Published:Updated:

`இனியும் நான் பேசாமல் இருந்தால் சரிவராது!’ - கிரண் பேடிக்கு எதிராகக் கொந்தளித்த நாராயணசாமி

நாராயணசாமி
நாராயணசாமி

”முதலில் கொரோனா நிவாரண அரிசியை மக்களுக்கு வழங்கக் கூடாது என்று தடை போட்டார். தற்போது சி.பி.ஐ-க்கு பல புகார்களை அனுப்பி அரசின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்” என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகக் கொந்தளித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனியார் மதுக்கடை உரிமையாளர்கள், கள்ளச்சந்தையில் பன்மடங்கு விலையை உயர்த்தி மது விற்பனை செய்தது தொடர்பாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதையடுத்து அனைத்து மதுக்கடைகளிலும் ஸ்டாக் லிஸ்ட் எடுக்க உத்தரவிட்டார் கிரண் பேடி. அதையடுத்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 100 மதுக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்யப்பட்டதுடன், கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சி.பி.ஐ
சி.பி.ஐ

தொடர்ந்து கள்ளச்சந்தை மது விற்பனை தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று கிரண் பேடி கூறிய தகவலால், கலக்கத்தில் இருக்கின்றனர் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும்.

இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுவிட, புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறக்க முடியாத அளவுக்கு கிரண் பேடி தடையாக இருக்கிறார் என்று குமுறுகிறார்கள் மதுக்கடை உரிமையாளர்கள். 90% மதுக்கடைகள் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்குச் சொந்தமானது என்பதால் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று அவர்கள் முதல்வர் நாராயணசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

கிரண்பேடி
கிரண்பேடி

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை கலால்துறை மூலம் கிடைக்கும் வருவாயை முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய சூழலை நாம் உருவாக்க வேண்டும். பல மாநிலங்களில் மது மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியிலும் அதை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்து ஆலோசிப்போம். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி மாநில அரசின் செயல்பாடுகளில் தொடர்ந்து தலையிடுவது மட்டுமன்றி, மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

முதலில் கொரோனா நிவாரண அரிசியை மக்களுக்கு வழங்கக் கூடாது என்று தடை போட்டார். தற்போது சி.பி.ஐ-க்கு பல புகார்களை அனுப்பி அரசின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார். எங்கள் அரசுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட புகார்களை சி.பி.ஐ-க்கு அனுப்பியிருகிறார் கிரண் பேடி. தொடர்ந்து ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். மதுக்கடைகளை பொறுத்தவரையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதிகாரிகளை மிரட்டுவது, பொய்வழக்கு போடச் செய்வது, சி.பி.ஐ என்று சொல்லி மிரட்டுவது, சி.பி.ஐ-க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்யச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதெல்லாம் துணைநிலை ஆளுநருக்கு அழகல்ல.
முதல்வர் நாராயணசாமி

கொரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் மதுக்கடை உரிமையாளர்களின் கணக்குகளைக் கொண்டு வாருங்கள் என்று கேட்டிருக்கிறார். ஊரடங்கின்போது மதுவிற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ-யிடம் புகார் கொடுத்த கிரண் பேடியிடம்தான் முதலில் விசாரனை நடத்த வேண்டும். சி.பி.ஐ-யின் அமைச்சராக இருந்தவன் என்ற முறையில் எனக்கு சி.பி.ஐ-யின் நிர்வாகம் முழுமையாகத் தெரியும்.

அரசு அதிகாரிகளை மிரட்டுவதற்காகக் கலால்துறை பிரச்னையில் சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகப் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கும் கிரண் பேடி, பொதுமக்களும் சி.பி.ஐ-க்கு புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆளுநரின் வேலை இது கிடையாது. கலால்துறையின் உரிமம் பெற்ற மதுக்கடை உரிமையாளர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கலால்துறை நடவடிக்கை எடுக்கும். அதற்கும் கிரண் பேடிக்கும் என்ன சம்பந்தம்? சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது என்ற பொய்யான தகவலை மக்களுக்குக் கொடுத்திருக்கிறார் கிரண் பேடி. மதுக்கடை விவகாரத்தில் சி.பி.ஐ முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

கொரோனா தொற்றைத் தடுத்து நிறுத்தும் பணியில் இருக்கும் அதிகாரிகளை திசைதிருப்பி, 30 வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி அவர்களின் நேரத்தை வீணடித்து வருகிறார் கிரண் பேடி. மேலும், எங்கள் நிர்வாகத்தில் தலையிட்டு கொரோனா தடுப்புப் பணியை செய்யவிடாமல் தடுத்து வருவது கண்டனத்துக்குரியது. நாங்கள் மக்களுக்குப் பணி செய்ய இருக்கிறோம். ஆனால், கிரண் பேடி மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். மக்களுக்கான எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதைத் தடுத்து நிறுத்துவதுதான் கிரண் பேடியின் வேலை. இதுவரை அவரின் செயல்பாடுகள் குறித்து நான் பேசாமல்தான் இருந்தேன். ஆனால், எங்கள் அரசு மீது பொய் வழக்குகள் போட ஆரம்பித்த பிறகு நான் பேசாமல் இருந்தால் சரிவராது. தவறு செய்யும் அதிகாரிகளை எங்கள் அரசு காப்பாற்றாது.

ஆனால், தவறு செய்யாதவர்கள் மீது பொய் வழக்கு போட நினைத்தால், அவர்களைக் காப்பாற்ற எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். இதுதான் எங்கள் அரசின் கொள்கை. இதை கிரண்பேடி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய இணையமைச்சராக இருந்த நான் 23 ஆண்டுக்காலம் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவன். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் தற்போது 4 ஆண்டுகள் முதல்வராக இருக்கிறேன்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விடுதி விவகாரம்! - முட்டிக்கொள்ளும் கிரண் பேடி, நாராயணசாமி

அதிகாரிகளை மிரட்டுவது, பொய்வழக்கு போடச் செய்வது, சி.பி.ஐ என்று சொல்லி மிரட்டுவது, சி.பி.ஐக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்யச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதெல்லாம் துணைநிலை ஆளுநருக்கு அழகல்ல. அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் காவல்துறையின் பணியாளர் செய்யும் வேலையைப் போன்று இருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு