Published:Updated:

சீனாவின் மறுமுகம்!

சீனாவின் மறுமுகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சீனாவின் மறுமுகம்!

மு. இராமனாதன், ஹாங்காங் அரசின் பதிவு பெற்ற பொறியாளர்

கடந்த ஜூன் 15-ம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங்-கின் பிறந்தநாள். கடந்த நான்கு ஆண்டுகளாக பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவந்தார். இந்த ஆண்டு தெரிவிக்கவில்லை. காரணம், எல்லையில் நடந்த மோதல். அன்றிரவுதான் இமயமலையின் 14,000 அடி உயரத்தில் இருபது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கொடுங்குளிர்ப் பிரதேசத்தில், அரசியலின் வெப்ப அலைகள் இன்னும் தணியவில்லை. இந்தப் பிரச்னையின் முழுப் பின்னணியைப் பார்ப்போம்.

எல்லையின் கதை

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை புதிதல்ல. இரு நாடுகளும் விடுதலை அடைவதற்கு முன்னரே அது தொடர்பான தர்க்கங்கள் தொடங்கிவிட்டன. 1914-ம் ஆண்டில் பிரிட்டிஷ் - இந்தியா, கோமிங் டாங் கட்சியின் ஆட்சியில் இருந்த சீனா, திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லைக்கோடு வரையப்பட்டது. இந்தக் கோடு, அதை உருவாக்கிய ஆங்கிலேய அதிகாரியின் பெயராலேயே ‘மக்மோகன் கோடு’ என்று அழைக்கப்பட்டது.

1947-ம் ஆண்டு விடுதலை அடைந்த இந்தியா, இதையே எல்லையாக வரித்துக்கொண்டது.

1949-ல் உள்நாட்டுப் போரில் வென்று ஆட்சி அமைத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, மக்மோகன் கோட்டை ஏற்க மறுத்துவிட்டது. கனன்று கொண்டே இருந்த பிரச்னை, 1962-ல் போராக வெடித்தது. அதன் கசப்புணர்வு குறைய சுமார் 25 ஆண்டுகளாகின.

ராஜீவ் காந்தி - டெங் ஜியோபிங்
ராஜீவ் காந்தி - டெங் ஜியோபிங்

ராஜீவ் - டெங் சந்திப்பு

1988-ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி - சீனத் தலைவர் டெங் ஜியோபிங் சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால், முன்னதாகவே சீனாவின் முகம் மாறியிருந்தது. 1974-ல் திபெத் சீனாவின் வசம் வந்துவிட்டது. உலகமயம், தாராளமயம் முதலான சொற்கள் புழக்கத்துக்கு வந்திருந்தன. 1972-ம் ஆண்டிலேயே அமெரிக்க அதிபர் நிக்ஸன் சீனாவுக்கு விஜயம் செய்துவிட்டார். 1978-லேயே அந்நிய முதலீடுகளுக்கு சீனா தனது இரும்புக் கதவுகளைத் திறந்துவிட்டது. முதலீடுகள் குவிந்தன. 1986-ல் உலக வணிக அமைப்பின் முன்னோடியான ‘காட்’ ஒப்பந்தத்தில் இணைந்தது சீனா. இந்தப் பின்னணியில்தான் 1988-ல் ராஜீவ் - டெங் சந்திப்பு நிகழ்ந்தது. ‘எல்லைப் பிரச்னைகளைத் தனியே பேசித் தீர்த்துக்கொள்ளலாம்; வணிக உறவுகளை மேம்படுத்திக்கொள்ளலாம்’ என்று தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

தனியே பேசவும் செய்தார்கள். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடைசிவரை மக்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஒப்புக்கொள்ளவில்லை. மாற்றாக, ‘உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு’ என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தியது. அதாவது, யார், யாருடைய கட்டுப்பாட்டில் எந்தெந்தப் பகுதிகள் உள்ளனவோ, அவை அவரவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதைப் பிரிக்கும் கோடே ‘உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு.’ இந்தக் கோட்டிலும் பல இடங்களில் கருத்தொற்றுமை இல்லை. ஒருவரது உண்மை மற்றவருக்குப் பொய்யாகப்பட்டது. அப்படி 16 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

அவை நீங்கலாக, மறு தீர்மானம் வரும்வரை ‘உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடே எல்லையாக நீடிக்கும்; இந்தப் பகுதிகளில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை’ உள்ளிட்ட கூறுகளை அடக்கிய எல்லைச் சமாதான உடன்படிக்கை 1993-ல் உருவாகியது. அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவின் அரசு அதில் கையொப்பமிட்டது. எனினும், எல்லைகளில் அவ்வப்போது உரசல்கள் நிகழவே செய்தன. பல உரசல்கள் சிறிய அளவிலானவை. நெடுநாள்கள் நீடித்த உரசல்களும் உண்டு. ச்சுமார் (2014), புர்ட்சே (2015), டோக்லாம் (2017) ஆகிய இடங்களில் நடந்த அத்துமீறல்கள் அப்படியானவை.

