Published:Updated:

தங்கக் கிரீடம்... முள் சிம்மாசனம்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

- இரா.சரவணன்

தங்கக் கிரீடம்... முள் சிம்மாசனம்!

- இரா.சரவணன்

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“அறிவாலயத்தைக்கூட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவேன்” - வெற்றிபெற்ற நாளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இப்படிச் சொல்ல, சுற்றி நின்றவர்களே திகைத்துப்போனார்கள். வாழ்த்து சொல்ல வந்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், கொரோனா பரவல் குறித்து ஸ்டாலின் விசாரித்ததே பெரிய ஆச்சர்யம்.

பத்து வருடங்களுக்குப் பிறகு வெற்றிச் செய்தியைக் கேட்டவர், அந்த நிம்மதியைக்கூட அனுபவிக்காமல், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி, தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு, மருத்துவமனைகளின் உண்மை நிலவரம் என்ன எனப் பலரிடமும் ஆலோசனை நடத்த, குடும்பத்தினரே அசந்துபோனார்கள். “அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாத்தணும். கொரோனா பாதித்தவர்களை ஆரம்பம், தீவிரம், அபாயம் என மூன்று வகைகளில் பிரித்து தங்கவைக்கணும். போதிய இடவசதி இல்லைன்னா நம்ம அறிவாலயத்தையே சிகிச்சை மையமா மாத்திடணும்” என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே போக... வெற்றிக்களிப்போடு வந்த நிர்வாகிகள் அப்படியே நின்றுவிட்டார்கள்.

சென்னை மேயராக, துணை முதல்வராக மிக முக்கியப் பொறுப்புகளில் அமர்ந்தபோதெல்லாம் ஸ்டாலினின் பணிகள் மிகத் தீவிரமானவை. தகுந்த அதிகாரிகளைக் கூடவே வைத்துக்கொண்டு எவரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு இயங்கியவர் ஸ்டாலின். இன்று வழிகாட்டியாக மு.கருணாநிதி இல்லை. தட்டிக்கொடுக்க

க.அன்பழகன் இல்லை. ஆனாலும், மொத்த பாரத்தையும் முதுகில் தாங்கி, மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஸ்டாலின். வெற்றிக் கிரீடம் ஸ்டாலினின் நெற்றியை அலங்கரித்தாலும், மூட்டைப்பூச்சிகளும் முட்களும் நிரம்பிய சிம்மாசனம்தான் அவர் முன்னால் இருக்கிறது. பாத்திரத்தில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? வெறும் பாத்திரத்தை விட்டுச் சென்றிருப்பவர்கள், விமர்சிக்கவும் தயாராகக் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஸ்டாலினுக்கு மிகுந்த சவாலைக் கொடுத்திருக்கிறது இந்த வெற்றி. தேர்தல் களத்தில் வென்ற ஸ்டாலினுக்கு, ஆட்சிக் களத்தில் அடுக்கடுக்காக நெருக்கடிகள் காத்திருக்கின்றன என்பதே நிஜம்!

தங்கக் கிரீடம்... முள் சிம்மாசனம்!

மிரட்டும் கொரோனா…

முதற்கட்ட கொரோனா அலை ஓய்ந்து மக்கள் சகஜமான நிலையில் தேர்தல் களத்தில் நின்றார் ஸ்டாலின். அதனால்தான் ‘கொரோனா பாதித்தவர்களுக்கு ரூபாய் 4,000’ என வாக்குறுதி வழங்கினார். ஆனால், இன்றோ கொரோனா பரவல் தலைவிரித்தாடுகிறது. அரசு மருத்துவமனைகள் உரிய படுக்கைகளோ இடமோ இல்லாமல் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகளைச் சாமானியர்களால் அணுகவே முடியவில்லை. ரெம்டெசிவிர் தட்டுப்பாடு, தடுப்பு ஊசி பற்றாக்குறை, விலை நிர்ணய குளறுபடி, ஆக்ஸிஜன் அல்லாட்டம் எனத் தடுமாறுகிறது தமிழகம். காலியான ரெம்டெசிவிர் பாட்டிலில் வேறு மருந்தை நிரப்பி போலியாக விற்று, மக்களின் உயிரை வணிகமாகப் பார்க்கிற அளவுக்குக் கொரோனா கொடூரங்கள் தாண்டவமாடுகின்றன.

கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய அரசு என்ன செய்யப்போகிறது? ‘ஊரடங்கை அறிவித்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’, ‘அறிவிக்காவிட்டால் கொரோனா பரவல் குலை நடுங்கவைக்கும்’ என்கிற திக்கற்ற நிலை. ‘மறுபடியும் ஊரடங்கு’ என்பதை ஸ்டாலினும் விரும்பவில்லை. முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்னரே, ‘ஊரடங்கு இல்லாமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன வழி?’ என்றுதான் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த வேகமும் அக்கறையும் பாராட்டத்தக்கது. அதேநேரம் ‘கொரோனா நிவாரணமாக 4,000 ரூபாய்’ என அவர் அறிவித்த வாக்குறுதியே அவருக்கு இப்போது சவாலாக நிற்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 25,000-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. இனிவரும் நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும் மிகுதியாக வாய்ப்பிருக்கிறது. போதிய நிதியும் இல்லாமல், மருந்துப் பற்றாக்குறையும் நிலவும் இந்த நெருக்கடியான நேரத்தில், நாற்காலியில் அமர்ந்து மூச்சுவிடக்கூட ஸ்டாலினுக்கு அவகாசம் இல்லை. அதிகாரிகளுடன் ஆலோசனை, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை, மக்களுடன் கருத்துப் பரிமாற்றம் எனப் பலவித முயற்சிகளின் மூலமாகவே கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருகிற திட்டத்தில் ஸ்டாலின் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்ற மருத்துவர் எழிலனிடம், மூன்று நாள்களுக்குள் கொரோனா குறித்த விவரங்களை அறிக்கையாக்கிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அரசு மட்டுமே தனித்து இயங்காமல், பொதுநல அமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும் கைகோக்கவைத்து ஒரே மாதத்துக்குள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டுவருகிறது. ‘ஊரடங்கு அவசியம் என்றால், மக்களிடம் பக்குவமாகப் பேசி அதற்கு ஆயத்தப்படுத்தவும் நான் தயார்’ என்கிறாராம் ஸ்டாலின். ‘அனைவருக்கும் தடுப்பு ஊசி’ என்பதை நிறைவேற்றவும் தனிக்குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடக்கிறது.

தங்கக் கிரீடம்... முள் சிம்மாசனம்!

காலியாகக் கிடக்கும் கஜானா!

“தமிழக நிர்வாகத்தையும், நிதியையும் அ.தி.மு.க அரசு நிர்மூலமாக்கிவிட்டது. கடன் வாங்கிய தொகையில் மக்களுக்குப் பணி செய்யாமல் டெண்டர்விட்டு பினாமிகளை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். இதுதான் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்த நிதி நிர்வாகம்” - கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து துரைமுருகன் பேசிய வார்த்தைகள் இவை. இந்த அளவுக்கு ஈரல் கெட்டுப்போயிருக்கும் நிதி நிர்வாகத்தைத்தான் இப்போது ஸ்டாலின் சரிசெய்ய வேண்டும்.

உண்மையில் வெற்றுப் பாத்திரத்தையே எடப்பாடி அரசு விட்டுச் சென்றிருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, ‘இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை’ என்கிற வாக்குறுதியை இந்த மாதத்திலிருந்தே வழங்க வேண்டிய இக்கட்டில் இருக்கிறார் ஸ்டாலின். ‘கொரோனா நிவாரணமாக 4,000 ரூபாய்’ என்கிற சுமையும் இதில் கூடுதலாகச் சேரும். கொரோனா பரவல் நடவடிக்கைகளைத் தீவிரமாக்கவும், இதர மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தவுமே போதிய நிதியின்றித் திண்டாடும் நிலையில், முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னமும் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். ஏற்கெனவே தமிழகத்தின் கடன் சுமை 5.78 லட்சம் கோடி ரூபாய். கடந்த அரசு கூடுதலாக 84,686 கோடி ரூபாய் கடன் வாங்க முயன்றபோது, அதைக் கடுமையாகக் கண்டித்தது தி.மு.க. இன்று, ஸ்டாலினே கடன் வாங்கும் நிலை!

நிதி விவகாரத்தில் இடியாப்பச் சிக்கலை உருவாக்கிவிட்டே இறங்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு. இதைச் சரிசெய்யவும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கும் புதிய அரசு திண்டாட வேண்டியிருக்கும். தமிழக அரசின் ஆலோசகராக இருந்த சண்முகம் ஒருகாலத்தில் தி.மு.க-வுக்கும் நெருக்கமாக இருந்தவர்தான். அதனால், அவர் மூலமாகவே நிதிப் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா என யோசிக்கிறார் ஸ்டாலின். ‘ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தனிக்குழுவாக நியமித்து வருவாயைப் பெருக்கவும், நிதிச் சிக்கலுக்குத் தீர்வுகாணவும் ஸ்டாலின் நினைப்பதாகச் சொல்கிறார்கள். ஜி.எஸ்.டி நிதிக் குளறுபடிகளுக்குத் தீர்வுகாணவும், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியைக் கேட்டுப் பெறவும் ஸ்டாலின் சில வாரங்களிலேயே டெல்லி செல்லவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காகவே டெல்லியோடு ‘இணக்கமான அணுகுமுறை’யைக் கடைப்பிடிக்கவே ஸ்டாலின் விரும்புகிறாராம்.

தங்கக் கிரீடம்... முள் சிம்மாசனம்!

