Published:Updated:

`5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வை நீக்க வேண்டும்!' -கிராம சபைக் கூட்டத்தில் மனு கொடுத்த குழந்தைகள்

குழந்தைகள்
குழந்தைகள் ( எம். விஜயகுமார் )

பாகல்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் குழந்தைகள் கொடுத்த மனு.

ஜனவரி 26 குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த கிராமங்களில் நடைபெற்றன. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி பஞ்சாயத்தில் உள்ள செங்கானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டார்கள். இதில் அரசுப் பள்ளி குழந்தைகள் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி கோரிக்கை மனு கொடுத்தனர்.

கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம்

சேலம் பாகல்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் பற்றாளர் நிலாயினி, ஊராட்சிச் செயலாளர் பாண்டியன், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். கிராம சபைக் கூட்டம் நேற்று காலை 11:00 மணிக்குத் தொடங்கியது. ஊராட்சிச் செயலாளர் பாண்டியன், ஊராட்சியில் நடைபெற்ற திட்டப்பணிகளையும் அதன் மதிப்பீட்டையும் படித்துக் காட்டினார். இடையிடையே மக்கள் குறுக்கீடு செய்து, `இப்பணி எங்கள் கிராமத்தில் நடைபெறவில்லை என்றும், திட்ட மதிப்பீட்டுக் கல்வெட்டில் ஒரு தொகை எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு ஒரு தொகை படிக்கிறீர்கள். எது உண்மையான தொகை?' என்று கேட்டார்கள்.

அதற்கு ஊராட்சிச் செயலாளர் பாண்டியன், ``நடைபெற்றுள்ள திட்டப் பணிகளைப் படிக்க மட்டுமே செய்வோம். யாரும் விவாதிக்கக் கூடாது. வரவு செலவு ரசீதுகளையெல்லாம் காட்ட முடியாது'' என்றார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே தீர்மான நோட்டில் மக்களிடம் கையொப்பம் வாங்கினார்கள். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சற்றுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு கையொப்பம் வாங்குவதை நிறுத்தினார்கள். இறுதியாக இந்த ஆண்டு திட்டப் பணிகளுக்கான கோரிக்கைகள் வாங்கினார்கள். அப்போது அரசுப் பள்ளி குழந்தைகள் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்தார்கள். அந்தக் கோரிக்கை மனு மீது ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம்

இதுபற்றி பூமிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து,``எங்கள் பாகல்பட்டி கிராம ஊராட்சிக்கென்று பெரிய ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்கிறது. அது அனைவருக்கும் பொதுவான இடமாகவும் இருக்கிறது. அங்கு கிராம சபைக் கூட்டம் போடலாம். சாதி பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் வசதிக்காக செங்கானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் போட்டிருக்கிறார்கள். கிராம சபைக் கூட்டம் நடப்பதற்கு 7 நாள்களுக்கு முன்பே நோட்டீஸும் தண்டோராவும் போட வேண்டும். ஆனால், எந்த ஓர் அறிவிப்பும் செய்யவில்லை.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிச் செயலாளர் வாசித்த பல திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டுமே செய்திருக்கிறார்கள். பூமிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு எந்த ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. ஏரி வேலை செய்தவர்களுக்கு இன்னும் பல நாள் கூலி கொடுக்காமல் நிலுவையில் இருக்கிறது. ஏரி குடி பராமத்து பணி செய்ததாக ரூ.5.50 லட்சம் கல்வெட்டில் இருக்கிறது. வாசிக்கும் போது ரூ.5 லட்சம் என்கிறார்கள். எது உண்மை என்று தெரியவில்லை'' என்றார்.

ஊராட்சிமன்றத்  தலைவர் பழனியம்மாள்
ஊராட்சிமன்றத் தலைவர் பழனியம்மாள்

பாகல்பட்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், ``அரசாணை 130ன் படி கிராம சபைக் கூட்டத்தில் பஞ்சாயத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10% மக்கள் கலந்துகொள்ள வேண்டும். இதில் 18% பேர் எஸ்.சி., எஸ்.டி., மக்களும் இருக்க வேண்டும். இதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும். ஆனால், பாகல்பட்டி பஞ்சாயத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் கூட இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கிராமசபையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிக்கு வரும் பொது நிதி வரவுசெலவு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க அரசாணை இருக்கிறது. ஆனால், ஊராட்சிச் செயலாளர் பாண்டியனும், பற்றாளர் நிலாயினியும் ``வாசிக்க மட்டுமே முடியும். திட்டப்பணிகளை பற்றி விவாதிக்க முடியாது. வரவு செலவுகள் சொல்ல முடியாது. மொத்தச் செலவு தெரியாது" என்று பொறுப்பற்று பேசுகிறார்கள். இங்கு கண்துடைப்பிற்காகவே கிராம சபைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

மாரிமுத்து
மாரிமுத்து

தற்போது புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாளுக்குக் குடும்பமோ, குழந்தைகளோ இல்லை. படிப்பறிவு இல்லாத வயதான பாட்டி. இவரைச் சிலர் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வராமல் இவரை இயக்கிக்கொண்டிருப்பவர் காட்டிலேயே கொத்தடிமையாக இருக்கிறார். அதனால், இவர் தினமும் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வர வேண்டும். ஊராட்சி நூலகம் திறக்க வேண்டும், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி வேண்டும் எனப் பல கோரிக்கைகள் வைத்திருக்கிறோம்'' என்றார்.

பள்ளிக் குழந்தை நதியா அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக் கேட்டுப் பேசினார், ``நான் செங்கானூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறேன். எங்களுக்குப் பொதுத் தேர்வு வேண்டாம்'' என்றார்.

புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழனியம்மாளிடம் பேசியதற்கு, ``எனக்கு எழுதப் படிக்கவெல்லாம் தெரியாது'' என்றவர் துணைத் தலைவர் ஜெகதீஸ்வரனைக் காட்டி, ``எல்லாம் இவரு பாத்துப்பாரு'' என்றார்.

எழிலரசன்
எழிலரசன்

இதுபற்றி ஊராட்சிச் செயலாளர் பாண்டியன், ``ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாததால் செங்கானூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் போட்டோம். ஊராட்சி எல்லைக்குள் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் போடலாம். வரவுசெலவுகளை விவாதிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்கான ரசீதுகள் கேட்டார்கள். `முறையாக விண்ணப்பித்து ரசீதுகள் பெற்றுக்கொள்ளுங்கள்' என்றேன். ஏரி பராமத்துப் பணிக்காக 5 லட்சம் ஊராட்சியில் வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் 5.50 லட்சம் எழுதியிருக்கிறது. மறு சுழற்சியில் 50,000 ரூபாய் ஒதுக்கியிருக்கலாம்'' என்றார்.

இதுபோன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல கிராம சபைக் கூட்டங்களில் 8 வழிச் சாலைக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு