Published:Updated:

ஆக்ஸிஜன் முதல் தடுப்பூசி வரை... `தற்சார்பு தமிழ்நாடு' நோக்கி நகர்கிறோமா?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

`கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க அவை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்சார்பு தமிழகத்தை நோக்கி நாம் நகர்வதைக் குறிக்கிறதா?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜனும் எஞ்சியவர்களுக்குத் தடுப்பூசியும்தான் உயிர்காக்கும் மருந்து என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் இவ்விரண்டுக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசித் தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யவும் தொழிற்துறை நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் மற்றொரு பகுதியாக தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க தமிழகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளைத் தமிழகத்தில் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்காணும் அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அளிக்கும்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவ, வரும் 31-ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகளை அளிக்க வேண்டும். இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விருப்ப கருத்துகள் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் விரைவில் நிறுவப்படும்” எனத் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

அம்மா உணவகம் முதல் ஓமந்தூரார் மருத்துவமனை வரை... ஈகோ பார்க்காத தி.மு.க அரசின் போக்கு தொடருமா?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தற்சார்பு தமிழ்நாடு என்பதை நோக்கி நகர்த்துகிறதா என தி.மு.க செய்தித் தொடர்பு மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசனிடம் பேசினோம்… “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மாநிலங்களிடம் ‘நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள். நாங்கள் உமி கொண்டு வருகிறோம். இருவரும் சேர்ந்து ஊதி ஊதிச் சாப்பிடலாம்’ என்பதைப்போல மாநிலங்களிடமிருந்து வரியை வசூல் செய்துகொண்டு, மாநிலங்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய மறுக்கிறது. இந்தியாவில் அதிக அளவில் வரி செலுத்தும் மாநிலங்களின் பட்டியலில் முன்னிலையில் இருப்பது தமிழகம். அதற்குத் தேவையான தடுப்பூசிகளை ஒதுக்குவதை விட்டுவிட்டு பா.ஜ.க ஆளும் மாநிலம் என்ற ஒரே காரணத்துக்காக நம்மைவிடக் குறைவான மக்கள்தொகை மற்றும் குறைவாக வரி செலுத்தும் குஜராத் மாநிலத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை ஒதுக்குகிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழகம் முன்னேறியதாக இருக்கக் காரணம் திராவிட ஆட்சியும், தொடர்ந்து வலியுறுத்தப்படும் தற்சார்பு மாநில சுயாட்சியும்தான். மாநில சுயாட்சியைத்தான் பேரறிஞர் அண்ணா தொடர்ந்து வலியுறுத்தினார்.

தமிழ் கா.அமுதரசன் - திமுக
தமிழ் கா.அமுதரசன் - திமுக

தமிழக முதல்வராகக் கலைஞர் கருணாநிதி இருந்தபோது தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுக்க, தமிழ்நாடு மாநில திட்டக் குழு என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் பரிந்துரைக்கப்பட்ட பல திட்டங்கள் இந்திய அளவில் பல மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1971-ம் ஆண்டு சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் போலியோ தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தமிழக மக்களுக்கு அளித்தார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாநிலங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டிய மத்திய அரசு வெறும் கையை விரித்து, தங்களது இயலாமையை வெளிக்காட்டியுள்ளது. தற்சார்புநிலையைக் கையில் எடுத்துள்ளது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. அதன் நீட்சியாகத்தான் 90 நாள்களில் 5 கோடி தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அன்பழகன் - ஸ்டாலின்
அன்பழகன் - ஸ்டாலின்

தமிழக அரசின் இந்த முடிவு மாநில சுயாட்சியை உறுதி செய்வதோடு தற்சார்பு நிலையால்தான் தமிழகம் மருத்துவ வசதியில் தன்னிறைவு அடையப்போகிறது என்பதில் ஐயமில்லை. இந்த முடிவு இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பிரதிபலிப்பதோடு, அவர்களுக்குத் தமிழகம் வழிகாட்டியாகவும், முன்னோடியாக திகழப்போகிறது என்று சொன்னால் அது மிகையல்ல” என்றார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை - நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்குமா திமுக அரசு?

தற்சார்பு தமிழ்நாடு என்பது சாத்தியமா என்பது குறித்து கனவு தமிழ்நாடு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தத்திடம் பேசினோம். ``2000-ம் ஆண்டில் இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் ஒரு மிகப்பெரிய தேவை உருவானது. அந்தத் தேவையை ஒட்டி இந்தியாவிலிருந்த டி.சி.எஸ்., காக்னிசென்ட், ஹெச்.சி.எல் உள்ளிட்ட ஒவ்வொரு பெரிய கம்பெனியைச் சுற்றியும் தொழில்நுட்பத்துறை சார்ந்து 3,000-க்கும் மேற்பட்ட சின்னச் சின்ன நிறுவனங்கள் உருவாகின. அதுமட்டுமல்ல, அந்தப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் 8,000-க்கும் மேற்பட்ட சப்ளையர்ஸ் மற்றும் விற்பனையாளர்களை உருவாக்கின. அப்படி தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட தேவையை ஒட்டுமொத்த இந்தியாவில் உருவான நிறுவனங்கள் அனைத்தும் தற்போது பில்லியன் டாலர் பெருமானம் உள்ள உற்பத்தி நிறுவனங்களாக மாறியிருப்பதோடு அவற்றைச் சுற்றி ஒரு புதிய சூழல், பொருளாதார வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புகளும் ஏற்பட்டன.

சுரேஷ் சம்பந்தம்
சுரேஷ் சம்பந்தம்

உலக அளவில் தொழில்நுட்பத்துறையில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆட்களை வேலைக்காக அமர்த்த வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பு இந்தியாவில் மட்டும்தான் சாத்தியப்படும். அந்த அளவுக்குத் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட தேவையைப் பயன்படுத்தி அந்தத் துறையில் தற்சார்பு உடைய நாடாக இந்தியா வளர்ந்திருக்கிறது. அதேபோல பயோடெக் துறையில் தற்சார்பு உடைய நாடாகக் குறிப்பாக தமிழ்நாடு தற்சார்புடையதாக மாற இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலம் ஒரு வாய்ப்பாக உருவாகியிருக்கிறது.

`தமிழ்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு அடித்தளமிட்டிருக்கிறது. இதற்காகப் புதிதாக எதுவும் நாம் மெனக்கெட வேண்டியதெல்லாம் இல்லை. லிங்க்டுஇன் (Linkedin) என்ற தொழில்முனைவோர் மற்றும் வேலை தேடுபவர்களான தளத்தில் பயோடெக் துறையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். மேலும் 73 பொறியியல் கல்லூரிகளில் பயோடெக் சார்ந்து 73 கோர்ஸ்கள் இருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் 113-க்கும் மேற்பட்ட பயோடெக் கோர்ஸ் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, இந்த கொரோனா கால தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகளைப் போக்குவதற்கான நடவடிக்கை எடுத்து அதில் தன்னிறைவு நிலையை எட்டலாம். தமிழ்நாடு பயோடெக் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பொருளாதாரத்திலும் தற்சார்பு உடைய மாநிலமாக உருமாறும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

தமிழகத்தில் மட்டும் 5,000 கோடி ரூபாய்க்கு தடுப்பூசி வாங்க வேண்டிய தேவை இருக்கிறது. அது சேமிப்பாகும் என்பதுடன் மருத்துவத்தில் வளர்ச்சி அடையாத பீகார், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் 50,000 கோடியும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவதன் வழியும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5,00,000 கோடி ரூபாய்க்கு நிகராக மருத்துவ பொருள்களை நேரடியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும். இதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் தற்சார்பு மாநிலமாகவும் உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு