Published:Updated:

`தூய்மைப் பணியாளரின் தங்கமயமான உள்ளம்!’ - நேர்மையைப் பாராட்டிய தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்!

குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புகொண்ட 100 கிராம் தங்க நாணயத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்.

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த கணேஷ் ராமன் என்பவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர். அவர், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடைகொண்ட தங்க நாணயத்தை வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம். அதை, ஒரு கவரில் போட்டு கட்டிலுக்கு அடியில் வைத்திருக்கிறார். ஐந்து நாள்களுக்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்தபோது, தங்க நாணயம் இருப்பது தெரியாமல் அந்த கவரை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார் கணேஷ் ராமனின் மனைவி. மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணேஷ் ராமன், தங்க நாணயம் இருந்த கவர் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நாணயம் இருந்தது தெரியாமல் தன் மனைவி குப்பைத்தொட்டியில் கவரைப் போட்டுவிட்ட விவரம் தெரியவந்தது. உடனே அவர், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தங்க நாணயத்தை ஒப்படைக்கும் மேரி
தங்க நாணயத்தை ஒப்படைக்கும் மேரி

அது குறித்து, அந்தப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள், குப்பையைத் தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற துப்புரவுப் பணியாளரின் கையில் அந்தத் தங்க நாணயம் கிடைத்திருக்கிறது. அதை அவர் தன் மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்திருக்கிறார். பின்னர், சாத்தாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரியிடம் தங்க நாணயம் ஒப்படைக்கப்பட்டது. உடனே கணேஷ் ராமனை வரவழைத்து அவரிடம் தங்க நாணயத்தைக் கொடுத்திருக்கிறார்கள் போலீஸார். தூய்மைப் பணியாளர் மேரியே தன் கையால் கணேஷ் ராமனிடம் அந்தத் தங்க நாணயத்தை ஒப்படைத்தார்.

பீரங்கிகள், ஏவுகணைகள்... இந்தியா - சீனா எல்லையில் படைகள் தயார்நிலையில் இருப்பது ஏன்?!

தூய்மைப் பணியாளர் மேரியின் நேர்மையை காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டினர். இந்த நிலையில், இந்தச் செய்தியை அறிந்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் தன் கைப்பட தூய்மைப் பணியாளர் மேரிக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இறையன்புவின் பாராட்டுக் கடிதம்
இறையன்புவின் பாராட்டுக் கடிதம்

அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.

நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்குவழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று. வாழ்த்துகள்” என்று வெ.இறையன்பு பாராட்டியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு