Published:Updated:

'புகைப்பட' விளம்பரங்களைத் தவிர்க்கும் ஸ்டாலின்! பல தரப்பின் வரவேற்பு 'சொல்வது' என்ன?

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தன்னுடைய படங்கள் அரசின் எந்தத் திட்டங்களிலும் இடம்பெறக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். அதன் பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்தே பல்வேறு விஷயங்களில் எதிர்க்கட்சிகளே பாராட்டும் அளவுக்குச் செயல்பட்டுவருகிறது. கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார் என்றால், பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை பா.ஜ.க கொறடா நயினார் நாகேந்திரன் வரவேற்று பேசியுள்ளார். இவை மட்டுமின்றி சட்டப்பேரவையில் தன்னைப் புகழக் கூடாது என்பது தொடங்கி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு பதிலளிப்பது வரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் கடைகளில் பணி செய்யும் தொழிலாளர்கள் உட்கார்வதற்கு இருக்கைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும், நல்லாசிரியர் விருதுச் சான்றிதழில் ராதாகிருஷ்ணன் புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருந்ததும் இணைந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய பையில் தமிழ்நாடு அரசின் இலச்சினை மட்டும் இடம்பெற்றிருந்ததோடு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பைகளில் இடம்பெற்ற முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களை நீக்க வேண்டாம் என உத்தரவிட்டது வரை தனது பெயரோ, புகைப்படமோ எங்கும் இடம்பெறக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அரசியல் முதிர்ச்சி என இதை தி.மு.க-வினர் பேசிவரும் அதேவேளையில் புகழ வேண்டாம் என்பதே புகழ்ச்சிக்காகத்தான் என பா.ஜ.க. உள்ளிட்ட சில எதிர்க்கட்சியினர் பேசிவருகிறார்கள். அரசுத் திட்டங்களில் புகைப்படங்களைப் பயன்படுத்துவது கருணாநிதி உட்பட தமிழ்நாட்டின் முதல்வர் அனைவரும் பின்பற்றியதுதான் என்றாலும், ஸ்டாலின் புகைப்படத்தைத் தவிர்ப்பதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.

ஸ்டாலின்: `புத்தகப்பையில் ஜெ., இ.பி.எஸ் படங்களே இருக்கட்டும்!' -  காரணம் பெருந்தன்மையா, நிதிநிலையா?

புகைப்படங்களை ஸ்டாலின் தவிர்ப்பதன் பின்னணி என்ன எனத் தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டோம். ``தி.மு.க ஸ்டைலே அவர்களின் தலைவர்கள் புகழுக்கு விரும்பாத பரிபூரணர்களாகவும், அவர்களைச் சுற்றி இருப்பவர்களே அவர்களைப் புகழ்பவர்களாகவும், அதைத் தடுக்க முடியாமல் தலைவர்கள் தவிப்பதாகவும் கட்டமைக்க முயல்வதுதான். கருணாநிதி இருந்த காலகட்டத்தில் `கடவுளே வேஸ்ட். நீங்கள்தான் பெரிய ஆளு’ எனப் புகழ்வதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். அதற்காகவே சில கவிஞர்களைவைத்துக் கவியரங்கங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம். இப்போதும் அந்த வீடியோக்கள் இணையதளங்களில் இருக்கின்றன. தற்போது தனது புகைப்படங்கள் அரசு சார்ந்த விஷயங்களில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது மக்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு அவர் நிகழ்த்தும் நாடகம். தி.மு.க ஒட்டும் போஸ்டரில் ஸ்டாலினின் புகைப்படம் இல்லாமல் இருக்கிறதா? தற்போது கூடுதலாக உதயநிதியின் படமும் இடம்பெற வேண்டும் என்பது அறிவிக்கப்படாத உத்தரவாக இருக்கிறது. பயத்தால் அப்படிச் செய்கிறார்களா அல்லது தாஜா செய்து தி.மு.க தலைமையிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், புகைப்படம் இடம்பெற வேண்டாம் என்று அறிவிப்பதோடு இல்லாமல் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது வெற்று வாய்ஜாலம்.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