சவாலுக்குக் காத்திருக்கும் சட்டமன்றம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் வலிமையான எதிர்க்கட்சியாக வந்திருக்கிறது அ.தி.மு.க. மெஜாரிட்டி ஆளுங்கட்சி, வலிமையான எதிர்க்கட்சி, ஆளுமையான எம்.எல்.ஏ-க்கள், கூட்டணிக் கட்சிகள் எனச் சட்டமன்றமே இந்தமுறை களைகட்டும். ‘ஆளுங்கட்சி வைத்ததுதான் சட்டம்’ என்கிற முறையில் இப்போது செயல்பட முடியாது. “மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை” என எடப்பாடிக்கு ட்வீட் செய்திருக்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தைச் சரியாக நடத்தவும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். அதேநேரம் கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதும் அவருக்குக் குடைச்சலான வேலைதான்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆக்ஸிஜன் அவசியத்துக்காக மட்டும் ஆலையைத் திறக்கலாம் என தி.மு.க. சொன்னதை விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக எதிர்த்தது. கூட்டணியில் இருந்தாலும் எல்லா விஷயங்களுக்கும் சிலரைத் தலையாட்ட வைப்பது சிரமம் என்பதை ஸ்டெர்லைட் விஷயத்திலேயே ஸ்டாலின் உணர்ந்திருப்பார். இதற்கிடையில் வானதி சீனிவாசன், நாகர்கோவில் காந்தி போன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வின் போர்க்குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிப்பார்கள். ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், பா.ம.க., பா.ஜ.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ம.ம.க., புரட்சி பாரதம் என இந்த முறை சட்டமன்றத்தில் பல கட்சிகள். அதனால் கேள்விகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் குறைவே இருக்காது. அவற்றையெல்லாம் பக்குவமாக எதிர்கொண்டு அவையை நடத்த ஆளுமையான சபாநாயகர் தேவை. பரிசீலனைப் பட்டியலில் இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆவுடையப்பன் இருவருமே தோற்றுப் போனதால், துரைமுருகனிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின். தன் உடல்நிலையைக் காரணம் காட்டிய அவரோ, சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி கே.என்.நேரு வரை பெரிய பட்டியல் போட்டு ‘தடாலடி’ ஆட்களைப் பரிசீலிக்கலாம் என்றாராம்.

தங்கக் கிரீடம்... முள் சிம்மாசனம்!

வரிசையாகக் காத்திருக்கும் வாக்குறுதிகள்!

“உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிவர்த்தி செய்வேன்” என வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். ‘புகார் பெட்டி’ திட்டத்தில் நேரிலும் இணையத்திலும் கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 15 லட்சத்துக்கும் மேல் எகிறிவிட்டது. “இதற்கு முன்னரே ஸ்டாலின் இதேபோல் லட்சக்கணக்கான மனுக்களை வாங்கியிருக்கிறார். அவற்றில் எத்தனைக்குத் தீர்வு கொடுத்தார்? அதேபோல்தான் இந்த 100 நாள் டார்கெட்டும்… ‘உங்கள் குறை உரிய துறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது’ என்கிற தகவலை மட்டும் அனுப்பிவிட்டு அமைதியாகிவிடுவார்கள். 100 நாள் டார்கெட்டிலேயே ஸ்டாலினின் வாக்குறுதிகள் புஸ்வாணமாகிவிடும்” என்கிறார்கள் அ.தி.மு.க. தரப்பில். ஆனால், ஸ்டாலினோ இதற்கென ஆக்டிவான ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து, மக்கள் குறை தீர்ப்பை முன்மாதிரித் திட்டமாக மாற்றுகிற முயற்சியில் இருக்கிறார். அத்தனை துறைகளுக்கும் முதல் அசைன்மென்ட், ‘புகார் பெட்டி’யில் வந்த குறைகளுக்கு நடவடிக்கை எடுப்பதுதான் எனச் சொல்லிவிட்டாராம்.

மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் எடுத்துக்கொண்டாலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகச் சொன்ன வாக்குறுதியை மக்கள் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு ஆகிய வாக்குறுதிகள் கொரோனா நெருக்கடி காலத்தில் மிக அவசியமானவை. போதிய நிதி இல்லாமல் ஸ்டாலின் இவற்றை எப்படிச் செயல்படுத்தப்போகிறார் என்பதுதான் பதில் தெரியா கேள்வி!

வென்று காட்டுங்கள் ஸ்டாலின்!

கொரோனா பரவலால், கடன் நெருக்கடியால், நிர்வாகக் குழப்பங்களால் தத்தளிக்கும் தமிழகத்துக்குத்தான் ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார். ‘விதைத்தோம் அறுத்தோம்’ என அவரால் அறுவடை பார்க்க முடியாது. தரிசாகக் கிடக்கும் நிலத்தை வெட்டிக் கொத்தி, சீராக்கி, அதன் பிறகே விதைக்கிற நிலை. முள் பாதையில் நடந்துதான் அவர் முன்னேற வேண்டும்.

தேர்தல் வெற்றிக்குப் பலரும் வாழ்த்து சொன்னபோது, “இது கொண்டாட வேண்டிய நேரம் அல்ல, போராட வேண்டிய நேரம்” என்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன். ஸ்டாலினும் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய நேரம் இது!