Published:Updated:

வயிற்று வலி, எடை குறைவு...! - சிதம்பரத்துக்கு சிகிச்சையளிக்க தாமதம் ஏன்?

தொடர் வயிற்று வலியால் சிதம்பரம் அவதிப்படுகிறார்.

சிதம்பரம்
சிதம்பரம்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ பதிந்த வழக்கில், அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை பதிந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால், சிறையில் 65 நாள்களுக்கு மேலாக சிதம்பரம் இருக்கிறார். தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் சிதம்பரம் இருக்கிறார். சிறை வாழ்க்கையும் அமலாக்கத்துறையின் விசாரணை முறையும் சிதம்பரத்தை ரொம்பவே புரட்டிப் போட்டுள்ளது.

திகார் சிறை
திகார் சிறை

சிதம்பரத்துக்குச் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்கள் இருந்ததால் சிறையில், தனக்கு வீட்டு உணவு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். ஆனால், நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதித்தது. இந்த நிலையில், அவரை குடல் அயற்சி நோய் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, இந்த நோய் இருப்பது தெரியவந்தது.

அமலாக்கத் துறை `அதிரடி' திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்?

இந்த நோய் தாக்கினால் வாய் முதல், ஆசனவாய் வரை பல பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், தொடர் வயிற்று வலியால் சிதம்பரம் அவதிப்படுகிறார். தொடர் காய்ச்சலும் இருக்கிறது. அவரின் எடை 73 கிலோவில் இருந்து 68 கிலோவாக குறைந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை அலுவலகம்
சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை அலுவலகம்

தற்போது, கான் மார்க்கெட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் வைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகு, 4 முறை உடல் உபாதை காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். குடல் அயற்சி நோய் காரணமாக ஏதாவது ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவர் விரைவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நோயின் தீவிரத்தை`பயாப்சி' பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.