தலைவர்களின் தலையீட்டால் அவை நின்றன. ஆனாலும், கடந்த 45 ஆண்டுகளாக வரையறுக்கப் படாத இந்த எல்லைப் பகுதியில் வேட்டுச் சத்தம் கேட்டதில்லை; பயங்கரவாதிகள் நுழையத் தலைப்பட்டதில்லை; குடியுரிமை இல்லாதோர் தாண்டியதில்லை; குருதியால் நனைந்ததில்லை. நற்பெயர்தான் கடந்த ஜூன் 15-ம் தேதி இல்லாமல் போனது. இந்த 45 ஆண்டுக்கால நற்பெயரைச் சீனா ஏன் இழக்க முன்வருகிறது? அதற்கான விடை சீனாவின் வளர்ச்சிக் கதையில் இருக்கிறது.

வளர்ச்சிக் கதை

மா சே துங்கின் மரணத்துக்குப் பிறகு சீனாவின் தலைவராக உயர்ந்தவர் டெங். பஞ்சமும் நோயும் சீனாவைப் பீடித்திருந்த காலம் அது. மாவோவின் தலைமையில் அரங்கேறிய ‘பெரும் பாய்ச்ச’லும் (1958-1962) ‘கலாசாரப் புரட்சி’யும் (1966-1976) சீனாவுக்குப் பின்னடைவையே தந்திருந்தன. சீனாவை மீட்பதற்கு வணிகத்தைக் கையில் எடுத்தார் டெங். உலகத்தையே ஒரு பெரும் சந்தையாகப் பார்த்தார் அவர். அளப்பரிய மனித வளத்தால், சீனாவால் உலகின் தொழிற்சாலையாக வளர முடியும் என்பதைக் கணித்தார். சீனாவைத் தொழில்மயமாக்கினார். கிராமங்களிலிருந்து விவசாயிகள் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்தனர்; வறுமையின் பிடியிலிருந்து தங்களையும் தங்கள் நாட்டையும் விடுவித்துக்கொண்டனர்.

சிறு ஆணியிருந்து ராட்சத இயந்திரம் வரை எல்லாவற்றையும் உற்பத்தி செய்தது சீனா. செல்வம் பெருகியது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்தது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. ஆயுட்காலம் அதிகரித்தது. இது சீனாவின் ஒரு முகம். வளர்ச்சியின் முகம்.

சீனாவுக்கு இன்னொரு முகமும் இருந்தது. அது உள்நாட்டில் எதிர்க்குரல்களை ஒடுக்கியது. ‘பேச்சு சுதந்திரம் ஆடம்பரம். அது அவசியமில்லை’ என்றது. `திபெத்திய புத்த மதத்தினரும், உய்குர் இஸ்லாமியரும் சமமாக நடத்தப்பட வேண்டியதில்லை’ என்றது. இது சீனாவின் இன்னொரு முகம். ஆக்ரோஷமான முகம்.

டெங் - 24 அட்சரங்கள்

சீனாவின் ராணுவபலம் பெருகியது. பிற நாடுகள் அச்சமுற்றன. பொறாமையும் சேர்ந்து கொண்டது. `யாருடைய கண்ணும் படாமல் வளர வேண்டும்’ என்பது டெங்கின் மந்திரமாக இருந்தது. 1992-ல் அவர் தம் நாட்டு அரசியலாளர் களுக்கு 24 அட்சரங்களைக் கையளித்தார். சீன மொழியில் எழுத்துகளே இராது. எல்லாமே சொற்கள்தான். டெங்கின் அறிவுரை 24 சொற்களால் ஆனது. ஆகவே, அவை ‘24 அட்சரங்கள்’ என்று அழைக்கப்பட்டது. அதன் சாராம்சம் இதுதான்: ‘அமைதியாக அவதானி. உன் இடத்தை உறுதி செய். சக்தியை வெளிக்காட்டாதே. உறுமீன் வரும்வரை காத்திரு. அடக்கி வாசி. `தலைமை வேண்டும்’ என்று கோராதே.’

சீனத் தலைவர்கள் பல காலம் தங்கள் சக்தியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இப்போதைய ஷி ஜின்பிங்குக்கு முன்னர் அதிபராக இருந்தவர் ஹூ ஜின்டாவ். அவர், ‘சீனாவின் வளர்ச்சியைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம்; அது யாருக்கும் எதிரானது அல்ல’ என்றார். அதற்கு, ‘அமைதியான எழுச்சி’ என்றும் பெயரிட்டார். பிற்பாடும், ‘எழுச்சி’ என்கிற சொல்கூட சற்று அழுத்தமாக இருக்கிறது என்று ‘அமைதியான வளர்ச்சி’ என்று கோஷத்தை மாற்றினார்.

மோடி - ஷி ஜின்பிங்
மோடி - ஷி ஜின்பிங்

இன்றைய சீனாவின் மறுபக்கம்

ஆனால், இன்றைய சீன அதிபர் ஷி ஜின்பிங் தன் முன்னோடிகளைப்போல அமைதியான வளர்ச்சி என்று சொல்வ தில்லை. மாறாக, ‘சீனக் கனவு’ என்கிறார். அவரது ‘பட்டுப்பாதைத் திட்டம்’ சாலைகள், ரயில்கள், பாலங்கள், கடல் வழித்தடங்கள், கேபிள்கள், குழாய்கள் என உலகம் முழுவதையும் சீனாவுடன் இணைக்கிறது. தென் சீனக்கடலில் தாங்கள் நிலைநாட்டியிருக்கும் நங்கூரத்தை யாரும் அசைப்பதை சீனா விரும்பவில்லை.

கொரோனா வைரஸ் தொடங்கிய இடம் சீனாவாக இருக்கலாம். ஆனால், அதிலிருந்து முதலில் வெளியேறிய நாடும் சீனாதான். அமெரிக்காவும், ஐரோப்பாவும், தெற்கு ஆசியாவும் வைரஸால் தடுமாறும் இந்தச் சந்தர்ப்பத்தில் தனது திறனைக் காட்சிப்படுத்த சீனா விழைகிறது. `அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சமரசங்களுக்குத் தயாராக இல்லை’ என்கிறது. இன்று உலகம் முழுவதையும் இணைக்கும் உற்பத்திச் சங்கிலியின் பல கண்ணிகள் சீனாவின் வழியாகத்தான் போகின்றன. `காத்திருப்பின் காலம் முடிந்துவிட்டது’ என்பது ஷி ஜின்பிங்கின் கருத்தாக இருக்கக்கூடும். ‘தலைமை வேண்டும் என்று கோராதே’ என்று சொன்னார் டெங். ஷி ஜின்பிங் தலைமையைக் கோரவில்லை; அதை எடுத்துக்கொள்ள முயல்கிறார். ஜூன் 15 அதற்கான செய்தியாக இருக்கக்கூடும்.

எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இந்தியா இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் வல்லுநர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ‘ராணுவரீதியாக எதிர்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் சிலர். ‘இந்தியா, அமெரிக்காவுக்கு மேலும் அணுக்கமாக வேண்டும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ இதற்கு நேர்மாறாக, ‘இந்தியா, அமெரிக்காவுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது; அந்த வகையில் அமெரிக்கா, இந்தியாவை சீனாவுக்கு எதிராக நிறுத்த முயல்கிறது; அதற்கு சீனாவின் எதிர்வினைதான் இது’ என்கிறார்கள்.

சீனாவின் மறுமுகம்!

வங்காள தேசத்துக்கான யுத்தம் 1971-ல் நிகழ்ந்தபோது பனிப்போர் உச்சத்தில் இருந்தது. உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்துகிடந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் முறையே சோவியத் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவில் இயங்கின. காலம் மாறிவிட்டது. உலகம் முழுதும் ஒரே சங்கிலியால் இணைக்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கலாம். ஆனால், இது இந்தியாவின் பிரச்னை. இந்தியாதான் எதிர்கொள்ள வேண்டும். அதற்குக் காலம் சற்றுக் கூடுதலாக தேவைப்படலாம். அதற்காக வேறு யாரேனும் ஒத்தாசை செய்வார்கள் என்று வேறு நாடுகளை எதிர்பார்க்கக் கூடாது.

சீனா நமது அண்டை நாடு. அவர்களுடன் நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். அதேவேளையில் `சீனாவின் அச்சுறுத்தல்களுக்குப் பணிய மாட்டோம்’ என்பதைத் தெளிவுபடக் கூற வேண்டும். பிரதமர் மோடியின் தற்சார்புக் கொள்கை ஜூன் 15-க்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. அதைச் செயல்படுத்த நீண்டகாலத் திட்டம் வகுக்க வேண்டும். அதற்கான அடிவைப்புகளை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கவனமாக வைக்க வேண்டும். இந்தியாவாலும் உலகத் தொழில் அனைத்தையும் உவந்து செய்ய முடியும். அதற்கு நம் மக்கள் திரளுக்குக் கல்வியும் மருத்துவமும் வழங்க வேண்டும். எல்லா அண்டை நாடுகளுடனும் நட்பு பாராட்ட வேண்டும். அப்போது இந்தியா எழுச்சி பெறும். அதுவே அமைதியான எழுச்சியாக இருக்கும். இன்னுமொரு ஜூன் 15 நிகழும் சாத்தியங்கள் அப்போது குறைந்துவிடும்.