Published:Updated:

`சிவசேனா வெளிநடப்பு; 20 வாக்குகள் வித்தியாசம்!' - குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் #CAB

மாநிலங்களவையில் தி.மு.க, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

மாநிலங்களவை
மாநிலங்களவை

பல்வேறு சூடான விவாதங்களுக்குப் பிறகு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் இன்று மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக தி.மு.க, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. இதன்பின் மாநிலங்களவையில் அமித் ஷா விளக்கமளித்துப் பேசினார்.

அமித் ஷா
அமித் ஷா

அதில், ``காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல. குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமர் கருத்தும், காங்கிரஸ் கருத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன. இலங்கையிலிருந்து புலம்பெயரும் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண முன்னதாகவே சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. தற்போது மேலும் 3 நாடுகளைச் சேர்ந்தவர்களின் பிரச்னையைக் களைய சட்டம் இயற்றப்படுகிறது. அதுமட்டுமல்ல இலங்கையிலிருந்து இந்தியா வந்த 8 லட்சம் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.

`இந்தியா `இந்து நாடு' என்று அறிவிக்கப்படுமா?' அன்று அத்வானி விகடனுக்கு சொன்னதும், இன்று அமித் ஷா செய்வதும்!

அவரது பேச்சுக்குப் பின் குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி அதற்காக வாக்கெடுப்பு நடந்தது. இந்தத் தீர்மானத்துக்கு எதிராக 124 உறுப்பினர்களும், ஆதரவாக 99 உறுப்பினர்களும் வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது. இதன்பின் சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பைப் புறக்கணித்து சிவசேனா வெளிநடப்பு செய்தது. முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகி மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மோடி
மோடி

ஏற்கெனவே மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தபின் சட்டமாக அமலாகும்.

இதற்கிடையே, பிரதமர் மோடி மசோதா நிறைவேற்றம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ``இந்திய தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு இன்று ஒரு முக்கிய நாள். நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி. மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி-க்களுக்கும் நன்றி. இந்த மசோதா பல ஆண்டுகளாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பலரின் துன்பத்தைத் தணிக்கும்" எனக் கூறியுள்ளார்.

`குடியுரிமை மசோதாவும் நடைபாதையில் வசிப்பவர்களும்...!' - ஜவாஹிருல்லா எழுப்பும் கேள்வி

அதேபோல் அமித் ஷாவும் ட்வீட் செய்துள்ளார். அதில், ``குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதால், கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கனவுகள் இன்று நனவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்த இந்த மசோதாவுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.