Published:Updated:

சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?

சினிமாதுறை
பிரீமியம் ஸ்டோரி
சினிமாதுறை

- அ.கல்யாணசுந்தரம்

சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?

- அ.கல்யாணசுந்தரம்

Published:Updated:
சினிமாதுறை
பிரீமியம் ஸ்டோரி
சினிமாதுறை
தேர்தல் வந்தாலே சினிமா நட்சத்திரங்களின் அணிவகுப்பும் ஆரம்பித்துவிடும். பரப்புரையில் பலரும், தேர்தல் களத்தில் போட்டியிடம் சிலருமாக கலைத் துறையினரின் பங்களிப்பு இருக்கும். ஆனால், இம்முறை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குக் கலைத் துறையினரை வேட்பாளர்களாகக் களமிறக்கிவிடக் கழகங்கள் தயாராகிவிட்டன. கடைசி நேரத்தில் ரஜினி காந்த் கிரேட் எஸ்கேப் ஆனாலும், கமல், விஜயகாந்த், சரத்குமார், சீமான், கருணாஸ், வ.கௌதமன், மன்சூர் அலிகான் எனத் திரைத்துறையினர் பட்டியல் இந்தத் தேர்தலைக் கலங்கடிக்கும்போலிருக்கிறது!
சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?

தி.மு.க:

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, தி.மு.க-வின் ஸ்டார் வேட்பாளராகக் களமிறங் குகிறார். வேளச்சேரி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான நடிகர் வாகை சந்திரசேகர் மறுபடியும் சீட் கேட்டிருக்கிறார். காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளரும், நடிகருமான திண்டுக்கல் ஐ.லியோனி பலமுறை சீட் கேட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர். இம்முறை நிச்சயம் அவருக்கு சீட் உறுதி என்கிறார்கள். நடிகரும், கவிஞரும், பாடலாசிரியருமான மனுஷ்ய புத்திரனுக்கு கிச்சன் கேபினெட் மனதுவைத்தால் சீட் கிடைக்கும் என்கிறார்கள். இலக்கியவாதியும், நடிகையும், கவிஞருமான சல்மா மருங்காபுரி தொகுதியில் களமிறக்கப்படுவது உறுதியாம். நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் அறந்தாங்கி தொகுதியில் வாய்ப்பு கேட்கிறார். நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி மணப்பாறை தொகுதியை எதிர்பார்க்கிறார். நடிகர் சத்யராஜின் மகளான திவ்யாவுக்கு ஒரு தொகுதியைக் கொடுத்து, சத்யராஜை தமிழகம் முழுக்க பிரசாரத்தில் இறக்க நினைக்கிறது தி.மு.க.

சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?

அ.தி.மு.க:

ஜெ. மறைந்தவுடன் அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்தபோது ‘நான் யார் பக்கமும் இல்லை’ எனச் சொன்னார் நடிகை விந்தியா. பிறகு அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் பரபரப்புக்குக் கொண்டுவந்தார்கள். அதனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு சீட் உறுதி என்கிறார்கள். ராமராஜனுக்கு போட்டியிட ஆர்வம். ஆனாலும், கலைமாமணி கொடுத்தபோதே ‘பிரசாரத்துக்கு மட்டும்’ என அழுத்திச் சொல்லிவிட்டார்களாம். நடிகர் தியாகு, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் எனப் பட்டியல் நீள்கிறது.

சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?

பா.ஜ.க:

மற்ற கட்சிகளைக்காட்டிலும் பா.ஜ.க-வில்தான் நட்சத்திரப் பட்டாளங்களின் அணிவகுப்பு அதிகம். பல கட்சிகளைக் கடந்து பா.ஜ.க-வுக்கு வந்த குஷ்பு, கட்சியில் சேரும்போதே சீட் கோரிக்கையோடுதான் சேர்ந்தார். அதனால் அவருக்கு சீட் உறுதி என்கிறார்கள். ராஜபாளையத்தில் கௌதமி பரப்புரையைத் தொடங்கிவிட்டார். நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், நடிகர், தயாரிப்பாளர், பெப்சி தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் எனப் பல அடையாளங்களை வைத்திருக்கும் பெப்சி சிவா, விருகம்பாக்கம் தொகுதியைக் குறிவைக்கிறார். உறுப்பினர் சேர்க்கை, சுவர் விளம்பரம் என எல்.முருகன் ஆதரவுடன் தேர்தல் வேலைகளையே தொடங்கிவிட்டார் பெப்சி சிவா. கங்கை அமரன், விஜயகுமார், நெப்போலியன், கஸ்தூரி ராஜா, நடிகை நமீதா, ராதாரவி, சிவாஜி மகன் ராம்குமார், பஞ்சு அருணாச்சலம் மகன் சுப்பு, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், கணேஷ்கர், பாபு கணேஷ், வெங்கடேஷ், பவர் ஸ்டார், பொன்னம்பலம், எஸ்.வி.சேகர், நடிகைகள் குட்டி பத்மினி, மதுவந்தி, ஜெயஸ்ரீ, பாலாம்பிகா, சங்கீதா பாலன் போன்றவர்கள் சீட் கொடுத்தாலும் சரி, பிரசாரத்தில் பயன்படுத்திக்கொண்டாலும் சரி எனச் சொல்லிவிட்டார்களாம். கலைத்துறையினரைக் களமிறக்கி மக்கள் செல்வாக்கை அள்ள நினைக்கிறது பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் இன்னும் சில நடிகர், நடிகைகள் பா.ஜ.க-வுக்காகப் பரப்புரையில் குதிப்பார்கள் என்கிறார்கள்.

சினிமாதுறையில் யார் யாருக்கு சீட்?

அ.ம.மு.க:

அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பதாக சசிகலா சொன்னாலும், சளைக்காமல் 234 தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்த ஆயத்தமாகிவிட்டார் தினகரன். ஸ்டாலினுக்கு எதிராக நடிகர் செந்தில், உதயநிதிக்கு எதிராக நடிகை சி.ஆர்.சரஸ்வதி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடிகர் ரஞ்சித் என தினகரனின் ‘ஸ்டார்’ பட்டியல் ரெடி. ஆனாலும், ‘எங்கே நிறுத்தினாலும் தயார்’ என ரஞ்சித் மட்டுமே சொல்ல, செந்திலும் சி.ஆர்.சரஸ்வதியும் தொகுதியை மாற்றச் சொல்கிறார்களாம்.

மக்கள் நீதி மய்யம்:

கட்சியின் தலைவர் கமல், நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவியான கமீலா நாசர், நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன், நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா, இயக்குநர் முரளி அப்பாஸ் எனக் கலை வட்டாரத்தினரின் பட்டியல் நீள்கிறது. கமலோடு கூட்டணி போட்டிருக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அவர் மனைவி ராதிகா ஆகியோரும் களத்தில் இறங்குகிறார்கள்.

கலர்ஃபுல் கச்சேரிக்கு ரெடியா மக்களே!

***

நியாயமாரே?

பா.ஜ.க பக்கம் திரைத்துறையினர் பலரையும் திருப்பிய பெப்சி சிவாவிடம், “சினிமா ஆட்களைப் பார்த்தால் மக்கள் மயங்கி ஓட்டுப்போட்டுவிடுவார்கள் என்று இன்னமும் நம்புகிறீர்களா?” எனக் கேட்டோம். “ஏன் சினிமாக்காரங்க மனுசங்க இல்லையா? மக்களை மயக்குவதற்காக சினிமா ஆட்களை நாங்க களமிறக்கலை. எல்லா மக்களுக்குமானதுதான் தேர்தல். எல்லாத் துறையினருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை இருக்கு. வெகு மக்களின் அபிமானம் பெற்ற திரைத் துறையினர் ஒரு கருத்தைச் சொல்லும்போது, அது மக்களைச் சுலபமாகச் சென்றடையும். மக்கள் மனசுல பெரிய தாக்கத்தையும் உருவாக்கும். நாங்க யாரையும் வற்புறுத்தி கட்சியில சேர்க்கலை. அரசியலில் திரைக் கலைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. பா.ஜ.க-தான் நாளைய தமிழகத்தின் எதிர்காலம் என்பதை திரைத்துறையினர் தெளிவா தெரிஞ்சிவெச்சுருக்காங்க. அவங்க பெரிசா பிரசாரம் பண்றப்ப, மக்களும் இதே தீர்ப்பை தேர்தலில் நிறைவேற்றிக் காட்டுவாங்க” எனச் சளைக்காமல் பதில் சொல்கிறார் சிவா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism