Published:Updated:

ஏழு தமிழர்கள் விடுதலை: `2000 -ல் நடந்தது என்ன?’ - ஸ்டாலினுக்கு ஃப்ளாஷ்பேக் சொன்ன முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் என்ன நடந்தது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்திருக்கிறேன். கோவை மக்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. இந்தச் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி
கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தொடர் தோல்வி! - தற்கொலை செய்த கோவை இளைஞர்

அரசு இந்த விஷயத்தையெல்லாம் கவனித்து, அதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடந்துவருகிறது. இன்டர்நெட் பயன்பாடு அசுரவேகத்தில் வளர்ந்து வரும்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களைக் குறிவைத்து இணையவழி விளையாட்டுகள் இயங்கிவருகின்றன.

பொதுமக்களின் நன்மையைக் கருதி, இது போன்று அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடைவிதிக்க முடிவெடுத்திருக்கிறோம். மேலும், அவற்றை நடத்துபவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேசிவருகிறார். 2000-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூடியது. நளினியைத் தவிர்த்து மற்றவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன என்று அதில் முடிவெடுத்தனர்.

ஏழு தமிழர்கள்
ஏழு தமிழர்கள்

கோரிக்கையை நிராகரிப்பது என்றால், நீதிமன்றம் சொல்வதை அமல்படுத்துவோம் என்றுதான் பொருள். அப்போது தண்டனை கொடுக்கலாம் என முடிவெடுத்துவிட்டு, இப்போது விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். ஏழு பேர் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருவது அ.தி.மு.க அரசுதான். நாங்கள்தான் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம். அது ஆளுநரின் அதிகாரத்துக்குட்பட்டது என்பதால், அவர்தான் முடிவெடுக்க முடியும்.

தற்போதைய நிலவரப்படி ஊர்வலம் நடத்த சட்டரீதியாக அனுமதிக்க முடியாது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான். பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுக்கவில்லை. பெயர் இல்லாத போஸ்டர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எங்களது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக கவனிக்கப்பட்டுவருகிறது. கொரோனா குறைந்துவருவதால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அது எங்களின் கவனத்துக்கு வந்ததால், `பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்’ என அறிவித்தோம். அனைத்து விஷயங்களையும் கவனித்துவருகிறோம். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்” என்றார். முன்னதாக கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு