ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் தி.மு.க சார்பில் அமைச்சர் ராமச்சந்திரன், ம.தி.மு.க சார்பில் எம்.பி கணேசமூர்த்தி, இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் துளசிமணி, மா.கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரகுராமன், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை, ராஜு கவுண்டர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமைவகித்துப் பேசும்போது, ``தற்போது தினமும் வீதி, வீதியாகச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறோம். வரும் ஒன்றாம் தேதிக்குப் பிறகு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படாது. அதற்கு பதிலாக வீடுகள்தோறும் சென்று அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ``ஈரோடு கிழக்குத் தொகுதியில் கூடுதல் வாக்குகளைப் பெறுவார் என்று கருதப்படும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு எதிராக அதிக வாக்குகளைப் பெறும் வகையில் நம்முடைய உழைப்பு இருக்க வேண்டும்" என்றார். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ``கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டு வருகிறேன். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வார்டுகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து காங்கிரஸ், தி.மு.க-வினர் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சு.முத்துசாமியும், கே.என்.நேருவும் சிறப்பான முறையில் செய்திருக்கின்றனர். தற்போது இந்தத் தொகுதியில் இவர்கள் ஆற்றிவரும் பணியால் கட்சித் தொண்டர்கள் மட்டும் உற்சாகம் அடையவில்லை. நானும் உற்சாகம் அடைந்துவருகிறேன்" என்றார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``இனி வரும் நாள்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரிப்பதே முக்கியமான களப்பணியாக இருக்கும். இதனால் தொகுதிக்குள் பொதுக்கூட்டங்கள் நடைபெறாது. பிப்ரவரி 3-ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கிறார். அதற்கு முன்னதாக ஒன்றாம் தேதி ஈரோடு பிளாட்டினம் மஹாலில் மாலை 4 மணியளவில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், இ.கம்யூனிஸ்ட் முத்தரசன், மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், ஈ.ஆர்.ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், அதியமான், மக்கள் நீதி மய்ய தேர்தல் பொறுப்பாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தற்போது நாங்கள் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் கட்டாயம் காங்கிரஸ் வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று தெரிவித்தார்.