வேலூர்: வருவாய் இழப்பு; `சிந்தாமல் சிதறாமல்’ திட்டங்கள்! - முதல்வர் பழனிசாமி
``பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், மக்களுக்குத் தேவையான திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் எவ்விதத் தொய்வும் ஏற்படாமல் செய்துகொண்டிருக்கிறோம்’’ என்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேலூர் வந்தார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர், மூன்று மாவட்டங்களுக்கான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாகவும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், ``கொரோனா வைரஸ் பரவலை முழுமையாகத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு அறிவித்த வழிமுறைகளை, இந்த மூன்று மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் கடைப்பிடித்ததன் காரணமாக வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 3,55,449 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், இதுவரை 2,96,171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6,123 பேர் இந்த நோய்க்கு மரணித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 120 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 44 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 96 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 116 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், மக்களுக்குத் தேவையான திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் எவ்விதத் தொய்வும் ஏற்படாமல் செய்துகொண்டிருக்கிறோம்.
விநாயகர் சதுர்த்தி விழாவில், உயர் நீதிமன்றத் தீர்ப்பு கடைப்பிடிக்கப்படும். மத்திய அரசாங்கம் ஏற்கெனவே வெளியிட்டிருக்கும் வழிமுறைகளையும் அரசு நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஏதாவது உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்க மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் 648 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்’’ என்றார்.