புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் முதல்வராக இருக்கும் ரங்கசாமியை காங்கிரஸும் தி.மு.க-வும் விமர்சனம் செய்யும்போதெல்லாம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க., ரங்கசாமிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கும். குறிப்பாக, அந்தக் கட்சியின் கிழக்கு மாநிலச் செயலாளரும், முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவருமான அன்பழகன் (எடப்பாடி அணி), உடனே செய்தியாளர் சந்திப்பை நடத்தி காங்கிரஸையும் தி.மு.க-வையும் வறுத்தெடுத்துவிடுவார். சமீபகாலமாக பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அரசு உயரதிகாரிகள் ஒத்துழைக்காததால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும், கோப்புகள் தேங்குவதால் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் ரங்கசாமி. அவரின் விரக்தி பேச்சு, புதுச்சேரி அரசியலில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அ.தி.மு.க-வின் கிழக்கு மாநில துணைச் செயலாளர் வையாபுரி மணிகண்டன், ``மாநில அந்தஸ்துக்காக முதல்வர் ரங்கசாமி இதுவரை ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டதில்லை. எப்போதெல்லாம் அவருக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போது மட்டும் மாநில அந்தஸ்து பிரச்னையைக் கையில் எடுத்துக்கொள்கிறார். மாநில அந்தஸ்தைக் காரணம் காட்டி பொதுமக்களையும், அரசியல் கட்சிகளையும் போராட்டம் நடத்துவதற்குத் தூண்டுகிறார். புதுச்சேரி குட்டிச்சுவரானதற்குக் காரணமே முதல்வர் ரங்கசாமிதான். மாநில அந்தஸ்து கேட்டு இதுவரை ஒருநாள்கூட அவர் டெல்லிக்குச் சென்றதில்லை. கேட்டால்தானே கிடைக்கும்... அதிகாரம் இல்லை என்றும், மாநில அந்தஸ்து வேண்டும் என்றும் கேட்கும் முதலமைச்சர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தைப் பிரித்தளிக்கத் தயாரா?
வேஷம் போடும் முதலமைச்சரை யாரும் நம்ப வேண்டாம். தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் நாடகம் நடத்தினால் அவர் டெபாசிட் இழக்க நேரிடும். ஆட்சி செய்ய முடியவில்லையென்றால் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும். அவருக்கு பதிலாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வேறு ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. ஆனால், அதைவைத்து யாரும் நாடகம் நடத்த வேண்டாம்” என்றார். முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகக் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-விடமிருந்தே எழுந்த இந்த எதிர்ப்புக் குரல், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து அவசர அவசரமாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்திய அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன், “மாநில அந்தஸ்து பற்றி பேசிய முதலமைச்சர் ரங்கசாமியை அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், அவருக்கு பதிலாக வேறு முதல்வரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். கூட்டணி குறித்தும், முதலமைச்சர் மாற்றம் குறித்தும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் முடிவே இறுதியான முடிவாகும். மற்றவர்களுக்குக் கூட்டணி குறித்தோ, முதலமைச்சர் மாற்றம் குறித்தோ பேசும் உரிமை இல்லை. வையாபுரி மணிகண்டனின் கருத்தை அ.தி.மு.க-வின் கருத்தாக ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. அது அவரது சொந்தக் கருத்து. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கருத்துகளைச் சொல்வது கூட்டணியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.
மேலும், எதிர்க்க்கட்சிகளின் அணிக்கு வலுசேர்க்கும் வகையில் அமையும். சொல்லக்கூடிய கருத்துகள் கட்சித் தலைமையின் கருத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். முதலமைச்சரையே மாற்ற வேண்டும் என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது சரியானது அல்ல” என்றார் காட்டமாக. அதையடுத்து அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகனுக்கு, துணைச் செயலாளர் வையாபுரி மணிகண்டன் எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, கண்ணின் இமைபோல முதலமைச்சர் ரங்கசாமியைப் பாதுகாத்து, பிரகாசமாக ஜொலிக்கவைக்கிறீர்களா... 2011-ல் தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமி அ.தி.மு.க தயவால் வெற்றிபெற்றார். வாக்களித்த மையின் தடம் மறையும் முன்னரே ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து, தனித்து ஆட்சி அமைத்ததை மறந்துவிட்டீர்களா... 2021 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு ரங்கசாமி வரவில்லை.
அ.தி.மு.க போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணியாற்றாமல், நம்மை வீழ்த்துவதற்காகப் பணியாற்றினர். ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் செவிமடுத்தும் கேட்காமல் அலட்சியம் காட்டுகிறார். கூட்டணி ஆட்சி ஓராண்டு நிறைவு செய்தபோது அளித்த நன்றி விளம்பரத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, உங்கள் படத்தைக்கூட பிரசுரிக்கவில்லை. இதையெல்லாம் மறந்துவிட்டீர்களா... சட்டமன்றத் தேர்தல் முடிந்து 20 மாதங்களைக் கடந்த நிலையிலும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து குறைந்தபட்சம் நன்றிகூட தெரிவிக்காத ரங்கசாமிக்கு ஆதரவாக நாள்தோறும் அறிக்கைவிடுவதும், பேட்டிகள் அளிப்பதும் அன்பழகனின் சொந்தக் கருத்துதான். கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடும் கருத்துகளே புதுவை அ.தி.மு.க-வின் கருத்துகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.