Published:Updated:

`கிழித்தெறியப்பட்ட நகல்; ஆதரவு 311!’- மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது குடியுரிமை மசோதா

குடியிரிமை மசோதா விவாதத்தில் அமித் ஷா
குடியிரிமை மசோதா விவாதத்தில் அமித் ஷா

காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் கேரளாவில் அவர்கள் முஸ்லிம் லீக் கட்சியுடனும் மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடனும் கூட்டணி வைத்துள்ளார்கள்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று இரவு நிறைவேறியது. நேற்று நாள் முழுவதும் மக்களவையில் இந்தச் சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.

அமித் ஷா
அமித் ஷா

இந்தச் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``1991 -ம் ஆண்டில் இந்தியாவில் இருந்த இந்துகளின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 84 சதவிகிதம். அதுவே 2011 -ல் 79 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. 1991 -ம் ஆண்டு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 9.8 சதவிகிதம். தற்போது அது 14.23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் மதரீதியாக எந்தப் பாகுபாடும் அரசிடம் இருந்ததில்லை. தற்போதும் இல்லை.. இனியும் இருக்காது. இந்தச் சட்ட திருத்த மசோதா எந்த மதத்துக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது கிடையாது.

காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் கேரளாவில் அவர்கள் முஸ்லிம் லீக் கட்சியுடனும் மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடனும் கூட்டணி வைத்துள்ளார்கள். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அகதிகளுக்கும் சட்ட விரோதமாக ஊடுருவி வருபவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கானது. அங்கு வாழும் மக்கள் நமது மக்கள். தற்போது கூட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அவர்களுக்கு என 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றார்.

ஓவைசி
ஓவைசி

இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது மக்களவை உறுப்பினர் ஓவைசி, ``இந்த மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. சீனாவால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் இந்தப் பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை. இந்தச் சட்டம் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்கும். இது ஹிட்லரின் சட்டத்தை விட மோசமானது” என விமர்சித்தார். அதோடு மசோதாவின் நகலையும் மக்களவையிலே கிழித்தெறிந்தார். இதனால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதேபோன்று குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கை அகதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என மக்களவையில் இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய சிவசேனா எம்.பி விநாயக் ரவுத் தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தானின் பெயரை இதில் சேர்த்தது ஏன் எனப் புரியவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டிருந்தால், இலங்கை அகதிகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும், இந்த மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டால் நல்லது என்றார்.

மக்களவை வாக்கெடுப்பு
மக்களவை வாக்கெடுப்பு

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தின் முடிவில், நள்ளிரவில் மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. இது மசோதாவுக்கு ஆதரவாக 311 பேரும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 80 பேரும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

அடுத்த கட்டுரைக்கு