Published:Updated:

`அவனின் செருப்பைக்கூட எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை!'- சிறுவன் இறப்பால் கலங்கும் குடும்பம் #CAA

சிறுவன்
சிறுவன் ( indian express )

``மக்கள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டம் என்கின்றனர். அது என்னவென்றுகூட எங்களுக்குத் தெரியாது" என்கிறார் சிறுவன் சாகீரின் தந்தை.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. இந்நிலையில், கடந்த டிசம்பர் 20-ம் தேதி வாரணாசியிலுள்ள பஜர்திகா எனுமிடத்தில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 8 வயதுச் சிறுவனான சாகீர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சாகீரின் தந்தை வகீல் அகமது பேசுகையில், ``நாங்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப போதுமான வருமானம் எங்களுக்குக் கிடையாது. எனவே, அவர்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் நான் வேலைக்குச் செல்லும்போது சாகர் விளையாடிக்கொண்டோ, சைக்கிள் ஓட்டிக்கொண்டோ இருப்பதைப் பார்ப்பேன். தெருக்களில் அவன் விளையாடுவதே, உயிரைப் பறிப்பதற்குக் காரணமாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்" என்று வேதனையுடன் கூறினார்.

CAA-க்கு எதிரான போராட்டங்கள்
CAA-க்கு எதிரான போராட்டங்கள்

தொடர்ந்து பேசிய அவர், ``சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம்போல நான் வேலைக்குச் சென்றிருந்தேன். மாலை நான்கு மணியளவில் எங்களுடைய பகுதியில் காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதாகத் தகவல்கள் கிடைத்தன. வீட்டில் உள்ளவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டேன். யாரும் எடுக்கவில்லை. இரவு 9:30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். சாகீர் வீட்டில் இல்லை. எல்லாரும் அவனைத் தேடினோம். அவன் ஒளிந்து கொண்டிருப்பதாக நினைத்தோம். சிறுது நேரத்துக்குப்பின் அருகிலிருந்தவர்கள் சில புகைப்படங்களைக் கொண்டுவந்து சாகீர் காயத்துடன் இருப்பதைக் காண்பித்தனர். மருத்துவமனைக்குச் செல்லும்போதுதான் அவன் மாலை 4:30 மணிக்கு இறந்தது தெரியவந்தது" என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், `வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பஜர்திகாவில் இளைஞர்கள் பதாகைகளுடன் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதரீதியான கூட்டமாக இருக்கும் எனக் கருதி அந்தக் குழந்தை கலந்துகொண்டிருக்கலாம். கூட்டம் சாயி பஜாரை அடைந்தபோது காவல்துறையினர் லத்தியால் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். கூட்டத்தில் குழந்தைகள் இருந்ததை யாரும் கவனிக்கவில்லை. அவன் கீழே விழுந்ததில் கூட்டத்திலிருந்தவர்கள் அவன் மீது ஏறி ஓடியிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

Anti CAA Protest
Anti CAA Protest

``மக்கள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டம் என்கின்றனர். அது என்னவென்றுகூட எங்களுக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், நாங்கள் ஏழைகள். ஒருவேளை உணவுக்காக நாள் முழுவதும் வேலை செய்கிறோம். போராட்டத்தில் கலந்துகொள்ள எங்களுக்கு நேரம் இல்லை" என்று அகமது தெரிவித்துள்ளார்.

சாகீரின் பாட்டி பேசும்போது, ``சில நாள்களுக்கு முன் சாகீர் என்னிடம் புதிய ஆடைகள் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டான். ஆனால், அவன் கடைசியாக அணிந்திருந்த செருப்பைக் கூட எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கண்கலங்கியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு