Published:Updated:

`கொடநாடு சம்பவத்தின்போது நீங்கள்தான் முதல்வர்!’ - ஸ்டாலின் - பழனிசாமி காரசார விவாதம்

எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தமிழக அரசின் நிதிநிலைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன, நில அபகரிப்பு நடைபெறவில்லை" என்றும், கடந்த ஆட்சியில் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்.

சட்டப்பேரவையில்  முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ``கொடநாடு பங்களா என்பது ஒரு சாதாரண இடம் கிடையாது. முதல்வர் வாழ்ந்த இடம். அந்த இடத்தில் உங்களின் ஆட்சியின்போது கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அந்தச் சமயத்தில் நீங்கள்தான் முதல்வராக இருந்தீர்கள்" என்று கூறினார்.

அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு சொத்து தனியாருக்குச் சென்றுவிட்டது. தனியாருக்குச் சென்ற பின்னர் எப்படிப் பாதுகாப்பது வழங்குவது..." என்று பதிலளித்தார்.

சட்டப்பேரவை சர்ச்சை:  துரைமுருகன் விளக்கம்... எடப்பாடி தரப்பு சொல்லும் காரணம்! - திமுக Vs அதிமுக!

தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பேசும்போது, ``கடந்தகாலங்களில் தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டகாசம், செயின் பறிப்பு, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன. கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரணம் தமிழக மக்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ``ஜெ., மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபு கிடையாது. அதனால் அவரின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று கூறினார்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி

அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ``உறுப்பினர் வழக்கின் விவரத்தையும், யார் மீது சந்தேகம் இருக்கிறது என்றும் பேசவில்லை. வழக்கு நடைபெற்றுவருவதைப் பற்றியும், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்தான் கூறியுள்ளார். எனவே உறுப்பினரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார். கொடநாடு விவகாரம் தொடர்பாக அவையில், சரமாரிக் கேள்விகளும், காரசார விவாதங்களும் இன்று நடைபெற்றன.

அடுத்த கட்டுரைக்கு