காமராஜர் தொடங்கி இன்றைய பா.ஜ.க தலைவர்கள் பலர் உட்பட யாரும் அவர்களது படங்களைப் போட்டுக்கொள்ள விரும்புவதில்லை. எங்கெல்லாம் போட வேண்டும் என்று அரசியல் சட்டம் போடுகிறதோ அங்கெல்லாம்தான் பிரதமர் உட்பட பா.ஜ.க தலைவர்களின் படம் இடம்பெறுகிறது. உண்மையில் புகழ்ச்சியை விரும்பவில்லை என்றால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தன்னுடைய புகைப்படம் வைக்க வேண்டாம் என ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். புகைப்படம் வேண்டாம் என்று சொல்வதே புகழ்ச்சிக்காகத்தான். அதுவும் அரசியல் உள்நோக்கத்தோடு ஸ்டாலினால் திட்டமிட்டுச் செய்யப்படுவது’’ எனக் குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் இராஜீவ் காந்தியிடம் கேட்டோம். ``முதல்வர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்த தலைவர்களின் புகைப்படங்கள் மக்கள்நலத் திட்டங்களில் இடம்பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கடந்தகால ஆட்சியில் அவர்களின் புகைப்படங்களை அதிக அளவில் பயன்படுத்தி மக்களிடையே ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டார்கள். அதுமட்டுமல்ல, இளம் தலைமுறையினரிடையே விளம்பர அரசியல்மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. புகைப்படங்களை அச்சிடுவதன் மூலம் தேவையில்லாத நிதிச் சுமையை ஏற்றிக்கொள்ள வேண்டாம் என்றும் எளிமையாக இருந்துவிட வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தின் வெளிப்பாட்டினாலும்தான் தற்போது அரசின் இலச்சினையுடன் மட்டுமே அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதில் அரசியல் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஆனால், அது எப்படியான அரசியல் என்பதுதான் முக்கியம். தனிமனிதப் புகழ் பாடப் பயன்படுகிறா அல்லது மக்களுக்கான நலன் உள்ளடங்கியிருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

தி.மு.க-வின் அரசியல் மக்கள்நலன் சார்ந்த சமூகநீதியை நோக்கியது. அது அனைத்துத் திட்டங்களிலும் வெளிப்படும். அதில் தவறு இல்லை என்பதுதான் என்னுடைய பார்வை. தலைவர்களைப் புகழ்வது என்பது நீண்டகாலமாக அரசியல் கட்சிகளிடம் இருந்த பழக்கம். ஆனால், தற்போது அவற்றையும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

`அது பெரியார் விருப்பம்’ - கருணாநிதி சிலையும் இடிக்கப்பட்ட கதையும்

அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினரோ அமைச்சர்களோ ஆயிரம் வார்த்தைகள் பேசினார்கள் என்றால், அதில் தொள்ளாயிரம் வார்த்தைகள் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசுவார்கள். அதை அவர்கள் கடமையாகவே செய்துவந்தார்கள். ஆனால், தனிமனிதப் புகழ்ச்சியோ ஃபிளெக்ஸ், பேனர் போன்ற வரவேற்பு பலகைகளோ வைக்க வேண்டாம் எனவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். முற்றிலும் ஒழிந்துவிட்டது என நான் சொல்லவில்லை. ஆனால், கணிசமாகக் குறைந்துவருவதைப் பார்க்க முடிகிறது. விரைவில் அது முற்றிலும் ஒழிக்கப்படும். புத்தன் `ஆசையே படக் கூடாது’ என்று சொன்னதே அவரது மிகப்பெரிய ஆசை என்று சொல்ல முடியுமா? தலைவர்கள் கொள்கை அளவில் சில முடிவுகளை அரசியல் முதிர்ச்சியின் காரணமாக எடுக்கிறார்கள். அதுவும் புகழ்ச்சிக்காகத்தான் என்று விமர்சிக்கும் மனநிலையை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்... தனிமனிதப் புகழ்ச்சி அதிகம் வேண்டாம் என நினைக்கிறார். ஆனால், செய்யும் சிறு சிறு பணிகளுக்காகப் பாராட்டித்தானே ஆக வேண்டும்... மனித மனமும் அதை எதிர்பார்க்கும். ஆனால், பாராட்டுகளை மட்டுமே செய்துகொண்டிருக்க வேண்டாம் என்பதால்தான் இப்படியான அறிவிப்புகள் வெளிவருகின்றன.

புத்தகப்பை
புத்தகப்பை
புதிய தலைமுறை

எல்லா விளம்பரங்களிலும் மோடியின் விளம்பரம் இருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகுத்துக்கொடுத்த கொள்கைகள் சார்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என நினைக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவர்கள் வழியில் வந்த அரசியல் முதிர்ச்சியால் தனது படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். பயன்படுத்த வேண்டிய இடங்களில் பயன்படுத்தவும் செய்கிறது அரசு. அதையெல்லாம் அரசியலாகப் பார்க்கவேண்டிய தேவை இல்லை” என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு