சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதையொட்டி, துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ''திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றிவருகிறது. கடந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாதங்களில் ரூ.68,375 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய்க்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன். பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. துபாயில் உள்ள தமிழர்களைச் சந்தித்து, சொந்த மண்ணில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தேன். துபாய் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.6,100 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் அதைச் சமாளிக்க சொத்து வரி உயர்வு தேவை. ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். மாநில வளர்ச்சியில் எந்தவித அரசியலும் செய்ய வேண்டாம்'' என்றார்.
சொத்து வரி உயர்வு குறித்து முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்காததால் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரியைத் திரும்ப பெற வேண்டும் என அதிமுக-வினர் முழக்கங்களை எழுப்பினர்.
