Published:Updated:

`மகளுக்காக மருத்துவ சீட் வாங்கினாரா கிரண் பேடி? -அமைச்சரின் குற்றச்சாட்டால் அதிர்ந்த ஆளுநர் மாளிகை

கிரண் பேடி
கிரண் பேடி

``விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவிட்டு, சிறப்பு வகுப்பில் பயணம் செய்ததாகக் கூறி அந்தப் பணத்தைப் பெற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்தவர் கிரண் பேடி”

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே அன்றாடம் நடைபெற்று வரும் அதிகார யுத்தம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடந்த 2017-ம் ஆண்டு, `புதுச்சேரியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தகுதியான மாணவர்களுக்கு வழங்கும் பணியை செய்து வரும் சென்டாக் அமைப்பில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றது’ என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்திய கிரண் பேடி, `ஆவணங்களை மறைப்பதற்குள் சி.பி.ஐ குழுவினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என்று கூற, பற்றி எரிந்தது புதுச்சேரி.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அடுத்த சில தினங்களில் புதுச்சேரி வந்த சி.பி.ஐ குழுவினர் சென்டாக் அலுவலகம், சுகாதாரத்துறை உள்ளிட்ட இடங்களை ஆய்வுகளால் துளைத்தெடுத்தனர். விளைவு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிக் கிருஷ்ணாராவும் கிரண் பேடியும் முட்டிக்கொண்டனர். அப்போது இருவருக்கும் ஆரம்பித்த `லடாய்’ தற்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ``கவர்னர் கிரண் பேடி மகசேச விருதின்போது பெற்ற நிதியை தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு அளிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அந்தத் தொண்டு நிறுவனத்துக்கு அந்தப் பணத்தை அனுப்பவில்லை. அதேபோல மிசோராம் மாநிலத்தில் தனது மகளுக்காக மருத்துவச் சீட்டை முறைகேடாக பெற்றார். அதன்மூலம் அந்த மாநிலத்தில் படித்த மாணவர்களின் உரிமையைப் பறித்தார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

மேலும், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவிட்டு, சிறப்பு வகுப்பில் பயணம் செய்ததாகக் கூறி அந்தப் பணத்தைப் பெற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளார். கடந்த 40 நாள்களாக ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் கிரண் பேடி. கவர்னராக பதவியேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு எவ்வளவு நிதியைப் பெற்றுத்தந்தார் என்று அவரால் கூற முடியுமா. எனது 31 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் 1 ரூபாய்கூட என் மீது முறைகேடு புகார் சொல்லப்பட்டதில்லை. எனது காரை விற்றுகூட மக்களுக்கு உதவி செய்திருக்கிறேன். என் மீது என்ன புகார் கூறினாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்றார் கொதிப்புடன்.

கவர்னராக பதவியேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு எவ்வளவு நிதியைப் பெற்றுத்தந்தார் என்று அவரால் கூற முடியுமா?
மல்லாடி கிருஷ்ணாராவ்

அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நம்மிடம் விளக்கமளித்த ஆளுநர் கிரண் பேடி, ``தவறாகச் சித்திரித்து, மக்களைத் தவறாக வழிநடத்தும் ஒருவருக்கு என்ன பதில் கூற முடியும். கடந்த காலங்களில் நடைபெற்ற பல முறைகேடுகளில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஒருவர் அவர். அவரின் ஒழுங்கற்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு என்னைத் தடையாக நினைக்கிறார். அந்த ஒழுங்கற்ற திட்டங்கள், நிறைய நிதித் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காரணத்தினால்தான் என் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நிர்வாகியான நான் பல நிதி ஒப்புதல்களுக்குப் பொறுப்பான முறையில் பதிலளித்திருக்கிறேன். இதுவரை பொறுப்புணர்வுடனும் கடமை உணர்ச்சியுடனும் என் பணியைச் சரியாக மேற்கொண்டு வருகிறேன். அவர் வழிக்குச் சென்று என்னால் அவருக்கு உதவ முடியாது” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு