Published:Updated:

`கன்னத்தில் அடித்தார், பதிலுக்கு நானும் அறைந்தேன்' -பெண் எம்எல்ஏ, ஒ.செ மோதலால் வெளிவந்த பண விவகாரம்

எம்.எல்.ஏ பரமேஸ்வரி, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார்
எம்.எல்.ஏ பரமேஸ்வரி, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார்

பண விவகாரம் தொடர்பாகத் தன்னை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ-வை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் பதிலுக்குத் தாக்கிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க பெரும்தோல்வியைத் தழுவியது. இதனால் கட்சியின் செல்வாக்குமிக்க மாவட்டமான திருச்சியில் வாக்குவிகிதம் சரிந்தது குறித்து அ.தி.மு.க தலைமை ஆய்வு செய்து வருகிறது.

`கிராமத்தினர் வாக்குகளை ஏலம் எடுத்தாரா அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ-வின் கணவர்?' - திருச்சி சர்ச்சை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பரமேஸ்வரி. உள்ளாட்சித் தேர்தலில் இவரின் கணவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.

இவர்மீது, தேர்தலுக்காக வாக்குகளை மொத்தமாக ஏலத்துக்கு எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனாலும், தோல்வியடைந்த எம்.எல்.ஏ தரப்பு, வாக்குக்காக ஏலத்தில் கொடுத்த 14 லட்சத்தை திருப்பிக்கேட்டு பிரச்னை செய்வதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்தது.

இந்தநிலையில், கடந்த 17-ம்தேதி மாலை, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி குறித்து மண்ணச்சநல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதில், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ, பரமேஸ்வரியின் கணவர் முருகன், மண்ணச்சநல்லூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தோல்வி குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, `எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் செயல்பாடுகளே தோல்விக்கு முக்கிய காரணம்' எனக் குற்றச்சாட்டை முன்வைத்து சிலர் பேசியுள்ளனர்.

பரமேஸ்வரி மற்றும் முருகன்
பரமேஸ்வரி மற்றும் முருகன்

இதனால், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமாருக்கும் எம்.எல்.ஏ பரமேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, கோபமடைந்த எம்.எல்.ஏ பரமேஸ்வரி ஜெயக்குமாரின் கன்னத்தில் அறைந்ததாகவும், அதில் கடுப்பான ஜெயக்குமார் பதிலுக்கு எம்.எல்.ஏ-வை கன்னத்தில் அறைந்ததாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, அங்கிருந்த கட்சிக்காரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர்.

இந்நிலையில் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் நடந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் கொடுக்கச் சென்னை சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக, நீண்ட முயற்சிக்குப் பிறகு பேசிய ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் நம்மிடம், ``டெண்டர் விஷயமாக எம்.எல்.ஏ-விடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்திருந்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு எம்.எல்.ஏ எனக்கு எவ்வித பணியும் கொடுக்கவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தைக் கேட்டேன். ஆனால் அவரோ, கைநீட்டி வாங்கிய பணத்தை இல்லை என்றதுடன், கொடுத்த பணத்தைக் கேட்டதுக்காக எடுத்த எடுப்பிலேயே என் கன்னத்தில் அறைந்தார். செய்யாத தவற்றுக்கு அடிவாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க மனம் ஒப்பவில்லை அதனால் பதிலுக்கு அறைந்தேன். இப்படியிருக்க, தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அறைந்ததாக எம்.எல்.ஏ சித்திரிக்கப் பார்க்கிறார்" என்றார்.

 ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார்
ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார்

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக எம்.எல்.ஏ பரமேஸ்வரியைத் தொடர்புகொண்டோம். அவர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, அவரின் கணவர் முருகனிடம் கேட்டோம்.

"எங்களுக்கும் அவருக்கும் எவ்வித கொடுக்கல் வாங்கலும் கிடையாது. கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய என் மனைவியை, பெண் எம்.எல்.ஏ என்றும் பாராமல் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தாக்கினார். இப்போது, எம்.எல்.ஏ அறைந்தார். அதனால் பதிலுக்கு அறைந்தேன் எனப் பொய் சொல்கிறார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு