Published:Updated:

கோஷ்டி பூசல்: `இவர் உத்தமபுத்திரனா?’ - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை மேடையிலே டார்கெட் செய்த ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ”இவர் உத்தமபுத்திரனா..!” என்று மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

கோஷ்டி பூசல்: `இவர் உத்தமபுத்திரனா?’ - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை மேடையிலே டார்கெட் செய்த ஸ்டாலின்

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ”இவர் உத்தமபுத்திரனா..!” என்று மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
திமுக தலைவர் ஸ்டாலின்

புதுச்சேரி மாநில தி.மு.க-வின் அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.-வுமான எஸ்.பி.சிவக்குமாரின் மகன் திருமணம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான பட்டானூர் சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் கலந்துகொண்ட அந்த விழாவில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் பேசினார்கள். அதன்படி காரைக்கால் தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ நாஜிம் பேசும்போது, “எனக்கும் புதுச்சேரி மாநிலத்தின் அவைத்தலைவரான எஸ்.பி.சிவக்குமாருக்கும் ஏறத்தாழ 35 ஆண்டுகால நட்பு. அவருடன் நெருங்கிப் பழகுபவர்களில் நானும் ஒருவன். அதேபோல புதுச்சேரி அமைப்பாளரான எம்.எல்.ஏ சிவா அவர்கள் ஏறத்தாழ 25 ஆண்டுகள் என்னுடன் பழகியிருக்கிறார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நாங்கள் அனைவரும் பல்வேறு கருத்துகளைக்கொண்டவர்கள். மூன்று பேரும், மூன்று மாவட்ட அமைப்பாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், ஒருவர் கிழக்கே சென்றால், மற்றொருவர் மேற்கே செல்வார். அவர் வடக்கே சென்றால், நாங்கள் தெற்கே போவோம். இப்படியெல்லாம் நாங்கள் இருந்தாலும்கூட, தளபதி என்ற மையப் புள்ளியில் ஒரே நேர்க்கோட்டில் நங்கூரமிட்டு நிற்பவர்கள் நாங்கள். அதில் எந்தச் சமரசமும் கிடையாது. தலைவர் என்றால் எங்களுக்கு தளபதிதான். இப்போது அல்ல, நமது மறைந்த தலைவர் இருக்கும்போதே அவரை நாங்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை. அப்போதும் எங்களுக்குத் தலைவராக இருந்து வழிநடத்தியவர்தான் தலைவர் தளபதி அவர்கள்.

அப்படிப்பட்ட வழிநடத்தலின் காரணமாகத்தான் உங்களின் பின்னால் ஆறு எம்.எல்.ஏ-க்கள் அணிவகுத்து நிற்கிறோம். கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நாங்கள் இயங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களின் கடைக்கண் பார்வை எங்களின் புதுச்சேரி பக்கமும் சற்றுத் திரும்புமேயானால், உங்கள் ஆட்சியைப் பார்த்து வாயடைத்துப் போயிருப்பவர்களையும், வயிற்றில் அடித்துக்கொண்டிருப்பவர்களையும் நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உங்களின் திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வேண்டுமென்று நாங்கள் மட்டுமல்ல, மக்களும் ஆசைப்படுகிறார்கள்” என்று புதுச்சேரி தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டி அரசியலை ஸ்டாலின் முன்பே போட்டு உடைத்தார்.

திருமணவிழாவில் முதல்வர் ஸ்டாலின்
திருமணவிழாவில் முதல்வர் ஸ்டாலின்

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “எனக்கு முன்பு பேசிய நண்பர் நாஜிம் அவர்கள், நாங்கள் மூன்று திசைகளில் இருக்கிறோம் என்று தலைவருக்கு முன்பாகவே துணிச்சலாகச் சொல்கிறார். அதனால்தான் புதுச்சேரி தொகுதிகள் ஆறாக உயர்ந்திருக்கின்றன. நாஜிம் சிரித்துக்கொண்டேதான் அதைச் சொன்னார். நாஜிமையும், எஸ்.பி.சிவக்குமாரையும் எனக்கு 90-களில் இருந்தே பழக்கம். நெருங்கிய நண்பர்களும்கூட. விட்டுக்கொடுத்து மூன்று திசைகளில் சென்றதால்தான் இப்போது ஆறு தொகுதிகளாகியிருக்கின்றன. அதேசமயம் ஒரே கோட்டில் ஒரு தலைமையை ஏற்றுக்கொண்டீர்களேயானால், நாஜிம், எஸ்.பி.சிவக்குமார், சிவா மூவரும் ஒருவராக இணைந்து செயல்பட்டால் இந்த புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும். நமக்குள் ஒரு ஈகோ. அந்த ஈகோவைப் பார்க்காமல் உழைக்க வேண்டும்” என்றார்.

இறுதியாகப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாஜிம் பேசும்போது நாங்கள் ஒவ்வொருவரும் கிழக்கே, மேற்கே, தெற்கே செல்வோம் என்று சொன்னார். உடனே பன்னீர், இவர் என்னவோ உத்தமபுத்திரன்போல அவர்களுக்கு புத்திமதி சொல்கிறார். கடலூரைப் பொறுத்தவரை இவரின் நிலை என்ன... நான் எதையும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இப்படி ஒரு போட்டியும், பிரச்னையும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் கட்சி வளரும். அப்போதுதான் போட்டி போட்டுக்கொண்டு நாம் முன்னேற முடியும். தலைவர் கலைஞரே பல மேடைகளில் இதைக் கூறியிருக்கிறார். போட்டி என்பது நமக்குள் இருக்க வேண்டும். அது பொறாமையாக மாறிவிடக் கூடாது. ஆக, அந்தப் போட்டியும், பிரச்னையும் வரும்போது அவர்களை அழைத்து தலைவர் ஒரே வார்த்தைதான் சொல்வார். அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அதேபோலத்தான் இன்று தலைவருடைய மகன் நான் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தாலும், நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய தொண்டர்கள்தான் இன்று இயக்கத்தில் இருக்கிறார்கள்” என்று கடலூர் திமுக-வுக்குள் நடக்கும் கோஷ்டி அரசியலைச் சுட்டிக்காட்டினார்.

கடலூர் தி.மு.க-வுக்குள் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் அமைச்சர் சி.வெ.கணேசனுக்கும் ஏழாம் பொருத்தம். எதிர்த் தரப்பு ஆதரவாளர்களை இருவருமே ஓரங்கட்டி அரசியல் செய்வதாக, இருவர் மீதுமே அறிவாலயத்துக்குப் புகார்கள் பறந்துவருகின்றன. அந்த கோஷ்டி அரசியலை சுட்டிக்காட்டத்தான் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வறுத்தெடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.