Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: `மக்களைத் தவறாக வழிநடத்துவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்!' - ஆளுநர் கிரண் பேடி

கிரண் பேடி
கிரண் பேடி

கவர்னர், பிரதமருக்கு எதிராக புதுச்சேரி மக்களைத் திசைதிருப்புவதை முதல்வர் நாராயணசாமி தவிர்க்க வேண்டுமென கவர்னர் கிரண் பேடி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறார் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது குற்றம் சுமத்தியிருக்கும் ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகிவருகின்றன. அந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முதல்வர் நாராயணசாமி, ``காங்கிரஸ் தொண்டனாக அந்த போராட்டத்தில் நான் கலந்துகொள்வேன். அதேசமயம் அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

முதல்வர் நாராயணசாமி - துணைநிலை ஆளுநர் கிரண் பேடி
முதல்வர் நாராயணசாமி - துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

அதன் தொடர்ச்சியாக தனது வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களுக்கு கிரண் பேடி எழுதியிருக்கும் திறந்த மடலில், ``ஆளுநர் அலுவலகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக முதல்வர் வெளிப்படுத்திய கருத்துகளின் வேதனையையும், அதிலுள்ள ஏமாற்றத்தையும் புரிந்துகொண்டிருக்கிறேன். நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக சட்டங்கள், விதிகள் ஆகியவற்றைக் கடுமையாகப் பின்பற்றி நியாயமான மற்றும் எல்லோரும் அணுகக்கூடிய நிர்வாகத்தை உறுதிசெய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்த அறிவுறுத்தல்படி ஆளுநர் அலுவலகம் செயலாற்றிவருகிறது.

இந்திய அரசாங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிதிச் செலவினங்கள் வரம்பு மீறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கொரோனா காலங்கள், புயல், மழை என தேவைப்படுகிற பிரச்னைகளில் ஆளுநர் அலுவலகம் தலையிட்டு நியாயமான, தகுதியான மக்களுக்கு பயனுள்ள நிர்வாகத்தை உறுதி செய்து தந்திருக்கிறது. குறிப்பாக, தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் கருத்துகள் அடங்கிய மனுவின் அடிப்படையில் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கலால் விதி மீறல்களைக் கண்டறிந்து, தற்போது சி.பி.ஐ விசாரித்துவருகிறது. ஒரு நிர்வாகியாக, ஆளுநராக எனது கடமைகளைச் சரிவரச் செய்திருக்கிறேன். இந்திய அரசாங்கத்தின் சட்ட விதிகளைப் பின்பற்றி நடக்கக்கூடிய ஆளுநர் அலுவலகத்தின் மீதும், பிரதமருக்கு எதிராகவும் புதுச்சேரி மக்களை தவறாக வழி நடத்துவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்.

புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’

நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இடைத்தரகர், கமிஷன் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது ஊழலை பெரிய அளவில் தடுத்திருக்கிறது. இது பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளித்து, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திருக்கிறது. நான் எனது கடமைகளைச் செய்தேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு