Published:Updated:

சாக்லேட் பாய் Vs ப்ளேபாய் - அரசியல் நாகரிகத்துக்கு அழகா?

ஜெயக்குமார் vs உதயநிதி அரசியல் விமர்சனங்கள்
ஜெயக்குமார் vs உதயநிதி அரசியல் விமர்சனங்கள்

அரசியலில் நக்கல்கள், நையாண்டிகள், விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், எதுவும் அரசியல் நாகரிகத்தைத் தாண்டிச் செல்லாமல் இருப்பதே அழகு!

உதயநிதியை ‘சாக்லேட் பாய்’ என்று ஜெயக்குமார் விமர்சிக்க, பதிலுக்கு உதயநிதி ‘சொன்னவர் ப்ளேபாய்’ என்று குறிப்பிட சமூக வளைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது. மறுபுறம், `இது போன்ற வார்த்தைப் போர்கள் அரசியலுக்கு அழகல்ல’ என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கு.க செல்வம், அந்தக் கட்சியின் தலைமைமீது அதிருப்தியில் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்தார். கு.க.செல்வத்தின் இந்த மாற்றம் குறித்து தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியிடம் கருத்து கேட்டபோது, ``அவர் சென்றதால் தி.மு.க-வுக்கு எந்த இழப்பும் இல்லை. அவரை சாக்லேட் கொடுத்து கூட்டிச் சென்றுள்ளனர்” என்று நக்கலாக பதிலளித்தார். அமைச்சர் ஜெயக்குமாரிடம் உதயநிதியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ``யாரு சொல்றாங்க? சாக்லேட் பாய் சொல்றாரு. சாக்லேட் பாய்க்குத்தான் சாக்லேட் பத்தித் தெரியும்’’ என்று கிண்டலாக பதிலளித்தார்.

இதற்கு உதயநிதி தரப்பிலிருந்து அடுத்த பதிலடி வந்தது. ``சாக்லேட் பாய் என்பது கெட்ட வார்த்தை கிடையாது. ஆனால், என்னை சாக்லேட் பாய் என்று சொன்னவர் ஒரு ப்ளேபாய்’’ என்று சொல்லிச் சிரித்தார். உதயநிதி இந்தக் கருத்தைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அவர் பின்னால் நின்ற தி.மு.க-வினர் 'சபாஷ் சரியான பதில்' என்று பாராட்டு தெரிவித்தனர். உதயநிதியின் இந்த பதிலடியை வரவேற்று, சமூக வளைதலங்களில் வீடியோவைப் பகிர்ந்துவருகிறது தி.மு.க-வின் ஐடி விங். நையாண்டியாகவும் ரசனையாகவும் இருப்பதால் சமூக வளைதளங்களிலும் இந்த வார்த்தைகள் வைலராகியுள்ளன.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

ஆனால், `நாற்பது ஆண்டுக்காலம் அரசியலில் உள்ளவரை பொதுவெளியில் 'ப்ளேபாய்' என்று சொல்லயிருப்பது அரசியல் நாகரிகம் அல்ல’ என்று அ.தி.மு.க-வினர் வருத்தப்படுகிறார்கள். ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் ``ஜெயக்குமார் இப்போது அ.தி.மு.க-வில் இருந்தாலும், அவருடைய தந்தை தி.மு.க ஆதரவாளராக இருந்தவர். உதயநிதியின் அப்பா ஸ்டாலினுடனேயே அரசியல் செய்துகொண்டிருப்பவர் ஜெயக்குமார். அவர் உதயநிதியை `சின்னப் பையன்’ என்கிற அர்த்ததில்தான் 'சாக்லேட் பாய்' என்று யதார்த்தமாகக் குறிப்பிட்டார். அதற்காக வயது வித்தியாசமில்லாமல் அமைச்சராக இருக்கும ஒருவரை 'ப்ளேபாய்' என்று சொல்வதற்கு முன்பாக அவர் யோசித்திருக்கலாம். எங்கள் தரப்பிலிருந்து அவருடைய அப்பாவைப் பற்றி இதே மாதிரி ஒரு விமர்சனத்தை முன்வைத்தால் அவர் மனம் என்னவாகும்? அந்தக் கட்சியிலிருக்கும் மூத்தவர்கள் இதை அவருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்” என்று வருத்தப்படுகிறார்கள்.

உதயநிதி
உதயநிதி
நா.ராஜமுருகன்

``பெண் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. அதை மனதில்வைத்தே உதயநி்தி இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், அரசியல் நாகரிகம் என்பதை அரசியலில் இப்போது வளர்ந்துவரும் உதயநிதியும் படித்துக்கொள்ள வேண்டும். 'சாக்லேட் பாய்’ என்பதற்கும், `ப்ளேபாய்' என்பதற்கும் அர்த்தங்களில் வித்தியாசம் அதிகம் உள்ளது. கேட்பதற்கு ரைமிங்காகவும் ரசனையாகவும் இருக்கிறது என்பதற்காக `சாக்லேட் பாய்’, `ப்ளேபாய்’ என்றெல்லாம் விமர்சிக்க ஆரம்பித்தால், அரசியலில் பலரது அந்தரங்கக் கதைகள் அம்பலமாகிவிடும் அபாயம் உள்ளது. அதை நன்றாக அறிந்தவர் கலைஞர் கருணாநிதி. அதனாலேயே அவர் வார்த்தைகளை உபயோகப்படுத்தும்போது மிகவும் கவனத்துடன் கையாளுவார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பது நல்லது” என்கிறார்கள் தி.மு.க- விலுள்ள மூத்த நிர்வாகிகள்.

அரசியலில் நக்கல்கள், நையாண்டிகள், விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், எதுவும் அரசியல் நாகரிகத்தைத் தாண்டிச் செல்லாமல் இருப்பதே அரசியலுக்கு அழகு!

அடுத்த கட்டுரைக்கு