கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது கோயில் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு. அதன் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. அதனடிப்படையில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் கோயிலை நிர்வகித்துவருகின்றனர். தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், பக்தர்கள் கனகசபைமீது ஏறி நின்று தரிசனம் செய்வதற்குச் சட்ட நடவடிக்கையை எடுத்தது. இந்த நிலையில்தான், இன்றும் நாளையும் கோயிலில் ஆய்வு நடத்தப்படும் என்றும், 2014-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை கோயிலின் கணக்கு வழக்குகள் மற்றும் செலவுகள் குறித்த ஆவணங்களைத் தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில் சட்டபூர்வமாகக் கோயிலில் அனைத்தும் செயல்படுத்தப்படுகின்றனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்போவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த தீட்சிதர்கள், ``உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை எங்களைக் கட்டுப்படுத்தாது" என்று பதிலளித்திருந்தனர். இந்த நிலையில்தான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். அவரை வரவேற்ற தீட்சிதர்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அவர்களுடன் சென்ற அமைச்சர் கனகசபைமீது ஏறி நின்று நடராஜரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசினார். அப்போது கோயிலின் நிர்வாகம், பூஜை முறைகள் குறித்து அமைச்சருக்கு தீட்சிதர்கள் விளக்கமளித்தனர். அதேபோல கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விளக்கமளித்தனர். அவர்களிடம், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்தும், இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறிய அமைச்சர், ``எதையுமே தடுப்பதால்தான் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள். கோயிலுக்கு ஆய்வுசெய்ய வரும் குழுவுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள்" என்று கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "தீட்சிதர்களின் கோரிக்கைகளையும் அரசின் நிலைப்பாடு குறித்தும் பகிர்ந்துகொண்டோம். இந்து அறநிலையத்துறை சட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும், எந்த அளவிலும் சிறு மனக்கஷ்டம் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் முதல்வரின் அன்பான வேண்டுகோள். சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமாக நல்ல ஒரு சுமுக தீர்வு ஏற்படும் என எனக்குத் தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாகரீதியான அலுவல் ஆய்வை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை குழு இன்று காலை கோயிலுக்கு வந்தனர். இந்தக் குழுவில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நிலங்களுக்கான கடலூர் துணை ஆணையரும், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளருமான சி.ஜோதி, பழநி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழு ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களைக் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தீட்சிதர்கள், "நீங்கள் சட்டரீதியாக வந்தால் உங்களுக்குக் கணக்கு வழக்குகள் காண்பிக்கப்படும். எங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது. எங்களிடம் கணக்கு வழக்குகள் முறையாக இருக்கின்றன. உங்களிடம் நாங்கள் கணக்கு காண்பிக்க முடியாது. நீங்கள் நீதிமன்றம் மூலம் வாருங்கள்" என மறுப்பு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பேசிய தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர், ``கணக்கு வழக்குகளை உங்களுக்குக் காட்ட வேண்டும் என்று எந்த அரசாணையும் எங்களுக்கு வரவில்லை. இதற்கான பதிலை நாங்கள் முன்பே அளித்துவிட்டோம். நேற்றைய தினம் வந்திருந்த அறநிலையத்துறை அமைச்சரிடம் நாங்கள் கூறிவிட்டோம். நீங்கள் திரும்பிச் செல்லலாம்" எனக் கூறினார். ஆனாலும் இந்து அறநிலையத்துறையினர் கோயிலுக்குள் முகாமிட்டிருப்பதால் கோயில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
மேலும், `இது சம்பந்தமாக ஆலோசனை செய்துவருகிறோம். இன்னும் ஆய்வு முடியவில்லை’ என விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக்கோயில் என்று உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அந்தக் கோயிலில் புகார்களை விசாரிக்க அறநிலையத்துறை ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனு நீதி, மனு தர்மம்" என்றார்.