தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம், மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.
இதில், தி.மு.க வட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், மாநகர மேயர் ராமச்சந்திரன் என அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது, சேலம் மாநகராட்சி 43-வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் எழுந்து நின்று, `சமீபத்தில் தி.மு.க பிரமுகர் ஒருவர், குறிப்பிட்ட சமூகத்தைத் தாழ்த்திப் பேசும் ஆடியோ சர்ச்சையாகியிருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிமீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என்று பேச்சைத் தொடங்கினார்.

உடனே மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், `இது அதற்கான கூட்டம் இல்லை' என்று கூறவே, குணசேகரன் தரப்புக்கும், மத்திய மாவட்டச் செயலாளர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நாற்காலிகளைக்கொண்டு தாக்க முற்பட்டனர். அதையடுத்து தி.மு.க மூத்த நிர்வாகிகள், அங்கு செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை வெளியேற்றிவிட்டு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை தங்கள் போனிலிருந்து அழிக்குமாறு பத்திரிகையாளர்களை தி.மு.க-வினர் வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்துத் தகவலறிந்து, சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் நிலைய போலீஸார் கலைஞர் மாளிகை முன்பு குவிக்கப்பட்டனர். இதனால், சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.