Published:Updated:

`மா.செ.வுக்கு எதிராக போர்க்கொடி; 4 பேரின் மண்டை உடைப்பு!'- பெரம்பலூர் அ.தி.மு.க களேபரம்

அ.தி.மு.கவினர்
அ.தி.மு.கவினர்

`இது முழுக்க முழுக்க மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும் என்ற போட்டியால் நடந்த பிரச்னை.’

``பெரம்பலூர் அ.தி.மு.க மாவட்டச்செயலாளர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரையும் சரிவர மதிப்பதில்லை. அவரை மாற்ற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கியவர்கள் மீது மாவட்டச் செயலாளரின் அக்கா மகன் கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அ.தி.மு.க-வினர்
பெரம்பலூர் அ.தி.மு.க-வினர்

ரொம்பலூர் மாவட்டம் அ.தி.மு.க அவைத்தலைவர் நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த துரை. இவர் தன்னுடைய வயலில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, மீனவர் அணி செயலாளர் முருகேசன், சாதனாவாடி ஊராட்சி கழகச் செயலாளர் தங்கராசு ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாவட்டச் செயலாளரின் அக்கா மகன் கார்த்தி மற்றும் அவரின் நண்பர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் சிலருடன் காரில் வந்து உருட்டுக் கட்டையால் 4 பேரையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் துரை, முத்துசாமி, தங்கராசு ஆகியோரின் மண்டை உடைந்தது. அவர்கள் அனைவருக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் பெரம்பலூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் அ.தி.மு.க-வினர்
பெரம்பலூர் அ.தி.மு.க-வினர்

என்ன நடந்தது என்று அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``இது முழுக்க முழுக்க மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும் என்ற போட்டியால் நடந்த பிரச்னை. பெரம்பலூர் தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது. அதை மாற்றிக் காட்டியவர்தான் ஆர்.டி ராமச்சந்திரன். சிறப்பாகச் செயல்படக்கூடிய மனிதர். ஆனால், அவரிடம் பிடிக்காத விஷயம் என்னவென்றால் கட்சி நிர்வாகிகளைச் சரியாக மதிக்கமாட்டார். எடுத்தெறிந்து பேசுவார். கூட்டத்தில் இருக்கும்போதே எல்லோர் முன்பே கடுமையாகத் திட்டுவார். இதனால்தான் இவருக்கு எதிராகப் பல கோஷ்டி உருவாகியுள்ளது.

மருதராஜா
மருதராஜா

எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச்செயலாளர் ராஜராமனும் முன்னாள் எம்.பி மருதைராஜாவும் இவரை மாவட்டச்செயலாளர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அத்தோடு மருதைராஜா, ராஜாராமன் அவரது ஆதரவாளர்களுடன் கொஞ்சம் நாள்களுக்கு முன்பு அமைச்சர் வேலுமணியைச் சந்தித்து மாவட்டச் செயலாளரால் இந்த மாவட்டமே சீரழிந்துகொண்டிருக்கிறது என்றும் அவரை மாற்றிவிட்டு அவரது பதவியை தனக்கு வழங்குங்கள் என்று சொல்லி வந்திருக்கிறார்.

அ.தி.மு.க-வினர்
அ.தி.மு.க-வினர்

அத்தோடு மட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளரை நீக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக உள்ள நிர்வாகிகளிடம் கையொப்பம் பெற்று அதை முதல்வருக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தகவல் மாவட்ட செயலாளரின் அக்கா மகன் கார்த்திக்குத் தெரிந்ததும் அவர்களிடம் போனில் பேசியிருக்கிறார். இருவருக்கும் வார்த்தை முற்றி துரையின் கிராமத்துக்குச் சென்று அடித்து மண்டையை உடைத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க கோஷ்டி மோதல்தான்" என்று முடித்துக்கொண்டார்கள்

இதுகுறித்து மாவட்டச்செயலாளர் ஆர்.டி ராமச்சந்திரனிடம் பேசினோம். ``என்னைப் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று சில அமைச்சர்களை நாடியிருக்கிறார்கள். இதை நானும் கேள்விப்பட்டு அமைதியாக இருந்துவிட்டேன். அத்தோடு அவர்கள் எனக்கு எதிரானவர்களைத் திரட்டி கையொப்பம் பெற்றிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

பெரம்பலூர் அ.தி.மு.க மா.செ ராமச்சந்திரன்
பெரம்பலூர் அ.தி.மு.க மா.செ ராமச்சந்திரன்

என் அக்கா மகன் கார்த்திக்குத் தெரிந்ததும் அவன் போனில்,`எங்க மாமாவைத் தூக்க எதாவது ஒரு காரணம் சொல்லுங்கடான்’னு பேசியிருக்கிறான். எதிர் தரப்பினர் போதையில் இருந்திருக்கிறார்கள்போல. `முடிந்தால் எங்க ஊர்ல வந்து என்ன தொட்டுப் பாருங்கடா’ன்னும் பேசியிருக்கிறார்கள். கார்த்தியும் அங்கு போய் அடித்திருக்கிறான். அவ்வளவுதான். என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு