Published:Updated:

சர்ச்சையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் முதல் செந்தில் பாலாஜி Vs ஜோதிமணி பிரச்னை வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

குண்டு குண்டான எழுத்தில் அழகாக எழுதிக்கொண்டு வந்து செய்திகளை நீட்டிய கழுகார், “எல்லாம் எழுத்துப் பயிற்சிதான்...” என்றார் பள்ளி மாணவனைப்போல!

“கோயமுத்தூர் உனக்கு... பொள்ளாச்சி எனக்கு...”
இது மகேந்திரனின் அரசியல் கணக்கு!

டாக்டர் மகேந்திரன் தி.மு.க-வில் இணைந்த பிறகு, கோவை நகரத்தை மையப்படுத்தி அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி என்ட்ரிக்குப் பிறகு, கோவையின் தி.மு.க அரசியல் அமைச்சரை மையப்படுத்தியே சுழல்கிறது. அமைச்சரின் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்ட மகேந்திரனும் இப்போதெல்லாம் கோவையைக் கண்டுகொள்வதில்லை; மாறாக பொள்ளாச்சியைச் சுற்றியே அரசியல் செய்துவருகிறார்.

மகேந்திரன்
மகேந்திரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே, ‘பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை நீண்டநாளாக இருக்கும் நிலையில், தற்போது தி.மு.க அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்துவருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை பொள்ளாச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டால், அங்கு கோலோச்சலாம் என்று அரசியல் கணக்கு போடுகிறாராம் மகேந்திரன்!

மத்திய அமைச்சருடன் வில்லங்கப் பிரமுகர் சந்திப்பு...
சர்ச்சையில் புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்!

போலி ஏடிஎம் அட்டைகளைத் தயாரித்து புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த சந்துருஜியை, கடந்த 2018-ம் ஆண்டு கைதுசெய்து சிறையில் தள்ளியது புதுச்சேரி போலீஸ். ஓராண்டுக்குள் ஜாமீனில் வெளியே வந்த சந்துருஜியை தமிழகப் பகுதியான தந்திராயன்குப்பத்தில் துணை நடிகைகள், பெண்களைவைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் கைதுசெய்தது விழுப்புரம் மாவட்ட காவல்துறை. இப்போதும் அவர் ஜாமீனில்தான் இருக்கிறார்.

சர்ச்சையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் முதல் செந்தில் பாலாஜி Vs ஜோதிமணி பிரச்னை வரை! -கழுகார் அப்டேட்ஸ்

இந்த சந்துருஜியைத்தான் சமீபத்தில் காலாப்பட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரமும், நெல்லித்தோப்பு பா.ஜ.க எம்.எல்.ஏ ரிச்சர்டு ஜான்குமாரும் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்திக்க வைத்திருக்கிறார்கள். அத்துடன் அந்தப் புகைப்படத்தையும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள். இதையடுத்து, “நல்லா இருக்கே இந்த ஃப்ரெண்ட்ஷிப்... இதெல்லாம் எங்க போய் முடியுமோ!” என்று நக்கலடிக்கிறார்கள் புதுச்சேரி எதிர்க்கட்சியினர்!

`பதவியே வேண்டாம்..!’
தெறித்து ஓடும் திருவண்ணாமலை அ.தி.மு.க நிர்வாகிகள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரமன்றத் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. அ.தி.மு.க தரப்பில், `நகரத்திலுள்ள 39 வார்டுகளுக்கு யாரையெல்லாம் நிற்கவைப்பது?’ என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, சூழ்நிலை சரியில்லை என்று காரணங்களை அடுக்கிப் பலரும் போட்டியிட மறுத்து நழுவியிருக்கிறார்கள்.

சர்ச்சையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் முதல் செந்தில் பாலாஜி Vs ஜோதிமணி பிரச்னை வரை! -கழுகார் அப்டேட்ஸ்

‘நகராட்சித் தலைவர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது?’ என்று பேச்சு எழுந்தபோது, நகரச் செயலாளர் ஜெ.செல்வத்தைக் கைகாட்டியிருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். ‘‘என் வார்டைப் பெண்களுக்கு ஒதுக்கிட்டாங்க’’ என்று அவரும் ஜகா வாங்க... ‘‘அப்படின்னா உங்க மனைவியை நிக்கவைங்க’ என்று கூட்டத்திலிருந்து குரல் எழுந்துள்ளது. இதைக் கேட்டு மேலும் ஜெர்க் ஆனவர், விறுவிறுவென நடையைக் கட்டிவிட்டாராம். பதவிக்காகச் சண்டையிட்ட நிலை மாறி, `பதவி வேண்டாம்’ என்று சண்டை போட்டுக்கொள்வதைப் பார்த்து “நம்ம கட்சி நிலைமை இப்படியாகிடுச்சே!” என்று நொந்துகொள்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்!

நீலகிரி ஆட்சியரின் வாய்மொழி உத்தரவு...
சாதகமாக்கிக்கொண்ட ஆளுங்கட்சி மர வியாபாரி!

நீலகிரியில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகப் பல இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. மரம் முறிந்து விழுந்ததில் குன்னூரில் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, மின் விநியோகமும் தடைப்பட்டது. இதனால், சாலையோரங்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தது.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

இதைச் சாதகமாக்கிக்கொண்ட கீழ்கோத்தகிரி ஆளுங்கட்சிப் பிரமுகரான மர வியாபாரி ஒருவர் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை நிலங்களில் இருக்கும் ஏராளமான மரங்களை வெட்டி டீ ஃபேக்டரிகளுக்கு அனுப்பியிருக்கிறார். இதை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால், “இதையெல்லாம் கேட்டதுக்குதான் பழைய கலெக்டரை மாத்துனாங்க...'' என்று நக்கலாகச் சொல்கிறாராம் அந்த ஆளுங்கட்சிப் புள்ளி.

செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் பிரச்னை ஏன்?

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ‘மத்திய அரசுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான முகாம்களை நடத்த, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் அனுமதி தர மறுக்கிறார்’ என்று கூறி தர்ணா போராட்டம் நடத்தினார். இது தொடர்பாக அவர் கலெக்டர்மீது முதன்மைச் செயலாளருக்குப் புகார் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், “செந்தில் பாலாஜிக்கும் அவருக்கும் இடையேயுள்ள ஈகோ பிரச்னையில், ஆட்சியருக்கு எதிராகப் பொங்குகிறார் ஜோதிமணி” என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜி, ஜோதிமணி
செந்தில் பாலாஜி, ஜோதிமணி
நா.ராஜமுருகன்

மேலும், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ மூலம் வழங்க ஜோதிமணி முயல... செந்தில் பாலாஜியோ வேறொரு நிறுவனம் மூலம் வழங்க நினைக்கிறார். இது மட்டுமல்ல... கரூர் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆறு மேம்பாலங்கள் கட்டும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முயன்றது யார் என்று அடையாளப்படுத்திக்கொள்வதில், இருவருக்கும் இடையில் ஈகோ பிரச்னை எழுந்தது. இதனால்தான், ஒற்றுமையாக வலம்வந்த ஜோதிமணிக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு, அதுவே இப்போது பகையாகிவிட்டது” என்கிறார்கள் அதிகாரிகள்.

அதிகாரியைக் காப்பாற்றுகிறாரா சேகர் பாபு?
அமைச்சர் சி.விகணேசன் ஆவேசம்...

சமீபத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது. வழக்கமாக துறைச் செயலர்கள், மருத்துவத்துறை இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் இந்த முறை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் கலந்துகொண்டார்.

சேகர் பாபு
சேகர் பாபு

கூட்டத்தில் பங்கேற்ற அயன்புரம் இ.எஸ்.ஐ மருத்துவமனைப் பொறுப்பு கண்காணிப்பாளர் வேங்கட மதுபிரசாத்தைப் பார்த்தவுடன் கடுப்பான அமைச்சர் தரப்பு, ‘‘உங்களை ரொம்ப நாளெல்லாம் சேகர் பாபுவால காப்பாத்த முடியாது’’ என்று ஆவேசம் காட்டியதாம். ‘‘வேங்கட மதுபிரசாத் மீது பல்வேறு புகார்கள் குவிந்தபோதும், அமைச்சர் சேகர் பாபுதான் இவர்மீது நடவடிக்கை பாயாதபடி பாதுகாத்துவருகிறார். அதுதான் அமைச்சர் கணேசனின் கோபத்துக்குக் காரணம்’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘என்னோட தளபதிதான் முக்கியம்!’’
அ.ம.மு.க நிர்வாகிகளை அலட்சியப்படுத்தினாரா தினகரன்?

அ.ம.மு.க-வின் தென்மண்டல அமைப்பாளராகவும், தேர்தல் பிரிவு செயலாளருமாக இருப்பவர் கடம்பூர் மாணிக்கராஜா. கயத்தார் ஊராட்சி ஒன்றியத் தலைவரான இவர், தினகரனுடனான நெருக்கத்தால் கட்சி நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை என்று பொருமுகிறார்கள் உள்ளூர் அ.ம.மு.க நிர்வாகிகள். ‘‘எங்களை மாணிக்கராஜா மதிப்பதுமில்லை; செயல்படவிடுவதுமில்லை.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இதையடுத்து, “ `கோவில்பட்டியில தினகரன் ஜெயிச்சாலும், நான்தான் எம்.எல்.ஏ-வா இருப்பேன்’ என்று அவர் பேசியதால்தான் உங்க சமுதாய மக்களே ஓட்டை மாத்திப்போட்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை மூணாவது முறையா ஜெயிக்கவெச்சுட்டாங்க. அவர் மேல நடவடிக்கை எடுங்க’’ என்று தினகரனைச் சந்தித்துப் புகார் வாசித்திருக்கிறார்கள் சில மாவட்டச் செயலாளர்கள். அதற்கு தினகரனோ, ‘‘என்னோட தளபதி மாணிக்கராஜாதான் எனக்கு முக்கியம்’’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மனம் நொந்த நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சிகளில் சேர்வதற்காக நேரம் பார்த்துவருகிறார்களாம்!

ஆக்கிரமித்த ஆளுங்கட்சிப் பிரமுகர்...
அலட்சிய காவல்துறை!

நாகப்பட்டினம் நகர அரசுத் தலைமை மருத்துவமனை எதிரில், அரசுக்குச் சொந்தமான காவலர்கள் குடியிருப்பு அமைந்திருக்கிறது. அதில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள தி.மு.க பிரமுகர் ஒருவரின் குடும்பம், ஹோட்டல் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு, அதில் கட்டுமானப் பொருள்களைக் குவித்துவருகிறது. அந்த தி.மு.க பிரமுகரின் உறவினர், தலைமையிடத்து வாரிசு ஒருவரின் பாதுகாவலராக இருக்கிறாராம்.

இதனால், காவல் நிலையத்துக்கு இது தொடர்பாக புகார் கொடுக்கச் செல்பவர்களிடம், “அரசாங்க இடத்தைத்தானே ஆக்கிரமிச்சிருக்காங்க... உங்க சொந்த இடத்தை இல்லையே... இதுல உங்களுக்கு என்ன பிரச்னை?’’ என்று போலீஸார் ஆஃப் செய்துவிடுகிறார்களாம்.