Published:Updated:

பேரறிவாளன் வழக்கு: ``மாநில உரிமை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது!" - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

`மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைய, எந்த எல்லைக்கும் சென்று போராடத் தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம்' என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பேரறிவாளன் வழக்கு: ``மாநில உரிமை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது!" - ஸ்டாலின்

`மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைய, எந்த எல்லைக்கும் சென்று போராடத் தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம்' என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலைசெய்து அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``உச்ச நீதிமன்றம் 32 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. இது நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு. தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மனிதாபிமான மற்றும் மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும். அதேநிலையில், மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இது இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும். மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என நீதிபதி கூறியிருப்பது மிகவும் முக்கியமானது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

மத்திய அரசு இது குறித்து கேட்கத் தேவையில்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இது தமிழ்நாடு அரசால் இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லைக்கும் சென்று போராடத் தயங்காத அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணம். சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக் காலம் காட்டியிருக்கிறது. பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலையாக மட்டுமல்லாமல், கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாக அமைந்துவிட்ட இந்தத் தீர்ப்பு மீண்டும் வரலாற்றில் நினைவுகூரத்தக்கது'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``32 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலைக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism