சீனாவில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022-ம் ஆண்டில் முதன்முறையாக மக்கள்தொகை குறைந்திருக்கிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது சீன அரசு. அந்த வகையில் சீனாவிலுள்ள சில கல்லூரிகள், மாணவர்கள் காதலிப்பதற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் ஏழு நாள்கள் விடுமுறை விட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உண்மையிலேயே அதற்குத்தான் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா... சீனாவின் மக்கள்தொகை எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது?
`காதலில் விழுங்கள்!'
சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள `ஃபேன் மீ' என்ற கல்விக்குழுமத்தின்கீழ் ஒன்பது தொழிற்கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த ஒன்பது கல்லூரிகளுக்கு ஏப்ரல் 1 முதல் 7-ம் தேதி வரை வசந்தகாலத்தைக் கொண்டாடும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்லூரிகளில் ஒன்றான மியான்யாங் ஏவியேஷன் தொழிற்கல்விக் கல்லூரியின் துணை முதல்வர் லியாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலிக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வசந்தகால விடுமுறையை வழங்குகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனாவில் மட்டுமே இயங்கும் சமூக வலைதளமான வெய்போவில், இந்த அறிவிப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டுவருகின்றன. குறிப்பாக, `கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கவே சிச்சுவான் மாகாணம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது' எனப் பலரும் கூறியிருந்தனர். இது தொடர்பாக `INSIDER' செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் கட்டுரையில், `சீனாவில் வெகுவாகக் குறைந்துவரும் திருமணம், பிறப்பு விகிதங்களை அதிகரிக்கவே இந்த அறிவிப்பு' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், `புதிதாகத் திருமணம் செய்யும் நபர்களுக்கு 30 நாள்கள் விடுமுறை வழங்குவது, சீனாவின் சில பல்கலைக்கழகங்கள் `காதலிப்பது எப்படி?' என ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது, திருமணமாகாமல் இருக்கும் வயதான நபர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முயல்வது எனச் சில நகர நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கல்லூரியின் விடுமுறை அறிவிப்பு சர்ச்சையானதை அடுத்து, ``2019-ம் ஆண்டு முதலே எங்கள் கல்லூரியில் வசந்தகால விடுமுறை அறிவிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு, வசந்தகால விடுமுறைக்கான வாசகமாக `பூக்களை அனுபவியுங்கள், காதலில் விழுங்கள்' என அன்பை வெளிப்படுத்தும் வகையில் அறிவித்திருந்தோம். சீனாவின் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியும், வெளியே சென்று நண்பர்களை உருவாக்கிக்கொள்ள விடுமுறை கோரிய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும்தான் இந்த விடுமுறைத் திட்டத்தைக் கொண்டுவந்தோம்'' என விளக்கமளித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

சீனாவின் மக்கள்தொகை குறைந்தது ஏன்?
மிகக் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்ட காரணத்தால், 1961-ம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை குறைந்து காணப்பட்டது. அதன் பிறகு, ஆண்டுதோறும் ஏற்றத்தைச் சந்தித்துவந்த சீனாவின் மக்கள்தொகை, கடந்த ஆண்டு சரிவைச் சந்தித்தது. 2021-ம் ஆண்டில் 7.52-ஆக இருந்த சீனாவின் பிறப்பு விகிதம், 2022-ல் 6.77-ஆகக் குறைந்திருக்கிறது. சுமார் 141 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில், இதே நிலை தொடர்ந்தால் 2050-ல் 109 கோடியாக மக்கள்தொகை குறையும் என கணித்திருக்கிறது ஐ.நா.
சீனாவின் மக்கள்தொகை, மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தரவுகள்படி, 2015-ல் 6 சதவிகிதமாக இருந்த குழந்தை இல்லாத பெண்களின் எண்ணிக்கை, 2020-ல் 10 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது!
அதேபோல, குழந்தை பெற்றுக்கொள்வதற்கான சீனப் பெண்களின் சராசரி விருப்பம் 2017-ல் 1.76-ஆக இருந்தது. அதுவே, 2021-ல் 1.64-ஆகக் குறைந்திருக்கிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் பெண்களுக்கு ஆர்வம் குறைந்துவருவதைக் காட்டுகின்றன.
சீனாவின் பிறப்பு விகிதம் குறைந்ததற்குக் காரணமாக 1980 -2015 காலகட்டத்தில் அமலிலிருந்த, `குடும்பத்துக்கு ஒரு குழந்தை' சட்டம்தான் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தொடர்ந்து அதிகரித்துவந்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2021-ம் ஆண்டு குறைந்துவந்த பிறப்பு விகிதத்தைச் சரிசெய்ய, மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்குச் சிறப்பு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது சீன அரசு. விலைவாசி உயர்வு, பாலினப் பாகுபாடு, குறைந்த வருமானம் உள்ளிட்டவை காரணமாக கொரோனா ஊரடங்கின்போதும் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதனால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, பல்வேறு சிறப்புத் திட்டங்களை சீனா தீட்டிவருவதாகச் சொல்லப்படுகிறது. வரும் காலத்தில், இது தொடர்பாக சீனா பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது!