடைகளின் மதுவாலும் குடும்பங்கள் சீரழிந்துவருகின்றன. இதனாலே கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துவருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டபோது, கள்ளச்சாராயம் உட்பட பிற போதைப்பொருள்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பார்த்த பிறகு மதுவிலக்கை அமல்படுத்த தனக்கு தைரியமில்லை என்று கூறியிருக்கிறார்.
ராய்பூரில் நேற்று `போதையில்லா சத்தீஸ்கர்' பிரசார நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பூபேஷ் பாகல், ``போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல் என்பது பொதுவாகவே சிறுவயது அல்லது இளமைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் பொழுதுபோக்காக சிகரெட்டில் ஆரம்பித்து பின்னர், அதுவே பழக்கமாகிவிடுகிறது. மன அழுத்தம் இருக்கும்போது சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு மாலையில் மன அழுத்தம் அதிகரிக்கும்போது மது அருந்தத் தொடங்குகிறார்கள். இறுதியில் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.

போதைப் பழக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் ஒருபோதும் அது நல்லதல்ல. அது தீமையை மட்டுமே ஏற்படுத்துகிறது. இது அனைவருக்குமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்லாமல் இது தனி நபர், குடும்பம் என ஒட்டுமொத்த சமூகத்தையுமே பாதிக்கிறது. லாக்டவுனின்போது அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. ஆனாலும் மக்கள் பல்வேறு வழிகளில் போதைப்பொருள்களை ஏற்பாடு செய்ததைக் காண முடிந்தது.
அதுமட்டுமல்லாமல், லாக்டவுனின்போது, போலி மது, பிற போதைப்பொருள்களால் மக்கள் இறப்பதைக் கண்ட பிறகும், மதுவிலக்கை அமல்படுத்த எனக்கு தைரியமில்லை. உயிரிழப்பை ஏற்படுத்தும் எதையும் நான் செயல்படுத்த விரும்பவில்லை. போதைப்பொருள்களைத் தடைசெய்யும் விஷயத்தில், ஆண்கள் மட்டுமே அவற்றை உட்கொள்வதைப்போல பெண்கள் அதைத் தடைசெய்யச் சொல்கிறார்கள்.

மேலும் மதுவுக்குத் தடை விதிப்பது குறித்து பெண்களிடம் கேட்டால், இரு கைகளையும் அவர்கள் உயர்த்துவார்கள். அதுவே புகையிலை, வெல்லத்தாலான குடகுவை (gudaku) தடைசெய்யலாமா என்றால் பெண்கள் கைதூக்குவதில்லை. எனவே, மதுவுக்கு எதிராக மட்டுமல்லாமல் அனைத்து வகையான போதைப்பொருள்களுக்கு எதிராகவும் பிரசாரம் இருக்க வேண்டும். மேலும், மக்களின் ஆதரவுடன் இந்த சமூகத் தீமைக்கு முடிவு கட்ட வேண்டும்" என்றார்.
சத்தீஸ்கரில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, `ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.