Published:Updated:

‘மம்தா பாணி’ வேண்டாம்... உருமாறிய ஸ்டாலின்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து அவர்களை விடுதலை செய்யுங்கள், மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்க்கலாம்’’ என்று சிலர் சொன்னார்கள்.

‘மம்தா பாணி’ வேண்டாம்... உருமாறிய ஸ்டாலின்

இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து அவர்களை விடுதலை செய்யுங்கள், மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்க்கலாம்’’ என்று சிலர் சொன்னார்கள்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

மத்திய அரசு வெளியிடும் ஓர் அறிவிப்பை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சில நிமிடங்களில் கடுமையாகக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிடுகிறார் என்றால், எல்லோரும் அடுத்து மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள். மம்தாவைப் போலவே கடுமையான வார்த்தைகளால் ஸ்டாலினும் மத்திய அரசைக் கண்டிப்பார். அது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரை! மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு உருமாறிய ஸ்டாலினைப் பார்க்க முடிகிறது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன் போன்றவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்தாலும், ‘ஒன்றிய அரசு’ சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும். பக்குவமான வார்த்தைகளையே உதிர்க்கிறார் ஸ்டாலின். தி.மு.க வட்டாரத்தில் இதனால் ஒருவிதத் திகைப்பு தெரிவது உண்மை.

முதல்வராகப் பதவியேற்றதும் ஸ்டாலின் முதல் கடிதம் எழுதியது பிரதமர் மோடிக்குத்தான். மே 7-ம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், தன் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன மோடிக்கு தனிப்பட்ட முறையில் நன்றியும் தெரிவித்திருந்தார். தமிழகத்துக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி எழுதப்பட்ட கடிதம் அது. ‘வரலாறு காணாத இந்தப் பேரிடரை எதிர்கொண்டு தேசத்தைக் காக்கும் உங்கள் முயற்சிக்கு என் முழுமையான ஒத்துழைப்பு உண்டு’ என்ற வார்த்தைகள் அதில் கவனமாகச் சேர்க்கப்பட்டிருந்தன. ஆக்சிஜன் கிடைத்தது.

‘ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரையும் விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. அரசியல் சட்டத்தில் இதற்குத் தெளிவான வழிகாட்டல்கள் இருக்கின்றன’ என்று சட்ட நிபுணர்களில் ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பிறகும், ‘`இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து அவர்களை விடுதலை செய்யுங்கள், மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்க்கலாம்’’ என்று சிலர் சொன்னார்கள். ஆனால், ஸ்டாலின் அப்படி ஒரு மோதல் மனநிலைக்குப் போகவில்லை. ‘இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் உடனடியாக முடிவெடுங்கள்’ என்று குடியரசுத் தலைவருக்குத்தான் கடிதம் எழுதினார்.

அதன்பின், ‘மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று மே 26-ம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையும், ‘லட்சத்தீவு ஆட்சியாளர் பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெற வேண்டும்’ என அடுத்த நாள் வெளியிட்ட அறிக்கையும் கூட மென்மையான வார்த்தைகளுடனே இருந்தன.

செங்கல்பட்டில் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி மையத்தைத் தமிழ்நாடு அரசுக்குத் தருமாறு கேட்டு மே 26-ம் தேதி மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும்கூட, ‘கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரும் மத்திய அரசுக்கு நன்றி’ என்றுதான் ஆரம்பிக்கிறது. மோடி அடிக்கடி சொல்லும் ‘சுயசார்பு இந்தியா’வை நினைவூட்டி, ‘அதனால்தான் நாங்கள் தடுப்பூசி தயாரிக்க இந்த ஆலையைக் கேட்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார் ஸ்டாலின்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்த முதல்வர் ஸ்டாலின், அதே நாளில் பிரதமர் மோடிக்கு இன்னொரு கடிதம் எழுதினார். ‘நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தது அந்தக் கடிதம்.

அதே ஜூன் 5-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகவும் ஒரு கடிதம் எழுதினார் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவராக ஏராளமான மேடைகளில் இதே எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசைக் காய்ச்சி எடுத்திருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துவந்து, ‘இதுதாங்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை’ என்று கிண்டல் செய்தது படு வைரலானது. முதல்வராக ஸ்டாலின் இப்படி எதையும் செய்யவில்லை. ‘எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடித்துச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணியை விரைவுபடுத்துங்கள். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்’ என்றுதான் கடிதம் எழுதினார்.

‘மம்தா பாணி’ வேண்டாம்... உருமாறிய ஸ்டாலின்

‘18-44 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசிக்கு நாங்கள் காசு தருகிறோம். சான்றிதழில் எதற்கு மோடி படம்’ என சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காள முதல்வர்கள் தங்கள் படத்தைப் போட்டுக்கொண்டனர். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. ‘நாங்களே தடுப்பூசியை வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாகத் தருகிறோம்’ என ஜூன் 7-ம் தேதி மோடி அறிவித்ததும் முதலில் நன்றி சொன்ன எதிர்க்கட்சி முதல்வர் ஸ்டாலின்தான்.

அடுத்த நாள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார். ‘தடுப்பூசி விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்து கொடுத்த அழுத்தம்தான் பிரதமரின் முடிவை மாற்றியது. இதேபோல கொரோனா காலத்தில் சிறு மற்றும் குறுதொழில் கடன் தவணைக்கும் சலுகை தர வலியுறுத்துவோம்’ என்றது அந்தக் கடிதம்.

முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஒரு விபத்து போல புயல் ஆய்வுக்கூட்டத்தில் பிரதமரைச் சந்தித்தார் மம்தா. பினராயி விஜயன் இன்னும் போய்ப் பார்க்கவில்லை. ஆனால், ஸ்டாலின் சென்று பார்க்கிறார். ஸ்டாலினின் அணுகுமுறை வேறுபாடு இதுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் மூன்று ரகம். மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் போல மத்திய அரசுடன் ஓயாமல் சண்டை பிடிக்கும் முதல்வர்கள் ஒரு ரகம். இந்த மோதல்களால் இவர்களுக்குத் தனிப்பட்ட ஆளுமைத்தன்மை கிடைக்கலாம். ஆனால், மாநிலத்துக்குத் தேவையானது கிடைக்காது. சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்கள் இன்னொரு ரகம். மாநிலத்தில் பா.ஜ.க-வுடன் மோதினாலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து காரியம் சாதித்துக்கொள்வார்கள். கிட்டத்தட்ட தங்களை பா.ஜ.க-வின் முதல்வர் போலவே பாவனை செய்துகொள்வார்கள்.

இந்த இரண்டு ரகங்களிலும் சேராதவர் நவீன் பட்நாயக். 21 ஆண்டுகளாக ஒடிஷா முதல்வராக இருக்கும் இவர், தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் அரசியல் மோதல்களில் ஆர்வம் காட்டுவதில்லை. தேர்தல் முடிந்ததும் நிர்வாகியாக மாறிவிடுவார். பா.ஜ.க லோக்கல் தலைவர்கள் அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தால், டெல்லியில் கூப்பிட்டு கண்டிப்பார்கள். அந்த அளவுக்கு நவீன் மதிக்கப்படுகிறார். எந்த ஒரு விஷயத்தையும் ஒடிஷாவின் நலன் சார்ந்தே பார்ப்பார்.

மற்ற இரண்டு பாதைகள் வேண்டாம் என, முதல்வரான பிறகு ஸ்டாலினின் அணுகுமுறையும் நவீன் பாணியில் மாறியிருக்கிறது. இது தமிழகத்துக்கு நல்லது!

*****
ராஜ்யசபாவில் ராஜ்ஜியம்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க-வின் தற்போதைய பலம் 7 எம்.பி-க்கள். அ.தி.மு.க உறுப்பினராக இருந்த முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மறைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை வரை உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்றதால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த வைத்திலிங்கம் தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். 2022 ஜூன் வரை அவருக்கான பதவிக்காலம் இருந்தது. இதேபோல 2026 ஏப்ரல் வரை பதவிக்காலம் இருந்த கே.பி.முனுசாமியும் ராஜினாமா செய்துள்ளார். இந்த மூவருமே வெவ்வேறு பதவிக்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மூன்று இடங்களுக்குமான இடைத்தேர்தல் தனித்தனியாகவே நடைபெறும். மூன்றிலுமே தி.மு.க சுலபமாக வெல்லும். எனவே, விரைவிலேயே 10 ராஜ்ய சபா எம்.பி-க்கள் தி.மு.க-வுக்கு இருப்பார்கள். அப்போது ராஜ்யசபாவில் நான்காவது பெரிய கட்சியாக தி.மு.க இருக்கும்.

‘`ராஜ்யசபாவில் பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை கிடையாது என்பதால், முக்கியமான விஷயங்களில் மாநிலக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். எனவே, பெரிய கட்சியான தி.மு.க-வுடன் சில விஷயங்களிலாவது இணக்கமாகச் செல்லவே பா.ஜ.க விரும்பும். வெளிப்படையாக தி.மு.க-வுடன் மத்திய அரசு மோதாது’’ என்கிறார்கள் டெல்லி அரசியல் புள்ளிகள் பலர்.