Published:Updated:

செருப்புவீச்சு, கடத்தல் குற்றச்சாட்டு! - கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் களேபரம்

தள்ளு முள்ளு ( நா.ராஜமுருகன், ஈ.ஜெ.நந்தகுமார் )

கரூரில் நடைபெற்ற, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே தள்ளு முள்ளு, செருப்புவீச்சு, அ.தி.மு.க வேட்பாளர் கடத்தல் என 'பரபர' காட்சிகள் அரங்கேறின.

செருப்புவீச்சு, கடத்தல் குற்றச்சாட்டு! - கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் களேபரம்

கரூரில் நடைபெற்ற, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே தள்ளு முள்ளு, செருப்புவீச்சு, அ.தி.மு.க வேட்பாளர் கடத்தல் என 'பரபர' காட்சிகள் அரங்கேறின.

Published:Updated:
தள்ளு முள்ளு ( நா.ராஜமுருகன், ஈ.ஜெ.நந்தகுமார் )

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில், அ.தி.மு.க 9, தி.மு.க 3 இடங்களைக் கைப்பற்றின. அ.தி.மு.க-வைச் சேர்ந்த கண்ணதாசன் ஊராட்சிக்குழுத் தலைவராகவும், துணைத் தலைவராக தானேஷ் என்கிற முத்துக்குமாரும் பதவி வகித்துவந்தனர். இந்த நிலையில், கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். இதனால், தான் வகித்துவந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 3-லிருந்து 4-ஆக உயர்ந்தது. மேலும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள் இருவர், தி.மு.க-வில் இணைந்ததால், தி.மு.க-வின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்து பலம் சமநிலையை அடைந்தது. இதனால், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில், அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நா.ராஜமுருகன், ஈ.ஜெ.நந்தகுமார்

இதற்கிடையே, அ.தி.மு.க சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் துணைத் தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் இல்லாததால் ஏற்கெனவே ஐந்து முறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது கஸ்டடியில் வைத்திருந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ``தேர்தலை வீடியோ பதிவுடன் நடத்த வேண்டும். கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை மதியம் 2:30 மணி அளவில் நடத்தி தேர்தல் முடிவுகளை உரையிட்ட சீலில் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தனர். அதனால், இன்று ஆறாவது முறையாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அ.தி.மு.க., தி.மு.க என இரு கட்சிகளும் சமமாக இருந்ததால், பிரச்னை வெடிக்கலாம் எனத் தேர்தல் நடைபெற்ற கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். வேடசந்தூர் அருகேயுள்ள தாடிக்கொம்பு பகுதியில், அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிக என்பவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனத்தில் தேர்தலில் வாக்களிக்க வந்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர்களை வழிமறித்த மர்மநபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, திருவிக-வைக் கடத்தியதாக, எம்.விஜயபாஸ்கர் தரப்பு குற்றம்சாட்டியது. இது சம்பந்தமாக, வேடச்சந்தூர் டி.எஸ்.பி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். திருவிக-வின் மகனும், ஒன்றிய கவுன்சிலருமான தமிழ்செல்வன், தன்னுடைய தந்தை கடத்தப்பட்டதாகவும், அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தேர்தல் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எனப் பலதரப்பிடம் மனு கொடுத்தார். இதையறிந்த அ.தி.மு.க-வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிக அளவில் திரண்டனர்.

திருவிக கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
திருவிக கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன், ஈ.ஜெ.நந்தகுமார்

திருவிக கடத்தப்பட்டதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதேபோல், தி.மு.க-வைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், தேர்தல் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் சென்றபோது, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க-வினர் கோஷங்கள் எழுப்பினர். பதிலுக்கு தி.மு.க-வினரும் கோஷங்கள் எழுப்ப, இருதரப்பும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது, தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்தத் தள்ளு முள்ளுவில், இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவரை தாக்கிக்கொள்ள முயன்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர், அதைத் தடுத்து நிறுத்தியபோது, கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க தொண்டர்களுக்கு இடையே மாறி மாறி பாட்டில்வீச்சு, செருப்புவீச்சு, கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.

தள்ளு முள்ளு
தள்ளு முள்ளு
நா.ராஜமுருகன், ஈ.ஜெ.நந்தகுமார்

தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்த கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அந்தப் பகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவிவருகிறது. இதற்கிடையில், கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மறைமுகத் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் அலுவலகத்தில் முழு வீடியோ ஒளிப்பதிவுடன் மேற்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமான வீடியோ, யார் வென்றது உள்ளிட்ட தகவல்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவிருக்கின்றன. அதைத் தொடர்ந்து, 22-ம் தேதி கோர்ட் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 'திருவிக-வை யாரும் கடத்தவில்லை. தேர்தலை நிறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் இப்படி ஒரு கடத்தல் நாடகத்தை நடத்தினார்' என்று தி.மு.க தரப்பில் சொல்கிறார்கள். இதற்கிடையில், துணைத் தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றிவிட்டதாக, தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.