Published:Updated:

`சட்டமன்றத்துக்கும் வருவதில்லை... அரசின் திட்டத்தையும் பார்ப்பதில்லை!’-ஸ்டாலினை விமர்சித்த முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``நீங்க சட்டமன்றத்துக்கும் வருவதில்லை. அரசாங்கம் போடுகிற திட்டத்தையும் பார்ப்பதில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றும் உங்களுக்குத் தெரியாது. அப்புறம் நீங்க என்ன தெரிந்துகொள்ள முடியும்'’ என்று ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அரக்கோணம் கைனூர் பகுதியில் பேசிய முதல்வர் பழனிசாமி, ``இல்லத்தரசிகளின் சுமையைக் குறைப்பதற்காக விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி என எல்லாம் கொடுத்த ஒரே முதலமைச்சர் அம்மாதான். குழந்தைகளுக்குச் சிறப்பான கல்வி கிடைப்பதற்காக காலணி, சீருடை, விலையில்லா புத்தகம், நோட்டு, பை, சைக்கிள் கொடுத்ததும் அம்மா ஆட்சியில்தான். பெற்றெடுத்த தாய், தந்தையர்கூட தங்களின் குழந்தையைப் பார்த்துப் பார்த்து இப்படிச் செய்து தர மாட்டார்கள். பெறாத தாய் அம்மா அவர்கள்தான் ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அற்புதமான திட்டங்களைக் கொண்டுவந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க ஆட்சியில் ஏழை மக்களுக்கு எந்த நன்மையாவது கிடைத்திருக்கிறதா... இப்படிப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா... கிடையாது. தமிழ்நாடு முழுவதும் 52 லட்சம் மடிக்கணினிகளைக் கொடுத்திருக்கிறோம். ஒரு மடிக்கணினியின் விலை 12,000 ரூபாய். அப்படியானால் ஆயிரம் கோடி ரூபாய் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. கிராமம்தோறும் அனைத்துப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கிராமங்களிலேயே உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறோம். ஒருவருக்கு மட்டும் ஒன்றுமே தெரியவில்லை.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், `இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை’ என்று தவறான, பொய்யான பரப்புரையைப் போகுமிடமெல்லாம் பரப்பிக்கொண்டிருக்கிறார். இன்றைக்கு, அ.தி.மு.க அரசு இதையெல்லாம் செய்திருக்கிறது என்று சொல்கிறோம். நீங்க மறுத்து சொல்லுங்க. அதைவிடுத்து எதை எதையோ சம்பந்தமில்லாமல் பேசுகிறார் ஸ்டாலின். `எடப்பாடி பழனிசாமி அவர்கள் தினந்தோறும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துகிறார். இதற்கெல்லாம், எவ்வளவு ரூபாய் செலவாகிறது’ என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நீங்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் விளம்பரப்படுத்துகிறோம். `எடப்பாடி ஒன்றுமே கிழிக்கவில்லை’ என்கிறார் ஸ்டாலின். நாங்கள் இவ்வளவு கிழித்திருக்கிறோம் என்று சொல்லி விளம்பரம் செய்கிறோம். மேடைப் பேச்சு பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், `எடப்பாடி கிழிச்சது’ என்று சொல்கிறார். நீங்க சட்டமன்றத்துக்கும் வருவதில்லை. அரசாங்கம் போடுகிற திட்டத்தையும் பார்ப்பதில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றும் உங்களுக்குத் தெரியாது. அப்புறம் நீங்க என்ன தெரிந்துகொள்ள முடியும்.

ஸ்டாலின் உட்பட எல்லோரும் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்வதற்காகத்தான் விளம்பரப்படுத்துகிறோம். வேண்டுமென்றே இட்டுக்கட்டி அவதூறு பரப்புகிறார் ஸ்டாலின். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக விளம்பரம் செய்கிறோம். இத்தனை ஆண்டுக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். துணை முதல்வராக இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் மக்களைச் சந்திக்காத ஒரே அரசியல்வாதி ஸ்டாலின் மட்டும்தான். தி.மு.க ஆட்சியில் செய்தது என்ன... என்னுடன் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா?’’ என்று சவால்விடுத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

அடுத்த கட்டுரைக்கு