Published:Updated:

எடப்பாடிக்கு எதிராக முதல் வெடி... அடுத்தடுத்த திட்டங்களுடன் அமைச்சர் மாஃபா ரெடி!

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

ஆவடி மாநகராட்சியின் அலுவலகக் கட்டடத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கடிதப் போரை முதல்வருடன் தொடங்கியிருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஆவடி நகராட்சியாக இருந்தபோது, நகராட்சி அலுவலகக் கட்டடத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர் ஆவடி பெருநகராட்சியாக மாறிய பிறகு, காமராஜரின் பெயர் நீக்கப்பட்டு பெருநகராட்சி கட்டடம் என்று அழைக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியாக உருவெடுத்துள்ள ஆவடியின் அலுவலகக் கட்டடத்துக்கு, காமராஜரின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று நாடார் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அமைச்சர் வேலுமணியிடம் கோரிக்கை
அமைச்சர் வேலுமணியிடம் கோரிக்கை
`CAA விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோம்!' எடப்பாடி பழனிசாமி யோசனையும் மத்திய அரசின் முட்டுக்கட்டையும்

சமீபத்தில் தட்சிண மாற நாடார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``காமராஜரின் பெயரால் அழைக்கப்பட்டு வந்த ஆவடி நகராட்சியின் கட்டடம், தி.மு.க ஆட்சியில் பெயர் நீக்கப்பட்டு பெருநகராட்சி கட்டடம் என்று அழைக்கப்பட்டது. தற்போது 15-வது மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், மாநகராட்சி கட்டடம் என்றே அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே சூட்டப்பட்டிருந்த காமராஜர் பெயரை, அலுவலகக் கட்டடத்துக்கு சூட்ட வேண்டுமென எனது ஆவடி தொகுதி மக்கள் விரும்புகின்றனர். ஆகவே, இக்கோரிக்கைக்கு முதல்வர் ஆவண செய்ய வேண்டுமெனக் கோருகிறேன்” என்று கூறியுள்ளார்.

மாஃபா பாண்டியராஜனின் கடிதம்
மாஃபா பாண்டியராஜனின் கடிதம்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரான பிறகு, எவ்வளவோ கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மாஃபா பாண்டியராஜன் பேசியுள்ளார். ஆனால், காமராஜர் பெயர் சூட்டும் கோரிக்கை குறித்து பேசும்போது, ``இந்த ஒரு கட்டடத்துக்குப் பெயர் சூட்டினால், மற்ற மாநகராட்சி கட்டடத்துக்கும் தங்கள் விருப்பப்பட்ட பெயரைச் சூட்ட வேண்டுமென்று ஆளாளுக்குக் கிளம்பிவிடுவார்கள். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதில் அர்த்தமில்லை” என்று நாசுக்காக முதல்வர் சொல்லிவிட்டாராம். முதல்வர் மறுத்தும் மாஃபா பாண்டியராஜன் விடாப்பிடியாக நிற்பதற்குக் காரணம், இத்தனை ஆண்டுகளாக, தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கருதுவதன் வெளிப்பாடுதான் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், ``தே.மு.தி.க-வில் முக்கியத் தலைவராக வலம்வந்த மாஃபா பாண்டியராஜன், 2011 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றவர். விஜயகாந்த்துக்கும் ஜெயலலிதாவுக்கும் சட்டமன்றத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, 2013-ல் தே.மு.தி.க-விலிருந்து பிரிந்து அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரது விசுவாசம் காரணமாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியை மாஃபாவுக்கு ஒதுக்கிய ஜெயலலிதா, அவர் வெற்றிபெற்றவுடன் தனது அமைச்சரவையில் இணைத்து பள்ளிக்கல்வித்துறை பொறுப்பையும் அளித்தார்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
`அவர்கள் இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன்!’-டெல்லி கலவரத்தால் பா.ஜ.க-விலிருந்து விலகிய நடிகை

அமைச்சர்கள் புரோட்டோகாலின்படி 13-வது இடத்தில் இருந்த மாஃபா, இன்று 28-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது இறப்பில் சந்தேகம் எழுப்பி ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது சசிகலாவை எதிர்த்து தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு ஓ.பி.எஸ் பின்னால் சென்றவர் மாஃபா பாண்டியராஜன் மட்டும்தான். மற்ற அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. மீண்டும் அணிகள் இணைந்தபோது, பழையபடி பள்ளிக்கல்வித்துறை தனக்கு வழங்கப்படும் என மாஃபா பாண்டியராஜன் எதிர்பார்த்தார். ஆனால், அத்துறை செங்கோட்டையனிடமே பசையாக ஒட்டிக்கொண்டது.

`உரிய நேரத்தில் உங்களுக்கு மரியாதை அளிக்கப்படும்’ என்று தலைமை மாஃபாவை சமாதானப்படுத்தியது. கடந்த மூன்று வருடமாக அந்த உரிய நேரம் மட்டும் வரவே இல்லை. அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டு, அவர் வகித்த தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்குக் கொடுக்கப்பட்டதே மாஃபாவுக்கு பெரிய வருத்தம்தான். ``எனக்கு தமிழ் வளர்ச்சித்துறையை ஒதுக்கி பெயருக்கு அமைச்சராக்கிவிட்டு, ஏற்கெனவே வருவாய்த்துறையை வைத்திருக்கும் உதயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கீங்க. அந்த இலாகாவை எனக்குக் கொடுத்திருக்கலாமே?” என்று முதல்வரிடம் அப்போதே கொதித்தெழுந்தார் மாஃபா. ஆனால், தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அமைச்சரவையில் நாடாருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என நாடார் அமைப்புகளும் கொடிபிடித்தன. அதற்கும் எடப்பாடியார் மசியவில்லை. இந்தநிலையில்தான், ஆவடி மாநகராட்சி கட்டடத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டுமென்ற வெடியைக் கொளுத்தி வீசியுள்ளார் மாஃபா பாண்டியராஜன். இது வெறும் ஆரம்பம்தான். இவ்வளவு காலம் அமைதியாக இருந்தவர், தேர்தல் நேரத்தில் சரம் சரமாக வெடியை வீசுவதற்கும் மாஃபா தயாராகிவிட்டார்” என்றனர்.

மாஃபா வீசும் வெடி சத்தத்தைக் கிளப்புமா அல்லது தண்ணீர் ஊற்றி அணைக்கப்படுமா என்பது எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் முடிவில்தான் அமைந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு