Election bannerElection banner
Published:Updated:

``என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” - ஆய்வுக் கூட்டத்தில் கடுகடுத்த முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்குப் பிறகு புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு வந்து, கட்டுபாடுகளைக் கடுமையாக்கிக்கொள்ளட்டும் என்கிற மூடுக்கு அதிகாரிகள் தரப்பும் வந்துள்ளது.

தமிழகத்தில் கொரானா அலை அதிகரித்திருக்கும் நிலையில், அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுகடுத்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரானா இரண்டாம்கட்ட அலை உச்சகட்ட வேகத்தில் பரவிவருகிறது. அதேநேரம் மத்திய அரசோ, மாநில அரசுகள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இந்தநிலையில் கொரானா தாக்கம் தமிழகத்திலும் இதுவரை இல்லாத அளவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் வாக்கப்பதிவு முடிந்த பிறகு கொரானா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்துவருவது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

பழனிசாமி
பழனிசாமி

மே மாதம் 2-ம் தேதி அன்று தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதுவரை எடப்பாடி தலைமையிலான காபந்து அரசே தமிழக ஆட்சி அதிகாரத்தை நிர்வாகிக்கும் நிலையில் இருக்கிறது. ஏற்கெனவே கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதற்கட்டமாக கடந்த வாரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, அதிகாரிகள், முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் இரண்டாம்கட்டமாக ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் பலனாக முதற்கட்டமாக சில கட்டுப்பாடுகளை அரசுத் தரப்பில் அறிவித்தனர்.

ஆனால், கட்டுப்பாடுகளை அறிவித்த பிறகும் தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் முடிவெடுக்க முடியாமல் திணறினார்கள். முறையான அரசு இல்லாமல் எப்படி அறிவிப்புகளை வெளியிடுவது எனத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இரண்டாம் கட்டமாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை முதல்வரின் இல்லத்தில் நடந்தது.

தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை
தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை

இந்த ஆலோசனையில் முதல்வரோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் ஆலோசகர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர், முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில், ``தமிழகத்தில் கொரானா தொற்றுப் பரவல் வேகமாக இருப்பதால், அவசரமான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. குறிப்பாக, சில கட்டுப்பாடுகளை நாம் கடுமையாக்க வேண்டும். அதற்கு உங்களது ஒத்துழைப்பும் வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அதிகாரியும்ம் தங்கள் துறைரீதியாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து முதல்வரிடம் விளக்கியிருக்கிறார்கள். அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்வர், ``இப்போது நான் என்ன செய்ய முடியும்... நான் காபந்து அரசின் முதல்வர்தான். தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக வருவது போன்று இல்லை. இப்போது நான் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனால் ஏற்படப்போகும் பலன் என்னவாக இருக்கும்? கடந்த முறை இந்த அரசு செய்த திட்டங்களையே மக்கள் நினைத்துப் பார்த்து வாக்களித்தார்களா என்று தெரியவில்லை“ என்று கொஞ்சம் காட்டமாகப் பேசியிருக்கிறார். மேலும், ``தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்” என்று ஒருகட்டத்தில் முதல்வர் சொல்ல, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரானா தடுப்பூசி
கொரானா தடுப்பூசி

அதிகாரிகள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதே, முதல்வர் ``எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் மருத்துவமனைக்கு செக்கப் போக வேண்டும். நீங்கள் சொன்ன கருத்துகளைக் கேட்டுக்கொண்டேன். நீங்களே ஒரு முடிவெடுங்கள்” என்று சொல்லிவிட்டு, கூட்டத்தை அவசரமாக முடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

இதனால், கட்டுப்பாடுகளை எப்படி விதிப்பது என்று விழித்த அதிகாரிகள் ஒருவழியாக சில கட்டுப்பாடுகளை மட்டும் கொண்டுவர முடிவெடுத்து அதைச் செய்தி அறிக்கையாகத் தயார் செய்துள்ளனர். அந்த விவரங்களையும் முதல்வர் முகாம் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டனர் அதிகாரிகள். தேர்தலுக்குப் பிறகு புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு வந்து, கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிக்கொள்ளட்டும் என்கிற மூடுக்கு அதிகாரிகள் தரப்பு வந்துள்ளது.

முதல்வரின் வீட்டில் நடந்த இந்த மீட்டிங் விவகாரம் இப்போது வெளியே கசிய ஆரம்பித்திருப்பதால், ``முதல்வரே தேர்தல் முடிவின் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறாரோ” என்கிற அச்சம் அ.தி.மு.க-வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு